கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கள்ளிக்குடி என்ற ஊரில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 333-வது பாடலாக அமைந்துள்ளது. பொருளீட்டுவதற்காக பிரிந்து சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவிக்கு, பல்லியின் குரல் தலைவனின் வருகையை தெரிவிக்கும் என்ற தோழியின் கூற்றாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மழை இல்லாமல் வறட்சியினால் அழகிழந்து காய்ந்திருக்கும் மூங்கில் காட்டில் ஊறும் பருக்கை கற்களை அடித்தளமாக கொண்ட சிறிய சுனை நீரை உண்ணவரும் மென்முடிகள் கொண்ட யானையும் புலியும் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்.
- வீட்டின் உயர் மாடத்தில் இருக்கும் பல்லியின் குரல் ஒலியை நல்ல சகுனமாக நம்பினர்.
பாடல் நடை
நற்றிணை - 333
பாலை திணை: துறை: பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.
மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக்
கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப்
பரலவல் ஊறற் சிறுநீர் மருங்கில்
பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணுஞ்
சுரன்இறந்து அரிய என்னார் உரனழிந்து
உண்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும்
நீங்குக மாதோநின் அவலம் ஓங்குமிசை
உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Dec-2024, 07:15:52 IST