under review

நரிவெரூஉத்தலையார்

From Tamil Wiki

நரிவெரூஉத்தலையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் குறுந்தொகை மற்றும் புறநானூறில் முறையே இரண்டு பாடல்கள் இவர் பாடியவை.

வாழ்க்கை குறிப்பு

நரிவெரூஉத்தலையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெரும்சேரலிரும்பொறையைக் கண்டபோது தனது உடற்குறைபாடு(நரியும் வெரூம்படி தலையமைந்தவர்) நீங்கி நல்லுடலைப் பெற்றார். எனவே அதனை சிறப்பித்து சொல்வதற்காக நரியும் வெரூம்படி தலையமைந்தவர் என்ற கருத்தில் 'நரிவெரூஉத்தலையார்' என பெயர் பெற்றிருப்பார் என்று கருதப்படுகிறது. தனது பாடல் ஒன்றில் 'நரிவெரூஉத்தலை' என்ற சொல் பயின்று வரும்படி பாடியதால் இப்பெயர் பெற்றிருப்பார் என்று மொ. அ. துரையரங்க சாமி கருதுகிறார். 'நரிவெரூஉத்தலை' என்ற ஊரச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

நரிவெரூஉத்தலையார் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையிலும்( 5, 236) புறநானூறிலும்( 5, 195) இடம்பெற்றுள்ளன. குறுந்தொகையின் இருபாடல்களும் நெய்தல் திணையில் அமைந்துள்ளன. குறுந்தொகை 5-ம் பாடல் தலைவனைப் பிரிந்த தன் துயரைத் தலைவி தோழிக்குஉரைப்பதாகவும் 236-ம் பாடல் திருமணத்திற்காகப் பொருளீட்டச் செல்லும் தலைவனிடம் அவன் பிரிந்தால் தலைவி நலம் கெடுவாள் என்று தோழி கூறுவதாகவும் அமைந்துள்ளன. புறநானூறு 5-ம் பாடல் பாடாண் திணையிலும் 195 -ம் பாடல் பொதுவியல் திணையிலும் அமைந்துள்ளது. இருபாடல்களிலும் மன்னர்களுக்கான அறநெறிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. புறநானூறு 5-ம் பாடல் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெரும்சேரலிரும்பொறையின் அவையில் பாடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 5, 236
  • கடற்கரை நிலமான நெய்தலில் கழிமுகக் காட்டில் புன்னை மரங்கள் வளர்ந்து காணப்படும். புன்னை மரத்தில் நாரைகள் கூடுகட்டி தங்கி வாழும். புன்னை மர நிழலில் வளரும் புதர்களில் குருகு பறவை வசிக்கும். கடல் அலைத்துளிகளில் புன்னை மலர்களில் காற்றில் வந்து படியும்.
  • திருமணத்திற்காக பொருள் தேடி செல்வதற்காகக் கூட காதல் கொண்ட மகளிர் தமக்குரிய ஆடவரைப் பிரிய விரும்பாத உளநிலை கொண்டிருந்தனர் என்று அறிய முடிகிறது.
  • உவமை: தலைவியின் கண்ணிமைகள் தாமரை இதழ்களை போல இருந்தன என்று உவமை கூறப்பட்டது.
புறநானூறு 5, 195
  • அன்பும் அருளும் நீங்கி பாவ செயல்களை செய்பவர்களுடன் சேராது அரசன் நாட்டினை தன் குழந்தையை போல் பேணி காக்க வேண்டும்.
  • பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருத்தலே ஒரு உயர் பண்பு. வாழும் காலத்தில் பிறருக்கு நன்மை செய்க. இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருத்தல் வேண்டும்.
  • சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெரும்சேரலிரும்பொறையின் நாட்டு வளம் எருமை போல் கருமையாக இருக்கும் மலைப்பாறை குன்றுகளுக்கு இடையில் பசுக்கூட்டத்தை போல் தன் யானைப்படையை மேய்ச்சலுக்கு அனுப்பும் காட்சியை கூறி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
  • பிறருக்கு நன்மை செய்யாது வீணே தான் மட்டும் வாழும் வயோதிகர்களின் நரை முடி கயல் மீனின் முள்ளை ஒத்துள்ளது என்று பழித்து நகைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

பாடல் நடை

குறுந்தொகை - 5

  • திணை: நெய்தல்
  • கூற்று: பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே.

புறநானூறு - 5

  • திணை: பாடாண் திணை
  • துறை: செவியறிவுறூஉ

எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jan-2026, 11:14:57 IST