சாமுவேல் சத்தியநாதன்
சாமுவேல் சத்தியநாதன் (1860-1906) கல்வியாளர்; எழுத்தாளர்; கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்றவர். W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதனின் மகன். கிருபா பாய் - கமலா ஆகியோரின் கணவர். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் தத்துவத் துறைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். நேஷனல் மிஷினரி கவுன்சிலின் உருவாக்கத்திற்கு உழைத்தவர். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியில் நிலவிய கல்விச் சூழல்கள் குறித்து மிக விரிவாக ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
சாமுவேல் சத்தியநாதன்,திருநெல்வேலியில், 1860-ல், டபிள்யூ.டி. சத்தியநாதன் (வில்லியம் தாமஸ் சத்தியநாதன்) - அன்னா சத்தியநாதன் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருநெல்வேலியில் ஆரம்பக் கல்வியையும், சென்னை, வேப்பேரியில் உள்ள ஆங்கிலிகன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் கல்வியையும் நிறைவு செய்தார். 1878-ல், W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இங்கிலாந்திற்குச் சென்றபோது கேம்பிரிட்ஜில் உள்ள கார்பஸ் க்ரிஸ்டி கல்லூரியில் சாமுவேல் சத்தியநாதன் சேர்க்கப்பட்டார். அதன் ஃபெல்லோஷிப் பெற்றதுடன் கணிதமும் மன இயல் மற்றும் நீதி சாஸ்திரம் ஆகியவற்றை பயின்று மூன்று துறையிலும் பட்டங்கள் பெற்றார். உயரிய பட்டமான L.L.B. பட்டமும் பெற்றார். 1883-ல் இந்தியா திரும்பினார்.
தனிவாழ்க்கை
கல்விக்குப்பின் சென்னை திரும்பிய சாமுவேல் சத்தியநாதனுக்கு அரசுத் துறை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
கிருபாபாய் சத்தியநாதன்
இதே காலகட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த கிருபாபாயுடன் சாமுவேல் சத்தியநாதனுக்குக் காதல் முகிழ்த்தது. (கிருபா சத்தியநாதன்) 1883-ல் அவர்கள் திருமணம் நடந்தது. சாமுவேல் சத்தியநாதனுக்கு ஊட்டியில் உள்ள ப்ரீக்ஸ் நினைவுப் பள்ளியில் (Breeks Memorial ) தலைமை ஆசிரியராகப் பணியற்றும் வாய்ப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு மனைவியுடன் ஊட்டிக்குச் சென்று வசித்தார்.
ஏற்கனவே காச நோயால் பாதிக்கப்படிருந்த கிருபா பாய்க்கு அங்கு தகுந்த சிகிச்சை அளித்தார் சாமுவேல் சத்தியநாதன். உடல் நலம் தேறிய கிருபா பாய், அங்குள்ள இஸ்லாமிய மக்கள் கல்வி பெறுவதற்காகப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். 1884-ல், ராஜமுந்திரியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சாமுவேல்சத்தியநாதன் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மனைவியுடன் ராஜமுந்திரிக்குச் சென்றார். அங்கு அடிக்கடி நோய்வாய்ப்பட்டார் கிருபா பாய். தகுந்த சிகிச்சை அளித்து வந்தார் சாமுவேல் சத்தியநாதன் என்றாலும் நோய் முழுமையாகக் குணமாகவில்லை.
இந்நிலையில் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு சாமுவேல் சத்தியநாதனுக்குக் கிடைத்தது . உடன் மனைவியையும் அழைத்துச் சென்றார். அங்கு கிருபா பாயின் உடல் நிலை சற்று மேம்பட்டது. அக்காலத்தில் வெளிவந்த சில ஆங்கில இதழ்களில் ’An Indian Lady’ என்ற பெயரில் கிருபா பாய் கட்டுரைகளை எழுதினார். கிருபா பாய்க்கு எழுத்தின் மீது இருந்த ஆர்வத்தை அறிந்து அவரை எழுதத் தூண்டினார் சாமுவேல் சத்தியநாதன்.
1886-ல், சாமுவேல் சத்தியநாதனுக்கு, சென்னை ராஜதானியின் பொதுக் கல்வி இயக்குநரகத்தின் தனி உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. கூடவே சென்னை மாநிலக் கல்லூரியில் தர்க்கவியல் மற்றும் தத்துவத்துறையின் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் சாமுவேல் சத்தியநாதன் - கிருபா பாய் இருவரும் சென்னைக்கு வந்து வசித்தனர். இக்கால கட்டத்தில் தான் 'சகுணா’ என்ற நாவலை எழுதினார் கிருபா பாய். அது 1887-1888-ல் சென்னை கிறித்துவக் கல்லூரி இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1892-ல், ஆங்கிலத்தில் அது 'Saguna: A Story of Native Christian Life’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.
இந்நிலையில் தனது ஒரு வயது மகளை இழந்தார் கிருபா பாய். அது அவர் உடல் நலனையும் மனதையும் வெகுவாகப் பாதித்தது. அதனால் சாமுவேல் அவரை பம்பாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கு தன் பழைய உறவினர்களைக் கண்டு சற்று ஆறுதல் பெற்றார் கிருபா. மீண்டும் சென்னைக்குத் திரும்பி நாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். அவ்வப்போது சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றபடியே "கமலா: ஒரு இந்துப் பெண்ணின் ஜீவிய சரித்திரம்" என்ற நாவலை எழுதத் தொடங்கினார்.
’கமலா’ நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போதே உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டது. அதனால் சாமுவேல் சத்தியநாதன் கிருபாவை குன்னூருக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சிகிச்சை அளித்தார். சிகிச்சைகளுடன் மருத்துவமனையில் இருந்தபடியே நாவல் அத்தியாயங்களை எழுதினார் கிருபா. ஆனால் கிருபா பாயின் நோய்த் தீவிரம் குறையவில்லை. அவருக்கு உதவி செய்து வந்த சகோதரியும் காலமானார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் கிருபா பாய். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்றாலும் பலனில்லாமல் ஆகஸ்ட் 3, 1894-ல் கிருபா பாய் காலமானார்.
கிருபா பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கணவர் சாமுவேல் சத்தியநாதனால் சென்னை புரசைவாக்கத்தில், அவரது மகளது சமாதியின் அருகே ஒரு சமாதி அமைக்கப்பட்டது. அதில் கிருபா பாயின் வாழ்க்கையை நினைவு கூரும் வகையில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டது. கிருபா பாயின் இரு நாவல்களையும் அவரது மறைவிற்குப் பின்னர் சாமுவேல் பவுல் தமிழில் மொழிபெயர்த்தார்.
கமலா சத்தியநாதன்
மனைவியை இழந்த சாமுவேல் சத்தியநாதன், தனது கல்விப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார். கட்டுரைகள் பலவற்றை எழுதினார். 'கிறிஸ்டியன் பேட்ரியாட்’ இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். கல்வி தொடர்பான பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். 1898-ல், சென்னை சர்வகலாசாலையில் பயின்று வந்த கமலாவைத் திருமணம் செய்து கொண்டார். கமலா சத்தியநாதன் கல்வியாளர். சாமுவேல் கமலாவின் ஆர்வங்கள் அறிந்து அவரை ஊக்குவித்தார். கமலாவைத் தொடர்ந்து பயிலச் செய்து சென்னை ராஜதானியின் முதல் முதுகலைப் பட்டதாரியாக அவரை உருவாக்கினார். கமலாவின் விருப்பப்படி சென்னை ராஜதானியின் முதல் பெண்கள் இதழான 'தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ உருவாக்கத்திற்கும் துணையாக நின்றார். பில் சத்தியநாதன், பத்மினி ஆகியோருக்குத் தந்தையானார்.
கல்வி மற்றும் சமூகப் பணிகள்
சென்னை ராஜதானியில் அதுவரை நிலவி வந்த கல்விச் சூழல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு 'History of Education in the Madras Presidency’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார் சாமுவேல் சத்தியநாதன். அதற்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்த நூலில் அவர், சென்னை ராஜதானியில் இருந்த கல்விச் சூழல்கள், 1822-ல் தொடங்கி, சர் தாமஸ் மன்றோ காலத்தில் பிரிட்டிஷார் ஆட்சியில் நிகழ்ந்த செயல்பாடுகள், மாற்றங்கள், வளர்ச்சிகள் என 1894 வரையிலான நிகழ்வுகளை மிக விரிவாக ஆவணப்படுத்தியிருந்தார். அரசுப் பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள், இஸ்லாமியர்களுக்கான பள்ளிகள், கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளிகள், கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழகக் கல்வித் திட்டங்கள், அரசின் கொள்கைகள், திட்ட விளக்கங்கள், கல்விக்காக அளித்த நிதி எனப் பல விஷயங்களை அந்நூலில் விரிவாக விளக்கியிருந்தார்.
தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் கல்வி தொடர்பான பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் சாமுவேல் சத்தியநாதன். அந்த அனுபவத்தைப் புத்தகமாகவும் எழுதினார். அக்காலத்தில் YMCA, இந்திய புராட்டஸ்டன்ட் தலைமைக்கான முக்கியப் பயிற்சி மையமாக இருந்தது. அங்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளில் முக்கியப் பங்கு வகித்தார் சாமுவேல். YMCA-வின் செயலாளராக இருந்த வி.எஸ். அஸாரியாவுடன் இணைந்து நேஷனல் மிஷினரி கவுன்சில் உருவாவதற்கு உழைத்தார்.
மறைவு
இந்தியத் தத்துவங்கள் குறித்து ஆழக் கற்ற சாமுவேல் சத்தியநாதன் அது பற்றி உரையாற்றுவதற்காக அவர் மார்ச், 1906-ல் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு சில பல்கலைக்கழகங்களில் உரையாற்றினார். ஜப்பானில் இருந்தும் உரையாற்ற அவருக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக் கொண்டு ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். ஜப்பானுக்குச் சென்று இறங்கியதுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சையில் இருந்தும் பலனளிக்காமல் ஏப்ரல் 4, 1906 அன்று, ஜப்பானில் உள்ள யோகோஹமாவில் சாமுவேல் சத்தியநாதன் காலமானார்.
ஆவணம்
கிருபா பாய் சத்தியநாதன், கமலா சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன், W.T. சத்தியநாதன், அன்னா சத்தியநாதன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளைத் தொகுத்து, யுனிஸ் டிசௌஸா ஆசிரியத்துவத்தில் 'The Satthianadhan Family Album’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதமி மூலம் வெளியிடப்பட்டது. அந்நூலில், சாமுவேல் சத்தியநாதன், கமலா சத்தியநாதன் இணைந்து எழுதிய, கிறிஸ்தவர்களின் அக்கால வாழ்க்கைச் சூழல்களைக் கூறும் 'Stories of Indian Christian Life (1899) நூலில் இருந்தும் சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சாமுவேல் சத்தியநாதனின் நூல்களில் சில ஆர்கைவ் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அமேசான் தளத்திலும் சில நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
வரலாற்று இடம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கல்வியாளராக, தத்துவப் பேராசிரியராக சாமுவேல் சத்தியநாதன் மதிக்கப்பட்டார். 'History of Education in the Madras Presidency’ என்ற சாமுவேல் சத்தியநாதனின் நூல் வெளீயிட்டிற்கு, பொதுக் கல்வித் துறை இயக்குநரகம் உதவி செய்திருக்கிறது. நூலின் சிறப்புரையில் பொதுக் கல்வித் துறை இயக்குநர், 'இந்த நூல் ஒவ்வொரு கல்வியாளரின் கையிலும் இருக்க வேண்டிய நூல்’ என்று மதிப்பிட்டிருக்கிறார்.
நூல்கள்
கல்வியாளராகவும் பேராசிரியராகவும் இருந்த சாமுவேல் சத்தியநாதன் கல்வி தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளார்.
- ’Stories of Indian christian life’ என்ற நூலை மனைவி கமலா சத்தியநாதனுடன் இணைந்து எழுதி, 1898-ல் வெளியிட்டிருக்கிறார்.
- தனது கேம்ப்ரிட்ஜ் கல்லூரி அனுபவங்களை ’Four years in an English University’ என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார். இது கேம்பிரிட்ஜில் பயில விரும்பும் அக்கால மாணவர்களுக்குத் தகுந்த ஒரு வழிகாட்டி நூலாக இருந்திருக்கிறது.
- தனது தந்தையான W.T. சத்தியநாதனின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை, 'The Rev. W.T. Satthianadhan: Brief Biographical Sketch' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.
பிற நூல்கள்
- Missionary work in India: From a native Christian point of view
- Theosophy: an appeal to my countrymen
- A holiday trip to Europe and America
- History of education in the Madras Presidency
- The present position and future prospects of the Indian Christian community
- Indian philophical systems with special reference to Christianity
- England and India lectures
- Six Months in England
- Syllabus of the Lectures on the Students' Mission Foundation for 1905-1906
உசாத்துணை
- சாமுவேல் சத்தியநாதன் வாழ்க்கைக் குறிப்பு
- சாமுவேல் சத்தியநாதன் எழுதிய கிறிஸ்தவர்கள் பற்றிய வரலாற்று நூல்
- அமேசானில் சாமுவேல் சத்தியநாதன் புத்தகங்கள்
- சாமுவேல் சத்தியநாதன் எழுதிய சில நூல்கள் ஆர்கைவ் தளம்
- ஜெனி தளம்
- சத்தியநாதன் ஃபேமிலி ஆல்பம்: The Satthianadhan Family Album, Eunice de Souza
[[]]
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Sep-2022, 12:31:27 IST