under review

சாமுவேல் பவுல்

From Tamil Wiki
சாமுவேல் பவுல்

சாமுவேல் பவுல் (பாதிரியார் சாமுவேல் பவுல், Samuel Paul ஜூன் 15, 1844-மார்ச் 11,1900) கிறிஸ்தவ சமயத்தின் தொடக்க கால மதப் பரப்புரையாளர். திருநெல்வேலிப் பகுதியில் கிறிஸ்தவம் வளர்த்தவர். கிறிஸ்தவ மதம் சார்ந்த நூல்கள், கதை, கட்டுரைகளை எழுதிப் பதிப்பித்தவர். திருச்சபைகளை ஒழுங்குபடுத்தி வழிநடத்துவது, சமூக சேவைகள் என இயங்கியவர்.

பிறப்பு, கல்வி

சாமுவேல் பவுல், திருநெல்வேலி மாவட்டம், தென்கரை தாலுகாவைச் சேர்ந்த பாட்டக்கரை என்னும் கிராமத்தில் ஜூன் 15, 1844-ல் பிறந்தார். தந்தை தானியேல் பவுல் உபதேசியாகத் திகழ்ந்தவர். கிறிஸ்வத வேதத்தையும், ஜப முறைகளையும் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார் சாமுவேல் பவுல். தனது எட்டாம் வயதில் மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஆண்கள் போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உயர் கல்வியை முடித்தார். அப்போது மிஷனரியாக இருந்த எட்வர்ட் சார்ஜன்ட் ஐயரிடம் சாமுவேல் பவுல் வேதத்தையும், வேத இறையியலையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். சமூக சேவைகளுடன் மதப் பரப்புரையும் செய்து வந்தார். இவரது திறமையை அறிந்த இவரது ஆசிரியரான தோமாஸ் ஐயர் (தோமாஸ் பாதிரியார்) இவரை சென்னைக்கு அனுப்பி தேவ ஊழியத்திற்கான இவரது தகுதியை மேம்படுத்த விரும்பினார்.

தனி வாழ்க்கை

ஜனவரி,1865-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார் சாமுவேல் பவுல். அக்காலக்கட்டத்தில் சர்ச் மிஷன் சபையில் (CMS-Church Mission Society) உபதேசியாக இருந்த, திருநெல்வேலியைச் சேர்ந்த வில்லியம் தாமஸ் சத்தியநாதனின் (டபிள்யூ.டி. சத்தியநாதன்) கீழ் உபதேசியாக நியமிக்கப்பட்டார் சாமுவேல் பவுல். மூன்று வருடங்கள் சென்னையில் பணி செய்தார். 1868-ல் திருநெல்வேலியில் சாமுவேல் பவுலுக்குத் திருமணமானது.

சில காலத்திற்குப் பின் மீண்டும் சென்னைக்கு வந்து தனது பணியைத் தொடர்ந்தார் சாமுவேல் பவுல். அவர் சி.எம்.எஸ். மிஷன் சபைப் பள்ளிகளின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் சாமுவேல் பவுல் எழுதத் தொடங்கினார். ஒற்றைத்தாள் பிரதிகளாகவும், சிறு குறிப்புகளாகவும், மாணவர்களுக்குப் பயிற்சி ஏடாகவும் கிறிஸ்துவின் போதனைகளை அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் வேதாகமப் பயிற்சி பெற்று குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதப் பணி

1874-ல், உதகமண்டலம் C.M.S. சபைக்குக் குருவாக நியமிக்கப்பட்டார் சாமுவேல் பவுல். சுற்றுப்புறங்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சென்று சபைகளை ஸ்தாபித்து வலுப்படுத்தினார். மலை வாழ் மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். 1883 முதல் 1887 வரை சென்னையில் சென்னை சர்ச் மிஷன் சபைக் குருவாகப் பணியாற்றினார். 1900-ம் வருடம் வரை வடதிருநெல்வேலி சர்ச் சபையில் குருவாகப் பணிபுரிந்தார்.

நற்போதகம் - கிறிஸ்வத மத இதழ்

இதழியல் பணி

கிறிஸ்தவ சமயப் பரப்புரைக்காக 1849-ல் தொடங்கப்பட்ட இதழ் நற்போதகம். அதன் ஆசிரியராக 1890-ல் பொறுப்பேற்றார் சாமுவேல் பவுல். சிறு சிறு கட்டுரைகள், கதைகள், அறிவுரைகள், நீதி போதனைகள், மதச் சித்தாந்தங்கள், ஜப விளக்கங்கள், கிறிஸ்தவத் தத்துவங்களை விளக்கமாக அவ்விதழில் வெளியிட்டு வந்தார். கூடவே பல நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

சமூகப்பணி

சாமுவேல் பவுல், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் என்ற கிராமத்தில் தலைமைக் குருவாகப் பணிபுரிந்தபோது, இரண்டு சாதியினருக்கிடையே பிரச்சனை உண்டாகி கடும் மோதலும் பெரிய இனக்கலவரமும் உண்டானது. அம்மக்களோடு பேசி அந்தப் பிரச்சனையை முறையாகத் தீர்த்து வைத்து இரு பிரிவினரிடமும் அமைதியை ஏற்படுத்தினார். அதன் காரணமாகவும், இவரது பிற சேவைகளுக்காகவும் பிரிட்டிஷ் அரசு சாமுவேல் பவுலுக்கு 1898-ல் ராவ்சாகிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சாமுவேல் பவுல் வாழ்க்கை வரலாறு - இணைய நூலகம்

இலக்கிய வாழ்க்கை

மோட்சப் பிரயாணம்

சாமுவேல் பவுலின் மோட்சப் பிரயாணம் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஜான் பன்யன் எழுதிய Pilgrims Progress நூலின் உரைநடைவடிவ தமிழாக்கம். எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இதை செய்யுள் வடிவில் இரட்சணிய யாத்ரீகம் என்னும் பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

1882-ல் முதன் முதலில் கிறிஸ்வத இலக்கியச் சங்கம் மூலம் வெளியான இந்த மோட்சப் பிரயாணம் நூலின் மொழிநடை மிக மிக எளிமையானது. இன்று படித்தாலும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் அமைந்துள்ளது. சான்றாகப் பின்வரும் அவரது முகவுரைக் குறிப்பைச் சொல்லலாம். "இதற்கு முன் இந்தப் புஸ்தகத்தை தமிழ்ப்படுத்தினவர்கள் இதில் உள்ளவைகளில் சிலவற்றை குறைத்தும் இதினோடு சிலவற்றை கூட்டியும், மாற்றியும் அச்சிட்டிருக்கிறோம் என்று சொன்னது போல நான் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் உள்ளவைகளை நான் குறைத்ததும் இல்லை, மாற்றினதும் இல்லை. இதின் ஆதி முதல் அந்தமட்டுமுள்ள சுவிசேஷ போதனைகளை மனதில் வற்புறுத்தவும், இதை வாசிப்போர் இதின்மேல் பிரியங்கொள்ளவுமான இனிய நடையில் இதை எழுதி முடிக்க வேண்டும் என்பதே என் பிரதான நோக்கமாயிருந்தது." [1]

மொழியாக்கம்

கிருபா பாய் சத்தியநாதன் எழுதிய கமலா (1896), மற்றும் சகுணா (1898) நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தது சாமுவேல் பவுலின் முக்கியமான இலக்கியப் பணியாகும்.

சரிகை தலைப்பாகை சிறுகதை - கதம்பம் இதழ் குறிப்பு
தமிழின் முதல் சிறுகதை

நற்போதகம் இதழில் தேவனின் மகிமையை விளக்கும் சிறு சிறு கதைகளை எழுதியிருக்கிறார் சாமுவேல் பவுல். 1877-ல், சாமுவேல் பவுல் எழுதிய 'சரிகைத் தலைப்பாகை' சிறுகதையைத் தான் தமிழின் முதல் சிறுகதையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப். இது குறித்து அவர், "1877 ஜூலை 'நற்போதகம்' இதழில் 'சரிகைத் தலைப்பாகை' என்ற ஒரு சிறுகதையைப் படித்து சிலிர்த்தும் கழித்தும் நின்றேன் சிந்திக்கலானேன் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட 'பூக்கடை 'என்ற இதழிலும் வெளியானது (1890-களில்). எழுதியவர் பெயர் இவ்விதழில் இடம்பெறவில்லை. ஆனால் இக்கதையை எழுதியவர் அருள்திரு.சாமுவேல் பவுல் ஐயர்" என்கிறார். [2]

ஆனால், 1890-ல் தான் சாமுவேல் பவுல் நற்போதகம் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னமேயே அவ்விதழில் அவர் அச்சிறுகதையை எழுதியிருக்க வாய்ப்புள்ளது என்றாலும், சாமுவேல் பவுலின் வாழ்க்கை வரலாற்றில், அவர் எழுதிய படைப்புகளின் பட்டியலில் (1867-1900) மேற்கண்ட சிறுகதையைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை என்பதால் ஆர்.எஸ். ஜேக்கப் அவர்களின் கூற்று விரிவான களத்தில் ஆராயத்தக்கது.

மறைவு

கிறிஸ்துவைப் போல் ஜீவித்தல் என்ற நூலை எழுதத் தொடங்கி, அதற்காக உழைத்துக் கொண்டிருந்த சாமுவேல் பவுல், திடீர் உடல்நலக் குறைவால் மார்ச் 11, 1900 அன்று காலமானார்.

வரலாற்று இடம்

அச்சுப் புத்தகங்கள் வெளியான ஆரம்பக் காலக்கட்டங்களில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு முக்கியப் பங்களித்தவர் சாமுவேல் பவுல். மதப் பரப்புரையாளராக இருந்ததோடு கூடவே மொழிபெயர்ப்பாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். திருநெல்வேலிப் பகுதியில் கிறிஸ்தவம் வளர்த்த முன்னோடிகளுள் ஒருவராக இவர் மதிப்பிடத்தகுந்தவர்.

சாமுவேல் பவுலின் நூல்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்க வெளியீடு
 • பரதேசியின் மோட்சப் பிரயாணம்
 • ஆத்துமநேசரின் அங்க மத்துவம்
 • தியானச் சோலை
 • தியான ஆலயம்
 • உங்களோடு ஒரு நிமிடம்
 • கர்த்தருடைய ஜெபம்
 • புதிய ஏற்பாட்டுப் புருஷர்
பிற பதிப்பக நூல்கள்
 • வேத சித்தாந்த பிரமாணங்கள்
 • ஜெப புஸ்தக சரித்திரம்
 • ஜெப புஸ்தகத் திறவுகோல்
 • வேத புருஷர்
 • வேத ஸ்திரீகள்
 • குடும்ப ஜெபம்
 • துக்க சாகரத் தோணி
 • இயேசு கிறிஸ்துவின் ஜீவியம்
 • பாவமில்லாத தீர்க்கதரிசி
 • இஸ்லாம் மார்க்கம்
 • ஆத்தும நேசரின் பாதம்
 • இங்கிலாந்து திருச்சபைச் சரித்திரம்
 • கர்த்தருடைய ஜெபப்பிரசங்கம்
மொழிபெயர்ப்புகள்

மற்றும் பல நூல்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page