டபிள்யூ.டி. சத்தியநாதன்
டபிள்யூ.டி. சத்தியநாதன் (வில்லியம் தாமஸ் சத்தியநாதன், W.T.சத்திய நாதன்) (1830 - பிப்ரவரி 24, 1892) கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க கால மதப் பரப்புரையாளர்களுள் ஒருவர். மெட்ராஸ் நேட்டிவ் சர்ச் கவுன்சிலின் தலைவராகப் பணிபுரிந்தவர். திருநெல்வேலி, பாளையங்கோட்டைப் பகுதிகளில் கிறிஸ்தவ மதம் மற்றும் கல்வி வளரக் காரணமானவர்.
பிறப்பு, கல்வி
டபிள்யூ.டி சத்தியநாதனின் இயற்பெயர் திருவேங்கடம் நாயுடு. 1830-ல், மதுரையில் ஒரு பாரம்பரிய இந்துக் குடும்பத்தில் பிறந்தார். பரம்பரையாக விஷ்ணுவின் தீவிர பக்தர்களாக சத்தியநாதனின் குடும்பம் இருந்தது. தந்தை வேலை நிமித்தம் பல்வேறு ஊர்களுக்குப் பயணப்பட வேண்டி இருந்ததால், திருச்சி, மதுரை என பல ஊர்களில் சத்தியநாதனின் பள்ளிப்பருவம் அமைந்தது. திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் சத்தியநாதனின் தந்தைக்குப் புதிய பணி வாய்ப்புக் கிடைக்கவே, அருகில் உள்ள சிந்துபூந்துறைக்குக் குடும்பம் குடி பெயர்ந்தது.
தனது 14-ம் வயதில் அருகில் உள்ள பாளையங்கோட்டை சர்ச் மிஷனரிப் பள்ளியில் இடைநிலைக் கல்விக்காகக் சேர்க்கப்பட்டார் சத்தியநாதன். தீவிரமான இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பைபிள் வகுப்பில் கலந்து கொள்வதையும், பைபிள் வாசிப்பதையும் புறக்கணித்தார்.பள்ளியில் தலைவராக இருந்த பார்வையற்றவரான வில்லியம் க்ரூக்ஷாங்க் (William Cruikshanks) மாணவர்களின் மீது மிகவும் அக்கறை கொண்டவராக இருந்தார். சத்தியநாதன் மீதும் அவர் அன்பு காட்டினார். அவரது அன்பால் கவரப்பட்ட சத்தியநாதன் பைபிள் வகுப்புகளில் கலந்து கொண்டார். கிறிஸ்துவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டார். நாளடைவில் கிறிஸ்தவத்தின் மீது முழுமையாக அவரது கவனம் திரும்பியது. தன்னை ஒரு கிறிஸ்தவனாகவே உணரத் தலைப்பட்டார்.
மேற்கல்விக்காக பிஷப் செர்ஜெண்ட்ஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து போதகப் பயிற்சி பெற்றார் சத்தியநாதன். 1855-ல், சத்தியநாதன் மேல் பயிற்சிக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். டவுடன் கல்லூரியில் மேற்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதற்கான பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஞானஸ்னானம் பெற்றபின் போதகர் பயிற்சி பெறச்சென்றபோது சத்தியநாதன் ரெவரண்ட் ஜான் தேவசகாயத்தின் மகளான அன்னாவைச் சந்தித்தார். 1849-ல் அன்னாவைத் திருமணம் செய்து கொண்டார். சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இணையருக்கு ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் என ஏழு குழந்தைகள். அவர்களில் இரண்டு பெண்கள் இறந்து விட, ஜோஹன்னா சத்தியநாதன், கதி சத்தியநாதன், அன்னி க்ளார்க் சத்தியநாதன் ஆகிய பெண்களும், ஜான் சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன் என்ற இரு ஆண்களும் உயிரோடு இருந்தனர்.
சத்தியநாதன் குடும்பம்
சத்தியநாதன் குடும்பமே சிறந்த கல்வியாளர்களையும், எழுத்தாளர்களையும் கொண்டதாக இருந்தது. W.T. சத்தியநாதனின் மனைவியான அன்னா ஆங்கிலம், தமிழில் இரண்டிலும் தேர்ந்தவர். கல்விப் பணி ஆற்றி வந்த அவர் மாணவர்களுக்குச் சில நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சத்தியநாதனின் மகனான சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் படித்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார். கல்வி தொடர்பாக சில நூல்களை எழுதியிருக்கிறார். சாமுவேலின் மனைவியான கிருபா பாய் சத்தியநாதன், முதன் முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய பெண்ணாக மதிக்கப்படுகிறார். இவரது சகுணா, கமலா என்னும் நாவல்களை, டபிள்யூ.டி. சத்தியநாதனிடம் பயிற்சி பெற்ற சாமுவேல் பவுல் தமிழில் மொழிபெயர்த்தார். சாமுவேல் சத்தியநாதனின் இரண்டாவது மனைவியான கமலா சத்தியநாதன் தான் சென்னை சர்வகலாசாலையின் (சென்னைப் பல்கலைக்கழகம்) முதல் முதுகலைப் பட்டதாரி. தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் பத்திரிகை ஆரம்பித்து நடத்திய (The Indian Ladies Magazine) முதல் பெண் பத்திரிகையாளரும் கமலா சத்தியநாதன் தான்.
இவர்கள் அனைவரது படைப்புகளிலிருந்தும், இவர்களது வாரிசுகளின் படைப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுத்த சிலவற்றை Eunice de Souza, The Satthianadhan Family Album என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். சாகித்ய அகாதெமி நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
மதப்பணிகள்
ஞானஸ்நானம்
1847-ல், டபிள்யூ.டி. சத்தியநாதன், ரெவரண்ட் ஜான் தாமஸ் அவர்களால், மெஞ்ஞானபுரத்தில் ஞான ஸ்நானம் செய்விக்கப் பெற்றார். திருவேங்கடம் நாயுடு என்னும் அவரது இயற்பெயர், வில்லியம் தாமஸ் சத்தியநாதன் என்று மாற்றப்பட்டது. அப்பகுதியில், முதன் முதலில், கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய உயர் ஜாதியைச் சேர்ந்தவர் அவர் தான் என்பதால், பல்வேறு எதிர்ப்புகளைச் சத்தியநாதன் சந்தித்தார். குடும்பத்தாராலும், உறவுகளாலும் விலக்கி வைக்கப்பட்டார். மதம் மாறியதற்காக வழக்குகளையும் இவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
தென்தமிழக மதப்பணிகள்
1859-ல், திருநெல்வேலியில் ரெவெரெண்ட் ராக்லாண்ட் அவர்களுடன் இணைந்து மதப்பணியாற்றுமாறு சத்தியநாதனுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட சத்தியநாதன், தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்குச் சென்று மத போதகப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலிப் பகுதியில் கிறிஸ்தவம் வளரப் பெரிதும் உழைத்தார். ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவினார். 1859-ல், சத்தியநாதன் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியின் மிஷனரீஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சென்னையில்
1861-ல், சர்ச் மிஷனரி சொசைட்டியின் சென்னை தமிழ்க் கிளைப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். அதற்காகச் சென்னைக்கு வந்தார். கடும் உழைப்பைச் செலுத்தி, சர்ச் மிஷனரி சொசைட்டியின் சார்பில் தமிழ் கிறிஸ்தவக் குடும்பங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சபை ஒன்றை ஏற்படுத்தினார். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பலரிடம் இருந்த சாதிய நோக்கை, ஏற்றத்தாழ்வு உணர்வுகளைக் களையப் பாடுபட்டார். கிறிஸ்துவின் கீழ் அனைவரும் ஒருவரே என்ற உணர்வை ஏற்படுத்த உழைத்தார்.
பல விதங்களிலும் செயல்பட்டு சபையின் நிதி ஆதாரத்தை உயர்த்தினார். அதைக் கொண்டு 1873-ல், பூர்வீக கிறிஸ்தவ முன்னேற்ற சங்கத்தை நிர்மாணித்தார். 1877-ல் தமிழ் தேவாலய சபையின் தலைவராக ஆனார். அதுவரை ஐரோப்பியத் தலைமை அமைப்பின் கிளையாக மட்டுமே செயல்பட்டு வந்தது சர்ச் மிஷனரி சொசைட்டி. W.T. சத்தியநாதன் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல், தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை அது தமிழ் தேவாலய சபைக்கு வழங்கியது.
ஜியான் தேவாலயம்
சென்னையின் மதிக்கப்பெறும் சமய குருவாக உயர்ந்த டபிள்யூ.டி.சத்தியநாதன், மனைவி அன்னா சத்தியநாதனுடன் இணைந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண்கள் பள்ளி ஒன்றை நிர்மாணித்தார். அது மேலும் ஐந்து பள்ளிகளாக விரிவடைந்தது. சென்னையின் மிகப் பழமையான அடையாளமாகக் கருதப்படுவதும், 1847-ல் அமெரிக்க மிஷனரிகளால் நிர்மாணிக்கப்பட்டதுமான சென்னையின் முதல் தேவாலயத்தை, சர்ச் மிஷனரி சொசைட்டியின் சார்பில் விலைக்கு வாங்கினார். பெரும் பொருட் செலவில் மாற்றங்கள் செய்து அதனைப் புதிதாக்கினார். அதுவே சென்னையின் மிகப் பழமையான 'மணி’ (Bell) யைக் கொண்ட, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள ஜியான் தேவாலயம்.
வெளிநாட்டுப் பயணங்கள்
முதல் இந்திய ஆங்கிலிகன் பிஷப் ஆக நியமனம் செய்யப்பட்டவர் டபிள்யூ.டி.சத்தியநாதன்தான். பைபிளை மேற்கோள் காட்டி அவர் பேசும் பேச்சுக்களாலும், அவரது ஆங்கிலப் புலமையாலும் வெளிநாட்டவர்களும் கல்வியாளர்களும் அவரை மிகவும் மதித்தனர். ஐரோப்பிய மிஷனரிகளால் இந்திய மிஷனரிகளில் முதன்மைத் தகுதி வாய்ந்தவராக W.T. சத்தியநாதன் பாராட்டப்பட்டார். அவரது வெளிநாட்டு நண்பர்கள் அவரை இங்கிலாந்திற்கு அழைத்துச் சிறப்புச் செய்தனர். 1878-ல் மனைவியுடன் இங்கிலாந்துக்குச் சென்று அங்கும் தனது சமூக நற்பணிகளைத் தொடர்ந்தார் சத்தியநாதன். அன்னா சத்தியநாதன், டபிள்யூ.டி. சத்தியநாதன் இருவரும் விக்டோரியா மகாராணியால் சிறப்பிக்கப்பட்டனர். பின் இந்தியா திரும்பி தங்களின் மதப்பணிகளைத் தொடர்ந்தனர்.
நான்கு தலைமுறை மதப்பணி
ஜியான் தேவாலயத்தின் முதல் மத குருவாக வின்ஸ்லோ பணியாற்றினார். அவருக்குப் பின் W.T. சத்தியநாதன் ஜியான் தேவாலயத்தில் 28 வருடங்கள் (1864-1892) மத குருவாகப் பணியாற்றினார். அவரது மறைவுக்குப் பின் சத்தியநாதனது மற்றொரு மகளான அன்னியின் கணவர், டபிள்யூ.டி. கிளார்க், 16 வருடங்கள் (1892-1918) மத குருவாகப் பணியாற்றினார். கிளார்க்கைத் தொடர்ந்து அவரது மகன் சாமுவேல் சத்தியநாதன் கிளார்க் 23 வருடங்கள் (1921-1944) பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அவரது மகன் சுந்தர் கிளார்க் (1970-1972) தலைமை குருவாகத் தொடர்ந்தார். இவ்வாறாக W.T. சத்தியநாதனின் குடும்பம் நான்கு தலைமுறைகளாக ஜியான் தேவாலயத்தில் தனது மதப் பணியைத் தொடர்ந்தது.
மறைவு
1890-ல் W.T. சத்தியநாதனின் மனைவி அன்னா சத்தியநாதன் காலமானார். சத்தியநாதன் 1891-ல், தமிழ் சர்ச் கவுன்சிலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் வெகுகாலம் உயிரோடு இருக்கவில்லை. குடும்ப விஷயமாகத் தனது சொந்தக் கிராமமான சிந்துப்பூந்துறைக்கு வந்தவர், அங்கேயே உடல் நலிவுற்று பிப்ரவரி 24, 1892 அன்று காலமானார். பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்து தேவாலயத்தின் கல்லறையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
W.T. சத்தியநாதனின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் அப்போதைய சென்னை பிஷப், ஃப்ரெடரிக் ஜெல் (Frederick Gell), "கிறிஸ்துவுக்குச் சேவை செய்வதிலும், கிறிஸ்துவின் மகிமையை மேம்படுத்துவதிலும், அவரை அவரது சகோதரர்கள் மத்தியில் மிகச் சிறந்தவராக ஆக்கியது. நமது பூர்வீகத் திருச்சபையின் விவகாரங்களில் அக்கறை கொண்ட அனைவரது நேர்மையான மதிப்பையும் வில்லியம் தாமஸ் சத்தியநாதன் பெற்றார். நான் அவரது இழப்பால் மிகவும் துயருறுகிறேன். அவரது இழப்பு மறைமாவட்டம் முழுவதும் உணரப்படும்." என்று குறிப்பிட்டிருந்தார்.
விருதுகள்,கௌரவங்கள்
- 1882-ல் சத்தியநாதன் சென்னைப் பல்கலைகழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவராகச் சென்னை கவர்னரால் நியமிக்கப்பட்டார்.
- 1884-ல் சத்தியநாதனுக்கு அவரது சேவைகளைப் பாராட்டி கேன்டர்பரி பேராயர், இளங்கலை தெய்வீகப் பட்டம் (Bachelor of Divinity) அளித்துச் சிறப்பித்தார்.
வரலாற்று இடம்
தென் தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் வளரக் காரணமான முன்னோடிகளுள் W.T. சத்தியநாதனும் ஒருவர். சென்னையில் தமிழ்க் கிறிஸ்வர்களை ஒருங்கிணைத்து தனிச் சபையை ஏற்படுத்தியவர். கிறிஸ்தவத்தில் இருக்கும் சாதி வேற்றுமைகளைக் களையப் பாடுபட்டவர். சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்த சத்தியநாதன், சென்னையிலும் திருநெல்வேலியிலும் பல பள்ளிகள் உருவாகக் காரணமானவராக இருந்தார்.
W.T.சத்தியநாதனின் நூல்கள்
- ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்களை எழுதியுள்ளார் W.T.சத்தியநாதன்.
- புதிய ஏற்பாட்டிற்குத் தமிழில் ஓர் விரிவான விளக்கவுரையை எழுதியுள்ளார்.
- சர்ச் மிஷன் சொசைட்டியின் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.
- 'தேசாபிமானி’ என்னும் இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்.
- மிஷன் பள்ளி இதழிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மிஷனரி சார்ந்து வெளிவந்த பல இதழ்களிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் 'Notes of a Tour Through Travancore and Tinnevelly’ என்ற கட்டுரை குறிப்பிடத்தகுந்த ஒன்று. அது, The Satthianadhan Family Album’ நூலில் இடம் பெற்றுள்ளது.
- W.T. சத்தியநாதனின் கட்டுரைகளில் சிலவும், அவரது வாழ்க்கை வரலாறும், Eunice de Souza தொகுத்து, சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கும் ’The Satthianadhan Family Album’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.
உசாத்துணை
- The Satthianadhan Family Album, Eunice de Souza, Sahitya Akademi
- W.T. சத்தியநாதனின் வாழ்க்கைக் குறிப்பு - ஆங்கில நூல்
- About Rev. W.T SATHIANATHAN in Geni
- Church Missionary Intelligencer
- ஜியான் தேவாலயம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Dec-2022, 11:38:28 IST