தபிதா பாபு
- பாபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாபு (பெயர் பட்டியல்)
தபிதா பாபு (செப்டம்பர் 8,1845- பிப்ரவரி 6, 1890) தமிழின் முதல் பெண்கள் இதழான அமிர்தவசனியின் ஆசிரியர். பெண்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர். கல்விக்கூடங்களுக்கு வந்து கல்வி கற்கத் தயங்கிய பெண்களுக்காக வீட்டுக்கே வந்து கல்வி போதிக்கும் 'ஜெனானா கற்பித்தல் முறை'யைப் பரவலாக்கினார். இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் உயர் கல்வி கற்க வழி செய்தார். விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
தபிதா பாபு, செப்டம்பர் 8, 1845-ல், சென்னையில் பிறந்தார். பிறந்த உடன் தாயை இழந்தார். தந்தை ஹோசியா பீட்டர், வேப்பேரி புனித பால் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். தபிதா பாபுவின் தாத்தா சிந்தியா பீட்டர் கல்நாயகம் சென்னையின் சிறந்த பாரம்பரிய மருத்துவர்களில் ஒருவராகவும், சுவிசேஷகராகவும் இருந்தார். புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார் தபிதா. அவர் உயர் கல்வி கற்றதும் லண்டன் மிஷன் போர்டிங் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்க குடும்பத்தார் விரும்பினார். ஆனால், தபிதா அதனை ஏற்கவில்லை. அதனால், சென்னை ராயபுரத்தில் அமெரிக்க மிஷனரியாக இருந்த ஐ.என். ஹர்ட்டிடம் மேற்கல்வி பயில அனுப்பப்பட்டார்.
ராயபுரத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் ஹவுஸில் தபிதாவின் இளமைப்பருவம் கழிந்தது. ஹர்ட் மூலமும் அவரது மகன் மூலமும் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வந்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர் மூலம் தமிழை முறையாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். தெலுங்கு மொழியையும் கற்றுக் கொண்டார்.
தனி வாழ்க்கை
ஹர்ட், பிராட்வேயில் உள்ள அமெரிக்கன் மிஷன் பிரஸ்ஸில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். அடிக்கடி தபிதாவை அங்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் அச்சகப் பணிகள் முழுமையும் கற்றுத் தேர்ந்தார் தபிதா. கல்வியை முடித்ததும், தபிதாவைத் தன்னுடன் அமெரிக்கா அழைத்துச் சென்று மிஷனரி கல்வியை அளிக்க ஹர்ட் விரும்பினார். ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
ஹர்ட் அமெரிக்கா சென்றதும் இலவச சர்ச் மிஷன் போர்டிங் பள்ளியில் திருமதி ஆண்டர்சனின் தலைமையில் கல்வி பயின்றார் தபிதா. கல்வியியல் தொடர்பான பயிற்சிகளைப் பெற்று மாணவர்களுக்குக் கல்வி போதித்தார். இசை கற்றுக் கொண்டு இசை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இலவச சர்ச் மிஷனின் பெண்கள் பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்த ரெவரெண்ட். ஆர். எம். பாபுவுடன், தபிதாவுக்குத் திருமணம் நடந்தது. பாபு ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர், குழந்தைகளும் அவருக்கு இருந்தன. திருமணத்திற்குப் பின் முழுக்க முழுக்க சர்ச் மிஷன் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் தபிதா பாபு. தபிதாவின் பெண்குழந்தை இளமையில் மறைந்தது.
இதழியல் வாழ்க்கை
தபிதாவின் கணவர் பாபு, 'சத்திய தீபம்', 'The Lamp of Truth' போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். ஏற்கனவே அச்சகப் பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருந்த தபிதா, அந்த இதழ்களின் வெளியீட்டிற்கு உதவினார். அச்சகத்தை நிர்வகித்தார். பெண்கள் வீட்டிலிருந்தே கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் 1865-ல் 'அமிர்தவசனி' இதழைத் தொடங்கினார்.
அமிர்தவசனி
'சுதேச கிறித்தவப் பெண்களுக்கு மதக்கொள்கையை எடுத்தோதும் ஒரு பத்திரிகை' என்ற குறிப்புடன் அமிர்தவசனி வெளிவந்தது. கிறிஸ்தவ சமயத்தாரால் அச்சிடப்பட்ட இதழ் என்றாலும் இதில் பெரும்பான்மையான செய்திகள் இந்துப் பெண்களுக்காகவே எழுதப்பட்டதாய் அமைந்திருந்தன. பெண்களுக்காகப் பெண்களாலேயே எழுதப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் கல்வி , பெண் ஒழுக்கம் பற்றிய கட்டுரைகள் இவ்விதழில் வெளிவந்தன.
இவ்விதழின் நோக்கமாக, "இச் சென்னையம்பதிலுள்ள பற்பல பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களும் , தற்காலத்தில் கல்வி கற்பவர்களாகிய எம்போலிய ஹிந்து ஸ்திரீகளுக்கு நல்லறிவு, நல்லொழுக்கங்களை விர்த்தி செய்விப்பதே இப்பத்திரிகையின் கருத்தாம் . சமயதருமம், ஆசாரதருமம், இலக்கிய இலக்கணங்கள், கணிதம், ஜெந்து சுபாவம், பாக சாஸ்திரம், பலவகைப்பட்ட தையல்கள், விடுகதைகள், விநோத கதைகள், பழமொழிகள் முதலிய பல பிரயோஜனமான விஷயங்களை எங்களாலியன்றவரையில் இப்பத்திரிகையின் கண்ணே இயற்றுவிக்க முயலுவோம். எங்கள் அபிப்ராயங்களை விளக்கத்தக்க சில உசிதமான சித்திரப் படங்களையும் இதிற் காணலாம்" என்ற குறிப்புடன் வெளிவந்தது.
தபிதாவின் கணவர் பாபு, தென்னிந்தியாவின் முதல் இந்திய கிறிஸ்தவ இதழான 'தி ஈஸ்டர்ன் ஸ்டார்' ( The Eastern Star) இதழின் நிர்வாக உரிமையாளரானார். தபிதா அவ்விதழிலும் பங்களிப்பாற்றினார்.
கல்விப் பணிகள்
இந்து மதம் சார்ந்த பெண்களின் கல்விக்கு அக்காலத்தில் இருந்த தடையை அகற்ற முயற்சித்தார் தபிதா பாபு. பெண்கள் மேற் கல்வி பயிலவும், அரசாங்கத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கு தங்கள் பெண் குழந்தைகளை அனுப்பவும் இந்துப் பெற்றோர்கள் விருப்பமில்லாமல் இருந்தனர். பால்யத் திருமணம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர். அதனை 'அமிர்தவசனி' இதழில் கண்டித்து எழுதினார் தபிதா பாபு.
பெண்கள் கல்விக் கூடத்திற்கு வந்து கல்வி பயில்வதற்கு பதிலாக தானே நேரடியாகப் பெண் குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று கல்வி போதித்தார். அதற்கென ஒரு குழு அமைத்துச் செயல்பட்டார். 'அமிர்தவசனி' இதழில் பாடக் குறிப்புக்களை வெளியிட்டார். பெண் குழந்தைகளை முதன்மைத் தேர்வுகளில் பங்கேற்கத் தூண்டினார். அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் கவனம் செலுத்தினார். தபிதா பாபுவின் முயற்சியால் பெண்கள் பலர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் சிலரை தனது பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமித்தார். ஆறு பள்ளிகள் தபிதா பாபுவின் மேற்பார்வையில் இயங்கின.
'ஜெனானா கற்பித்தல்' முறையைப் பரவலாக்கி பெண்கள் கல்வி பயில்வதில் இருந்த தடைகளை நீக்க முயற்சித்தார். சென்னையில் ஜெனானா நிறுவனத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் தபிதா பாபுதான். பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமித்தார். அதற்காகப் பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்க, 'மெட்ராஸ் கிறிஸ்தவ பெண் பயிற்சி பள்ளி'யை 1871-ல் தொடங்கினார். அதன் மூலம் பயிற்சி பெற்றவர்களை, பல்வேறு மிஷன்களின் ஜெனானா ஏஜென்சிகளுக்கு கல்வி போதிப்பதற்காக அனுப்பினார். தனது ஒரே மகளை 1874-ல், இழந்தாலும் சமூக, மதப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலிருந்து மீண்டார்.
1883-ல் கல்வி ஆணையம் அதன் அமர்வுகளைச் சென்னையில் நடத்தியபோது, அதில் கலந்துகொண்ட இரண்டு பெண்களில் ஒருவராகவும், ஒரே இந்தியப் பெண்மணியாகவும் தபிதா பாபு இருந்தார்.
மத, சமூகப் பணிகள்
தபிதா பாபு ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து மிஷன் (Free Church of Scotland Mission) அமைப்பைச் சேர்ந்தவர். சர்ச் மிஷன் பெண்கள் பள்ளிகளின் (ஃப்ரீ சர்ச் மிஷன் பாலிகா பாடசாலை) ஆசிரியராகப் பணியாற்றினார். 'சண்டே ஸ்கூல்' என்பதன் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம் ஆகியவற்றைப் போதித்தார்.
எபிதா ஏஸ்பிளனேட் தமிழ் தேவாலயத்தின் போதகராக இருந்த கணவர் பாபுவின் பணிகளுக்கு உதவினார்.
தபிதா பாபு, சென்னை கிறிஸ்தவ பெண்கள் சங்கத்தின் பிளாக் டவுன் கிளையின் செயலாளராக இருந்தார். டிசம்பர் 1882-ல் கல்கத்தாவில் நடைபெற்ற பத்தாண்டு மாநாட்டுக்கு மெட்ராஸில் உள்ள ஃப்ரீ சர்ச் மிஷனால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். அங்கு 'இந்தியாவில் பெண்களின் பணி' என்ற தலைப்பில் விவாதத்தை முன்னெடுத்தார்.
இலக்கியப் பணி
தபிதா பாபு, இளமையில் ஆங்கிலேய குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், அவர் நடைமுறையில் ஓர் இரந்தியப் பெண்ணாகவே வாழ்ந்தார் என குறிப்பிடப்படுகிறது. ஐரோப்பியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயன்றார். விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதன் நகல் , லேடி நேப்பியர் மூலம் மகாராணிக்கு அனுப்பப்பட்டது. அது பின்னர் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழிலும் வெளிவந்தது. 2000 பிரதிகளுக்கு மேல் அந்நூல் விற்பனையானது.
மறைவு
தபிதா பாபு, பிப்ரவரி 6, 1890-ல் காலமானார். இவரது இறுதிச் சடங்கில் ரெவரண்ட். ஜி. எம். ரே மற்றும் டாக்டர் வில்லியம் மில்லர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல்
தபிதா பாபுவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து நிதி திரட்டி மெட்ராஸ் பெண்கள் தினப் பள்ளியில் படித்த இந்துப் பெண்களின் பயன்பாட்டிற்காக நூலகத்தை நிறுவினர்.
டபிள்யூ.டி. சத்தியநாதன், அன்னா சத்தியநாதன், கிருபா சத்தியநாதன் போன்றோரது வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கும் சாமுவேல் சத்தியநாதன், தபிதா பாபுவின் வாழ்க்கையையும், 'SKETCHES OF INDIAN CHRISTIANS' என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.
வரலாற்றிடம்
தமிழில் வெளியான முதல் பெண்கள் இதழின் ஆசிரியர். பதிப்பாளர். பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த முன்னோடி என்ற வகையிலும், 'ஜெனானா கற்பித்தல் முறை'யை அறிமுகம் செய்தவர் என்ற வகையிலும், கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர் என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறார், தபிதா பாபு.
உசாத்துணை
- SKETCHES OF INDIAN CHRISTIANS, S. SATTHIANADHAN, THE CHRISTIAN LITERATURE SOCIETY FOR INDIA (1896): ஆர்கைவ் தளம்
- Life and light for woman: ஆர்கைவ் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Apr-2023, 06:14:37 IST