நல்லிறையனார்
நல்லிறையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நல்லிறையனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை பாடிய இறையனாரிலிருந்து வேறுபட்டவர்.
இலக்கிய வாழ்க்கை
நல்லிறையனார் பாடிய பாடல் புறநானூறில் 393-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனின் கொடைவன்மையை பாடி பொருள் வேண்டி நிற்கும் பாணனின் குரலாக பாடாண் திணையில் கடைநிலை துறையில் அமைந்த பாடலை பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பாணனின் நிலை: குடியை விட்டு அகன்று பொருள்தேடி வருந்தும் நிலையை அறியாத மனைவி துன்பத்தால் வாடுகிறாள். கைகள் ஈரமாகும்படி வயிறார உணவுண்டு பலநாட்கள் ஆகிறது. சுற்றத்தாரும் நானும் பல இடங்களில் பாடி இரந்தும் பொருளில்லாமல் வாடுகிறோம்.
- குளமுற்றத்துச் துள்ளிய கிள்ளி வளவனின் கொடை சிறப்பு: கோடைக்காலத்தில் வாடிய போதிலும் வற்றாத நீர்வளம் சுரக்கும் காவிரியின் வள்ளல் தன்மையை ஒத்தவன். பொருள் தேடி வரும் இரவலர்க்கு கொழுப்புமிக்க நல் இறைச்சி உணவும் கலிங்க பட்டால் செய்யப்பட்ட உயர்தர ஆடைகளும் வேண்டிய அளவு கைப்பொருளும் கொடுக்கும் பெரும் சிறப்புடையவன்.
- உவமைகள்: பாணர்களுக்கு கொடுக்கப்படும் உணவிலிருந்து வழியும் கொழுப்பானது வீடு முழுக்க நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் அறுவடை செய்யப்பட்ட பருத்தி பஞ்சினை ஒத்துள்ளது. பாணர்களின் ஆடையானது வறுமையால் நைந்து கிழிந்துள்ளது பார்ப்பதற்கு பாம்புக்குட்டிகளின் பிளந்த நாக்கினை போல் உள்ளது. பாணர்கள் பெறும் கலிங்கப்பட்டால் செய்யப்பெற்ற புத்தாடை, அரும்பு விரிந்த பகன்றை மலரை போல விரிந்துள்ளது.
பாடல் நடை
புறநானூறு - 393
- பாடாண் திணை துறை: கடைநிலை
......................................
வள்ளன் மையின்எம் வரைவோர் யாரென
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
கூர்ந்தஎவ் வம்விடக் கொழுநிணம் கிழிப்பக்
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் இடைநிறைந் தன்ன
வெண்நிண மூரி அருள, நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
கேடின்று நல்குமதி பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
கோடை யாயினும் கோடா ஒழுக்கத்துக்
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
.........................................
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- புறநானூறு - 393:Puram400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:12:08 IST