தனி அரசு (இதழ்)
தனி அரசு (1948) திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு இதழ். ஏ.வி.பி. ஆசைத்தம்பி இதன் ஆசிரியர். 1948-ல், மாதமிரு முறை இதழாக வெளிவந்த தனி அரசு, 1958 முதல் நாளிதழாக வெளிவந்தது. தி.மு.க.வின் கொள்கைப் பிரச்சார இதழாக வெளிவந்தாலும் இலக்கியத்திற்கும் இவ்விதழ் இடமளித்தது.
பதிப்பு, வெளியீடு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை மக்களிடையே பரப்பவும், கழகம் பற்றிய செய்திகளை, அறிவிப்புகளை, தலைவர்களின் செயல்பாடுகளை இயக்கத்தவர், மக்கள் அறிந்து கொள்ளவும் தொடங்கப்பட்ட இதழ் தனி அரசு. 1948-ல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெருந் தலைவர்களுள் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பி இவ்விதழைத் தொடங்கினார். இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டார். பிற்காலத்தில் பி.வி. கிரி துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ப.சி.அ. வணங்காமுடி, சோ. ரங்கநாதன், பி.எல். இராசேந்திரன் போன்றோர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினர். தனி அரசு முதலில் விருது நகரிலிருந்தும் பிறகு சென்னையிலிருந்தும் வெளிவந்தது.
தனி அரசு இதழ், மாதம் இருமுறை இதழாக 40 பக்கங்களுடன் வெளிவந்தது. பின் வார இதழாக வெளிவந்தது. 35,000 பிரதிகள்வரை விற்பனையானது. 1955-ல், தனி அரசு இதழின் விலை மூன்று அணாவாக இருந்தது. 1958 முதல் 1963 வரை நான்கு பக்கங்கள் கொண்ட நாளிதழாக வெளிவந்தது.
உள்ளடக்கம்
தனி அரசு வார இதழ்
தனி அரசு வார இதழின் முகப்புப் பக்கத்தில் கேலிச் சித்திரம் இடம் பெற்றது. இதழின் தலையங்கத்தை ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதினார். சிறுகதைகள், தொடர்கதைகள். திரைப்பட விளம்பரங்கள், புத்தக மதிப்புரை, தமிழறிஞர்களின் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றோடு 'பேனா நண்பர்கள் சங்கம்' என்ற பகுதியும் 'விவாதப் பகுதி'யும் இதழ்தோறும் இடம்பெற்றன. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. ஒவ்வொரு பக்கத்திலும் மாஜினி, பாரதியார், சாக்ரடீஸ், பிளேட்டோ முதலான அறிஞர்களின் பொன்மொழிகள் இடம் பெற்றன. கேள்வி-பதில் பகுதி இடம் பெற்றது. சினிமா அறிவுப் போட்டி ஒன்றும் தொடர்ந்து வெளியானது. 'உலக வரலாற்றில் நாம்' என்னும் தலைப்பில் அண்ணாவின் உரை வெளிவந்தது.
ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய 'அரச குமாரி' என்னும் தொடர்கதை வெளியானது. சிறுகதைகளும் தனி அரசு இதழில் இடம் பெற்றன. 'நமது விமர்சனம்' என்ற தலைப்பில் நூல் விமர்சனங்களும் இவ்விதழில் வெளியாகின. சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் 'வெட்டு 1 துண்டு - 2', 'பறக்குது பார்' போன்ற பகுதிகள் இடம் பெற்றன.
தனி அரசு நாளிதழ்
தனி அரசு இதழ், 1958 முதல் 1963 வரை நான்கு பக்கங்கள் கொண்ட நாளேடாக வெளிவந்தது. நாள்தோறும் கேலிச் சித்திரம் இடம் பெற்றது. ஓவியர் கணேஷ் இதனை வரைந்தார். திராவிட முன்னேற்றக் கழகச் செய்திகள் உடனுக்குடன் வெளிவந்தன. மாநாட்டுச் செய்திகளும் விரிவான அளவில் படங்களுடன் வெளியிடப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் உரைகள் முழு அளவில் இடம் பெற்றன. இவ்விதழை 'கழக தினத்தந்தி' என திராவிட முன்னேற்றக் கழகத்தவர் குறிப்பிட்டனர். தனி அரசு நாளிதழின் விலை இரண்டணா.
பங்களிப்பாளர்கள்
- சி.என். அண்ணாத்துரை
- இரா. நெடுஞ்செழியன்
- ஏ.வி.பி. ஆசைத்தம்பி
- வெ. சாமிநாத சர்மா
- கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை
- டாக்டர் மா. இராசமாணிக்கனார்
- பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம்
- தெ.பொ. மீனாட்சிசுந்தரம்
- கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்
- பி.வி. கிரி
- ப.சி.அ. வணங்காமுடி
- கெ. பக்தவத்சலம்
- இ.எல்.எம். செளந்திரபாண்டியன்
- மஞ்சூர்
- கௌந்தி
- ரங்கநாதன் பி.எல்.
- இராசேந்திரன்
- சண்முகம்
- எல். இராமதாஸ்
- நீ. தில்லைநாதன்
- சி.ஜே. மார்த்தாண்டன்
- தன. நடராசன்
- கோ. வெற்றிவீரன்
- அன்பு ராஜாமணி
- 'கலவை' பா. வரதன்
நிறுத்தம்
1963 வரை வெளிவந்த தனி அரசு பின் பொருளாதாரச் சூழல்களால் நின்று போனது.
வரலாற்று இடம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்த்த முக்கிய இதழ்களுள் ஒன்றாக தனி அரசு மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- திராவிட இயக்க இதழ்கள்: தொகுதி-2, பதிப்பாளர்கள்: இ. சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Jun-2023, 20:19:34 IST
