under review

நா. தர்மராஜன்

From Tamil Wiki
நா.தர்மராஜன்
நா. தர்மராஜன்

நா. தர்மராஜன் (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1935) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். ரஷ்ய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். பொதுவுடைமை இயக்கம் சார்ந்த தொழிற்சங்கவாதி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி

நா. தர்மராஜன், ஆகஸ்ட் 4, 1935-ல், சிவகங்கையில், நாராயண சேர்வை- கோமதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். நாராயண சேர்வை, சிவகங்கை மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அதே பள்ளியில் கல்வி பயின்றார் தர்மராஜன். காரைக்குடியில் இண்டர்மீடியட் படிப்பை நிறைவு செய்தார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தர்மராஜன், தான் பயின்ற சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில், 1957-ல், ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1993-ல் பணி ஓய்வு பெற்றார். 1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகள் சோவியத் ரஷ்யாவில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

நா. தர்மராஜன், தான் மொழியாக்கம் செய்த சில நூல்களுடன்.
நா. தர்மராஜன் புத்தகங்கள்
நா. தர்மராஜனின் புத்தகங்களில் சில

இலக்கிய வாழ்க்கை

நா. தர்மராஜனுக்கு பள்ளி நூலகம் மூலம் வெ. சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதி, தி. ஜ. ரங்கநாதன் போன்றோரது மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகமாகின. ஜேன் ஆஸ்டின், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஆர்.எல்.ஸ்டீவன்சன், ஜார்ஜ் பெர்னாட் ஷா போன்றோரது நூல்களை வாசித்ததன் மூலம் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உண்டானது. கல்லூரி ஆசிரியர்களும் பல நூல்களை அறிமுகப்படுத்தி இலக்கிய ஆர்வத்தைத் தூண்டினர்

நா. தர்மராஜனின் முதல் மொழியாக்கப் படைப்பு 1958-ல் ‘ஜனசக்தி’ இதழில் வெளியானது. ஐரிஷ் எழுத்தாளரான சீன் ஓ கேசியின் (Sean O’ Casey) ‘The Worker Blows the Bugle’ என்ற கதையை ’உழைப்பாளியின் சங்கநாதம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அதுமுதல் தொடந்து மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டார். ‘தாமரை' இதழ் இவரது ஆக்கங்களுக்கு இடமளித்தது. ஜீவா இவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார்.

1960-ல் சீனக்கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார். அதற்குக் கிடைத்த வரவேற்பு, ‘இத்தாலியக் கதைகள்’ எழுதத் தூண்டுகோலானது. இ. எம். பாஸ்டரின் (E.M. Forster) ‘பாஸேஜ் டு இண்டியா’ என்ற நூலை “இந்தியா: மர்மமும் சவாலும்” என்று மொழிபெயர்த்தார்.

ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள்

நா. தர்மராஜனின் மொழியாக்கத் திறனை அறிந்த சோவியத் அரசு இவரை மேலும் பல நூல்களை மொழிபெயர்த்துத் தர மாஸ்கோவிற்கு அழைத்தது. 1980 முதல் 1988 வரை எட்டு ஆண்டுகள் குடும்பத்துடன் அங்கு தங்கி ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்திற்காக (Progress Publications) மாக்ஸிம் கார்கி, புஷ்கின், டால்ஸ்டாய் போன்றோரது நூல்களைத் தமிழில் தந்தார். லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ தவிர்த்து அவரது அனைத்துப் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், சிறுதை, நாவல் போன்ற தலைப்புகளில் இவரது மொழியாக்கங்கள் அமைந்தன.

மாஸ்கோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி, முன்னேற்றப் பதிப்பகத்தில் பணிபுரிந்த தமிழறிந்த ரஷ்யர் சோபலோவ் போன்றோர் தர்மராஜனின் மொழிபெயர்ப்பைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

பிற மொழிபெயர்ப்புகள்

நா. தர்மராஜன், ரஷ்ய இலக்கியங்கள் மட்டுமல்லாமல், மேற்கத்திய இலக்கியங்கள் பலவற்றையும் தமிழில் தந்திருக்கிறார். லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’, ‘பாரிஸ் கம்யூன்’, ‘மகாத்மா - சில பார்வைகள்’, ‘கசாக்குகள்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. ஐன்ஸ்டீன், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், ஹோ-சி-மின், எம்.என்.ராய், பிடல் கேஸ்ட்ரோ போன்றோர் பற்றி இவர் எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாறுகள் பலராலும் வரவேற்கப்பட்டன. சக பேராசிரியராகப் பணியாற்றிய கவிஞர் மீரா, தர்மராஜனின் நூல்கள் பலவற்றை வெளியிட்டு ஊக்குவித்தர்.

நூற்றிருபதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நா. தர்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். விரிவான நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், சுருக்கமான நூல்களாகவும் தந்துள்ளார்.

அமைப்புப் பணிகள்

புதுக்கோட்டையில் மீ. சேதுராமனிடமிருந்து மார்க்ஸிய இலக்கிய அறிமுகம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நா.தர்மராஜன் மோட்டார் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி பணியாற்றினார். ப.ஜீவானந்தம், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்துகொண்டபோது அவர்களைச் சந்தித்த தர்மராஜன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அமைப்பை உருவாக்குவதில் உடனிருந்தார். கலை இலக்கியப்பெருமன்றத்தின் சிவகங்கை கிளையை உருவாக்கி செயல்பட்டார்.1965-ல் பொள்ளாச்சியில் நடந்த கலை இலக்கியப் பெருமன்ற 3-ம் மாநாட்டில் தர்ம ராஜன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளரான நா.தர்மராஜன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் இருந்தபோது, சக ஆசிரியர்களது உரிமைகளுக்காகப் போராடினார். ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்காகப் பல போராட்டங்களை நடத்தினார். கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்றமடைவதற்குக் காரணமானார்.

பொறுப்புகள்

  • கல்லூரி மாணவர் தலைவர்.
  • மூட்டா (Muta) என அழைக்கப்படும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர்.
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்.
  • மதுரைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்.
  • மாஸ்கோ இந்தியர் சங்கத் தலைவர்.

விருதுகள்

  • கலை இலக்கியப் பெருமன்ற விருது - மைக்கேல் கே - சில குறிப்புகள் நூலுக்கு
  • தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது.
  • சாமிநாத சர்மா ட்ரஸ்ட் வழங்கிய வெ.சாமிநாத சர்மா விருது.
  • தமிழ்நாடு சங்க விருது வழங்கிய சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது.
  • நல்லி திசை எட்டும் வழங்கிய மொழிபெயர்ப்புக்கான ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது.
  • மொழி பெயர்ப்புச் செம்மல் விருது.
மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் - 80 - நூல்

ஆவணம்

நா.தர்மராஜனின் நேர்காணல்கள், அவருடைய நூல்களைப் பற்றி பல்வேறு இதழ்களில் வெளிவந்த திறனாய்வுகள் மற்றும் அவரைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று ‘மொழிபெயர்ப்புச் செம்மல் நா.தர்மராஜன் - 80’ என்ற தலைப்பில், அவரது எண்பதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, 2015-ல் வெளியானது.

இலக்கிய இடம்

நா.தர்மராஜன் தமிழில் ருஷ்ய இலக்கியங்களை மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானர். ரா.பூர்ணையா, பூ.சோமசுந்தரம் ஆகியோருடன் அவரும் இணைந்து தமிழின் அறிவியக்கத்திற்கு சோவியத் ருஷ்ய மொழியாக்கங்கள் வழியாக பெரும் பங்களிப்பாற்றியுள்ளனர். இடதுசாரி நூல்களையும் எழுதிய நா.தர்மராஜன் தமிழ் இடதுசாரிச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர்களில் ஒருவர்.

நா.தர்மராஜன் மொழிபெயர்ப்பைப் பற்றி ஜெயமோகன், “சோவியத் மொழிபெயர்ப்பாளர்களில் ஒப்புநோக்க நா.தர்மராஜனின் நடைதான் சிறந்தது எனலாம். முழுமையான அர்ப்பணிப்புடன் அறிவியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அந்தப்பணியிலேயே முழுமையைக் காணும் முந்தைய தலைமுறையின் வாழும் உதாரணங்களில் ஒன்று நா.தர்மராஜன்” என்று குறிப்பிட்டுள்ளார் [1] . "தமிழ்வாசகன் என்ற நிலையில் திரு. நா. தர்மராஜனின் பெயரை நான் சாகித்திய அகாதெமியினரின் மொழிபெயர்ப்பு விருதிற்குச் சிபாரிசு செய்கிறேன்" என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி பாராட்டினார்.

நூல்கள்

சிறார் இலக்கியம்
  • சந்திரன் மகளும் சூரியன் மகனும்
  • கடிகாரங்களைப் பற்றிச் சில செய்திகள்
  • மழலையர் பள்ளிக்குச் செல்வோம்
  • பலகோடி வருடங்களுக்கு முன்னர்
  • இன்ஸ்பெக்டர் வருகிறார்
  • கிரிஷ்காவும் விண்வெளி வீரனும்
  • வானத்தில் மனிதன்
  • கடலில் மிதக்கும் கலங்கள்
  • அடுப்பு முதல் அணுஉலை உரை
  • நான் எத்தொழிலைத் தேர்ந்தெடுப்பேன்?
  • பூமியின் மையத்துக்கு வீரப்பயணம்
  • ஜீராசிக் நாடு
சிறுகதைத் தொகுப்புகள்
  • இத்தாலியக்கதைகள்
  • பழங்காலத்துச் சீனக் கதைகள்
  • தென்னாப்பிரிக்கக் கதைகள்
  • புஷ்கின் சிறுகதைகள்
  • டால்ஸ்டாய் சிறுகதைகள்
  • தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகள்
  • செவஸ்தபோல் கதைகள்
நாவல்கள்
  • ஒரு குடும்பத்தின் கதை - (மூலம்: ஷெட்ரின்)
  • நிலவு வந்து பாடுமோ - (மூலம்: ஜான் ஸ்டீன் பெக்)
  • காப்டன் மகள் - (மூலம்: புஷ்கின்)
  • துப்ரோவ்ஸ்கி - (மூலம்: புஷ்கின்)
  • குல்சாரி - (மூலம்: புஷ்கின்)
  • அன்னைவயல் - (மூலம்: புஷ்கின்)
  • நீதிபதியின் மரணம் - (மூலம்: புஷ்கின்)
  • கடவுளுக்கு உண்மை தெரியும் - (மூலம்: புஷ்கின்)
  • கஸாக்குகள் - (மூலம்: டால்ஸ்டாய்)
  • கூலி (சுருக்கம்) - (மூலம்: முல்க்ராஜ் அனந்த்)
  • ஃபாண்டமரா - (மூலம்: இக்னேஷியஸ்)
  • இறைச்சிக்காடு - (மூலம்: அப்துல்சங்லேர்)
  • சோதனையில் சாதனை - (மூலம்: விண்டே)
  • அன்னாகரீனா - (மூலம்: லியோ டால்ஸ்டாய்)
  • காதலின் இசை
வாழ்க்கை வரலாறுகள்
  • ஐன்ஸ்டீன்
  • ஜவஹர்லால் நேரு
  • கார்ல் மார்க்ஸ்
  • ஹோ-சி-மின்
  • எம்.என். ராய்
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • அமெரிக்காவின் அம்பேத்கர்
  • என் வாழ்க்கை - கே.எம்.பனிக்கர்
  • என் வாழ்க்கை - பிடல் கேஸ்ட்ரோ
  • மைக்கேல் கே . சில குறிப்புகள்
வரலாற்று நூல்கள்
  • வரலாறு என்றால் என்ன?
  • ருஷ்ய வரலாற்றுக் கதைகள்
  • பாரீஸ் கம்யூன்
  • சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சி வீரர்கள்
  • பொலிவியாவில் புரட்சி
  • வெனிசுலேயாவின் புதிய பாதை
  • கேஸ்ட்ரோவின் சிந்தனைகள்
  • புரட்சி ஆய்வரங்கு
  • அசோக்மேத்தா
  • இராணுவமும் அரசியலும்
பொருளாதார நூல்கள்
  • அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை - கார்ல் மார்க்ஸ்
  • அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
  • மஞ்சள் பிசாசு
  • இந்தியப் பொருளாதாரம்
  • மார்க்ஸும் மூலதனமும்
  • குடும்பம் , தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்
அரசியல் தத்துவ நூல்கள்
  • மார்க்சிய லெனினியம் என்றால் என்ன
  • விஞ்ஞானக் கம்யூனிசம் என்றால் என்ன?
  • வர்க்கப் போராட்டம் என்றால் என்ன ?
  • அரசு என்றால் என்ன?
  • வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன ?
  • கம்யூனிஸ்ட் அறிக்கை எப்படி தோன்றியது?
  • நேரு: போராட்டக் காலச் சிந்தனைகள்
  • காக்கி உடையும் காவிக் கொடியும்
  • தெலுங்கானா போராட்டம்
  • ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை
  • லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்
  • கம்யூனிஸ்ட் சமூகம்
  • பாட்டாளி வர்க்க சர்வ தேசியம்
  • அராஜகவாதமும் அராஜகவாத சின்டிகலிசமும்
  • இயக்கவியல் பொருள் முதல் வாதம்
  • சோஷலிஸ்ட் புரட்சி
  • மார்க்ஸ் பிறந்தார்
  • உலக சோஷலிஸ்ட் அமைப்பு
  • புரட்சி பற்றி லெனின் தத்துவம்
  • வர்க்கங்கள்
பிற கட்டுரை நூல்கள்
  • இந்தியா: மர்மமும் சவாலும் (மூலம்: இ. எம். பாஸ்டர்)
  • பாரிஸ் கம்யூன் - (மூலம்: லியோ டால்ஸ்டாய்)
  • மகாத்மா - சில பார்வைகள் - (மூலம்: லியோ டால்ஸ்டாய்)
  • இந்தியாவில் பெண்கள் இயக்கம்
  • அடுப்பு முதல் அணு உலை வரை
  • காக்கி உடையும் காவிக் கொடியும்
  • ஃபார்ஸ்டர் கட்டுரைகள்
  • மக்தூம், கிஷன்சந்தர், ராகுல்ஜி
  • தஸ்தயேவ்ஸ்கியும் டால்ஸ்டாயும்
  • மார்க்சியநோக்கில் ஷேக்ஸ்பியர்
  • சமூகமும் இயற்கையும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page