பூதம்புல்லனார்
பூதம்புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பூதம்புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சில ஏடுகளில் பூதம் புலவர் என்றும் குறிப்பிடப்பிடப்படுகிறார். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் இவரும் கள்ளிக்குடி பூதம் புல்லனாரும் ஒருவரே என்கிறார். உ.வே.சாமிநாதையர் இருவரும் இருவேறு புலவர்கள் எனக் கருதுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
பூதம்புல்லனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 190-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.பொருளீட்டச் சென்ற தலைவனை பிரிந்துள்ள தனது துயரைத் தோழிக்கு தலைவி உரைப்பதாக முல்லைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- முல்லை நிலத்து மகளிர் பொது தோற்றத்தில் நீண்ட கருங்கூந்தலையும் பரந்த தோள்களையும் இறுகிய வளையல்களையும் அணிந்திருப்பர்.
- தலைவனைப் பிரிந்துள்ள தலைவியின் நிலையானது தொழுவத்தில் பசுக்களுடன் தனித்து நிற்கும் காளையானது இடியுடன் மழை பெய்யும் இரவில் தன்னை நோக்கி வரும் பாம்பினைக் கண்டு அச்சமுற்று கழுத்தை அசைப்பதால் எழும் கழுத்து மணியோசையை ஒத்துள்ளதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடல் நடை
குறுந்தொகை - 190
- திணை: முல்லை
- கூற்று:பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
நெறியிரும் கதுப்பொடு பெருந்தோள் நீவிச்
செறிவளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி தோழி!பொறிவரி
வெஞ்சின அரவின் பைந்தலை துமிய
உரம்உரும் உரறும் அரைஇருள் நடுநாள்
நல்லேறு இயங்குதோறு இயம்பும்
பல்ஆன் தொழுவத்து ஒருமணிக் குரலே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2026, 13:47:14 IST