த. கோவேந்தன்
த. கோவேந்தன் (புலவர் கோவேந்தன்; புலவர் த. கோவேந்தன்; கோவிந்தசாமி; காவேரிக் கவிராயர்) (ஜூன் 21, 1932 - டிசம்பர் 08, 2004) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கோவிந்தசாமி என்னும் இயற்பெயர் கொண்ட புலவர் த. கோவேந்தன், ஜூன் 21, 1932 அன்று, வேலூர் மாவட்டம் சாத்தூரில், வே.மு. தங்கவேல் - குயிலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதிக் கல்வி கற்றார். மதுரை தமிழ்ச் சங்கத்தேர்வு எழுதிப் புலவராகத் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றார்.
தனி வாழ்க்கை
கோவேந்தன் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சுதந்திரப் படைப்பாளியாக இயங்கினார். மணமானவர். மகன்களில் ஒருவரான கோ. எழில்முத்து எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர்.
இலக்கிய வாழ்க்கை
கோவேந்தன், தன் தந்தையின் நண்பரான பாரதிதாசனின் படைப்புகளை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். 1947-ல் இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். குயில் இதழ் கவிஞர்களுக்கு நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு, மூன்று முறை பரிசு பெற்றார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவராக இடம்பெற்றார். 'காவேரிக் கவிராயர்', 'சொல்லேருழவர்' போன்ற புனை பெயர்களில் எழுதினார். மரபு, புதுக்கவிதை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். ஒர் இலக்கம் குறட்பாக்கள் 5000 வரை எழுதினார்.
"கோவேந்தன் பாடிக் குவிக்கின்றான் நாளடைவில் 'பாவேந்தன்' ஆய்விடுவான் பார்" என்று பாரதிதாசனால் பாராட்டப்பட்டார். பாரதிதாசன் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து கோவேந்தன் எழுதியிருக்கும் 'பாவேந்தம்', 'பல கோணங்களில் பாரதிதாசன்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பாரதிதாசன் குயிலிலும் மற்ற இதழ்களிலும் எழுதிய பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனக் கோவேந்தன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
மொழிபெயர்ப்பு
கோவேந்தன், மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் மிக்கவர். தனது ஆங்கில ஆசிரியர் மூலமும் ம.லெ. தங்கப்பாவாலும் ஆங்கில இலக்கியங்கள் மீது ஆர்வமுற்றார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல கவிதைகளை, படைப்புகளை மொழிபெயர்த்தார். குறும்பா (Limerick), நகைப்பா (Parody), முதலான மேல் நாட்டு வடிவங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தேர்த்நெடுத்த நூறு சோவியத் கவிஞர்களைப் பற்றிக் கோவேந்தன் எழுதியிருக்கும் 'சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்' நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.
இதழியல்
கோவேந்தன் பள்ளியில் படிக்கும்போது 'தமிழணங்கு' என்ற கையெழுத்து இதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். 'கவிஞன்' என்ற கவிதைக்கான இதழைத் தொடங்கி நடத்தினார். 1957-1959 வரை, 'வானம்பாடி' என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்தினார்.
விருதுகள்
- பால பண்டிதர்
- தமிழ்ப்பா நிலவு
- கல்விக்களஞ்சியம்
- செந்தமிழ்ச் செல்வம்
- செந்தமிழ்ச்செல்வர்
- சோவியத்து நாடு நேரு பரிசு
- தமிழக அரசின் பாரதிதாசன் விருது
- கம்பன் கழக விருது
மதிப்பீடு
கோவேந்தன் கவிதை, மொழிபெயர்ப்பு என இரு தளங்களிலும் இயங்கினார். கவிதைகள் குறித்த இவரது ரஷ்ய மொழியாக்கங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக அறியப்படுகின்றன. வைணவம் சார்ந்து ஆங்கிலத்தில் கோவேந்தன் எழுதியிருக்கும் நூல்கள் அவரது பன்மொழிப்புலமையையும், கூர்ந்த அறிவையும் காட்டும். தமிழில் மரபு, புதுக்கவிதை என இரண்டு களங்களிலும் இயங்கிய கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக புலவர் த. கோவேந்தன் மதிப்பிடப்படுகிறார்.
மறைவு
- கோவேந்தன், டிசம்பர் 08, 2004 அன்று, தனது 72-ம் வயதில் காலமானார்.
நாட்டுடைமை
கோவேந்தனின் படைப்புகள் அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசால் 2011-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
ஆவணம்
கோவேந்தனின் நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
நூல்கள்
- அன்பு வெள்ளம்
- அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (குறிஞ்சி)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்)
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை)
- கல்விச் செல்வம்
- குறும்பா
- சித்தர்களின் பூசா விதிகள்
- சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்
- செந்தமிழ்ப் பெட்டகம் (முதல் பாகம்)
- செந்தமிழ்ப் பெட்டகம் (இரண்டு பாகம்)
- தாவோ ஆண் பெண் அன்புறவு
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
- பாப்பா முதல் பாட்டி வரை
- பாரதிதாசன் கதைப்பாடல்கள்
- புதியதோர் உலகு செய்வோம் - கவிதை
- மில்டனின் மாமல்லன் சிம்சோன்
- வருங்கால மானிட சமுதாயம்
- வெற்றிக்கு எட்டுவழிகள்
- வைகையும் வால்காவும்
- அமிழ்தின் ஊற்று
- ஆஸ்கார் ஒயில்டு சலோம்
- இக்பால் இலக்கியமும் வாழ்வும்
- இரவீந்திரநாத் தாகூர் எண்ணக் களஞ்சியம்
- உமர்கய்யாம் வாழ்வும் இலக்கியமும்
- ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்
- காளிதாசன் உவமைகள்
- சர்வ சமயச் சிந்தனைகள்
- சிந்தனைச் செம்மலர்கள்
- சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்
- சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்
- தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
- திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை - 1
- நற்றமிழில் நால் வேதம்
- பாரதத்தில் செழித்த வைணவம்
- பாரதிதாசன் தாலாட்டுகள்
- பேசும் ஓவியங்கள்
- மொழியைப்பற்றி
- விலங்குக் கதைகள்
- வெற்றிமேல் வெற்றிபெற...
- கவிஞனின் காதலி
- இருண்டவீட்டின் குடும்பவிளக்கு.
- ஒன்றே உலகம்
- அண்ணா வனப்பியம்
- காந்தி மொழிக் குறள்
- சிந்தனைச் செம்மலர்கள்
- சங்கப் புதையல்
- கம்பன் களஞ்சியம்
- ஒன்றே உலகம்
- பாவேந்தர் பாரதிதாசன் -தொகைநூல்
- தெய்வம் தெளிமின்
- தோழனைப் பாடுவேன்
- வைகையும் வால்காவும்
- சிவப்புக் குயில்கள்
- இக்பால் கவிதைகள்
- புதுநானூறு
- சோவியத்துக் கவிஞர்களும் கவிதைகளும்
- கார்க்கி கம்சுதோவ் வரை (சோவியத் இலக்கிய வரலாறு)
- இரசூல் முதல் கம்சுதோவ் கவிதைகள்
- கறுத்த மக்களின் உரத்த குரல்கள்
- அமெரிக்கக் கவிமலர்கள்
- கீட்சு - வாழ்வும் இலக்கியமும்
- ஷெல்லி - வாழ்வும் இலக்கியமும்
- மாமல்லன் சிம்சோன்
- எண்ணப்பறவைகள்
- நூறு மங்கையர்
- பெண்களைப் பற்றிய பொன்மொழிகள்
- திருமகள் தமிழ் கையகராதி
- வேர்த்து வொர்த்து
- வாழ்வும் இலக்கியமும்
- சைவமும் வைணவமும் (உரைநடை)
- சலோமி
- தாவோ
- கலீல் கிப்ரான் கவிதைகள்
- பெர்னாட்ஷா நாடகங்கள்
- நாகரிகத்தின் எதிர்காலம் (உரைநடை)
- 21-ம் நூற்றாண்டின் பண்பாட்டு வளர்ச்சி (உரைநடை)
- நெஞ்சோடு நெஞ்சம்
- உமர்கயாம் வாழ்வும் இலக்கியமும்
- ஆதாரங்களும் மேற்கோள்களும்
- சித்தர் பாடல்கள் (பதிப்பாசிரியர்)
- தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் (தொகுப்பு)
- வெற்றிக்குரிய எட்டுவழிகள்
மற்றும் பல
உசாத்துணை
- த. கோவேந்தன் நூல்கள்: தமிழ் இணைய மின்னூலகம்
- த. கோவேந்தன், கூட்டாஞ்சோறு தளம்: ஆர்வி
- இருபதாம் நூற்றாண்டின் 100 கவிஞர்கள், தொகுப்பாசிரியர், ப: முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:23:25 IST