திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் சைவ சித்தாந்தத்தின் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இந்த நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார். திருக்களிற்றுப்படியார் திருவுந்தியாரின் வழி நூலாகக் கொள்ளப்படுகிறது.
காலம்
மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் நூலில் திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார் இரு நூல்களின் கருத்துகள் ஆங்காங்கே எடுத்தாளப் பட்டிருப்பதால் இவையிரண்டும் சிவஞான போதத்திற்குக் காலத்தால் முற்பட்டன என்று கருதப்படுகின்றன. சிவஞானபோதத்தை இயற்றிய மெய்கண்டார் காலம் பொ.யு. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பதால் திருவுந்தி யார் திருக்களிற்றுப்படியார் ஆகிய இந்நூலாசிரியர்களின் காலம் பொ.யு. பதின்மூன்றாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது எனத் தெரிகிறது.
"திருவுந்தியாரின் வழிநூலாகிய திருக்களிற்றுப்படியாரில் திருத்தொண்டத்தொகை அடியார்களின் வரலாற்றுச் செய்திகள் எடுத்தாளப் பெறுதலால் திருக்களிற்றுப்படியார் இயற்றிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரும், அவருடைய ஆசிரியர், ஆளுடைய தேவநாயனாருக்குத் திருவுந்தியாரை உபதேசித்து அருளிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும், திருத்தொண்டர் புராண ஆசிரியர் சேக்கிழார் காலத்தை ஒட்டி பொ.யு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்" என வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்
திருக்களிற்றுப்படியாரை இயற்றியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்.
தோற்றம்
திருவுந்தியார் இயற்றிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்தபடி திருவியலூர் வந்தபோது ஆளுடைய தேவநாயனாரை கண்டு, அவருக்கு தீக்கை அளித்து திருவுந்தியாரை அவருக்கான உபதேசமாக இயற்றினார் என்று மு. அருணாசம் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். ஆளுடைய தேவ நாயனார் திருக்கடவூரில் ஓர் ஆட்டிடையரைக் கண்டு அவருடைய பக்குவத்தை அறிந்து தீக்கை அளித்து தன்னுடைய குருநாதரான உய்யவந்த தேவநாயனாரின் பெயரை அளித்தார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாருக்கு திருவுந்தியாரை ஞானோபதேசம் செய்தார்.
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் சிதம்பரத்தில் இருந்தபோது திருவுந்தியாருக்கு வழிநூலாக திருக்களிற்றுப்படியாரை இயற்றினார்.
பெயர்க்காரணம்
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தான் இயற்றிய நூலை தில்லையில் நடராஜர் பாதத்தில் வைத்து வணங்கச் சென்ற போது தாழ்ந்த வகுப்பினர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு, பஞ்சாக்கரப் படிகளில் கடைசிப் படியில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அப்படியே கடைசிப் படியில் வைக்கப்பட்ட நூலை பஞ்சாக்கரப் படியில் இருந்த இரு யானைச் சிற்பங்களும் உயிர்பெற்றெழுந்து, நூலைத் தம் தலையில் தாங்கிச் சென்று இறைவன் பாதத்தில் வைத்ததாகத் தொன்மம் கூறுகிறது. இதனால் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர் பெற்றது.
நூல் அமைப்பு
திருக்களிற்றுப்படியார் 100 வெண்பாக்களால் ஆனது. இந்நூல் திருவுந்தியாரின் வழிநூலாக எழுதப்பட்டது என்பது இதன் மூன்றாம் பாடலில் ஆசிரியர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனாரின் உபதேச பரம்பரையினையும் அவரது குரு திருவியலூர் ஆளுடைய தேவநாயனார் தமது குருவாகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருவுந்தியாரை மாணவராகிய தமக்கு உபதேசிக்க, குருமுகமாகக் கேட்ட அப்பொருளையே திருக்களிற்றுப்படியாராக விரித்துரைத்ததாகத் கூறுவது அறியவருகிறது.
திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. "பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது" என்று வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.
திருவுந்தியார் என்னும் முதல் நூல் குருவின் அருளால் தமக்குக் கிடைத்த வரலாற்றினைக் கூறும் முறையில் அமைந்தன திருக்களிற்றுப்படியாரிலுள்ள முதல் மூன்று பாடல்கள். திருக்களிற்றுப்படியார் குருவருள் நிலை, திருவருள் நிலை, கரணங்கள், வினைப்பயன்கள், நாயன்மார்கள் அருள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடு பொருட்களைக் கொண்டது. சைவசமய குரவர் நால்வர் வரலாற்று நிகழ்ச்சிகளும் சண்டீசர், கண்ணப்பர், அரிவாட்டாயர் முதலிய திருத்தொண்டத்தொகையடியார் சிலரின் வரலாற்றுநிகழ்ச்சிகளும் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இந்நூல்,தொடக்கத்தில் ஞானாசிரியரது பெருமையை எடுத்துக்கூறி, பின்பு சிவஞானிகளின் கருவி கரணங்கள் பதி கரணங்களாக விளங்குதல், அவர்கள் இயற்றிய அற்புதச்செயல்கள், சிவதன்மம் சிவயோகம் சிவஞானம் ஆகியவற்றின் விளக்கம், மெல்வினை வல்வினைகள், ஆதார நிராதார யோகங்கள், பெத்தம் முத்தி இரண்டிலும் ஆன்மாக்களை இறைவன் ஈடேற்றுதல், சிவஞானிகளின் பெருமை, சிவஞானிகள் திருவருளால் செய்த அற்புதச் செயல்கள், சிவபெருமானின் சிறப்பியல்பு, ஊனக்கண்ணால் இறைவனை அறியவொண்ணாமை, பாசநீக்கம், சிவப்பேறு, பரமுத்தி, அணைந்தோர் தன்மை, பல்வேறு சமய தத்துவ நுண்பொருள்கள், வேதாந்த மகாவாக்கியப் பொருள், அத்துவித(அத்வைத)உண்மை முதலியவைகளைக் கூறுகின்றது.
உரை
திருக்களிற்றுப்படியாருக்கு 16-ம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூலே திருக்களிற்றுப்படியார் உரை. இந்த உரையை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்த தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய உரை ஒன்று உண்டு. கா. சுப்பிரமணியப்பிள்ளை எழுதிய உரை 1978-ல் வெளிவந்தது.
வெள்ளைவாரணனார் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் இரு நூல்களும் இணைந்த உரையை 1982-ல் எழுதினார். திருவுந்தியார் பாடலையும் உரையையும் முதலில் தந்து அதனை அடியொற்றிய திருக்களிற்றுப்படியார் பாடல்களை அடுத்துத் தந்து உரை எழுதியுள்ளார். "முதல் நூலாகிய திருவுந்தியாரில் உள்ள சொற்றொடர்களை அவ்வாறே எடுத்தாண்டு, அவற்றின் பொருளை விளக்கும் முறையில் இயற்றப்பெற்றது திருக்களிற்றுப்படியார் எனத் தெரிதலால், திருவுந்தியாருக்கு உரை காணவிரும்புவோர் திருக்களிற்றுப்படியாரைத் திருவுந்தியாரின் பழைய உரையாகக் கொண்டே உரை காணுதல் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக எழுதப் பெறுவதே திருவுந்தியாரும் திருக்களிற்றுப்படியாரும் என்னும் இவ்வுரை விளக்கமாகும். " என்று உரையின் முன்னுரையில் வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.
பாடல் நடை
அம்மையப்பர்
அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக
அம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்
எல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்
அல்லார்போ னிற்பா ரவர்.
ஐம்புலனும் அசையாதே நில்
அன்றிவரு மைம்புலனு நீயு மசையாதே
நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ் - சென்று
கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்
ஒருமகடன் கேள்வ னுனக்கு.
மோகக் கொடியறுக்க முக்தி பழம் பழுக்கும்
முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினான்
மோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும்
ஏகக் கொடியெழுங்கா ணின்று.(93)
உசாத்துணை
- திருக்களிற்றுப்படியார்-சைவம்.ஆர்க்
- திருக்களிற்றுபடியார்- கா. சுப்ரமணியப்பிள்ளை உரை
- திருவுந்தியாட்-திருக்களிற்றுப்படியார் வெள்ளைவாரணனார் உரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Aug-2026, 19:48:39 IST