under review

சோழன் நல்லுருத்திரன்

From Tamil Wiki

சோழன் நல்லுருத்திரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

சோழன் நல்லுருத்திரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். புறநானூற்றில் வரும் நல்லுருத்திரனும், கலித்தொகையில் வரும் சோழன் நல்லுருத்திரனும் ஒருவரே என்று புலவர் கா. கோவிந்தன் 'சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3' நூலில் கூறினார். 'சங்க இலக்கியம் பாட்டும் தொகையும்' நூலைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்துள்ள எஸ். வையாபுரிப்பிள்ளை கலித்தொகைப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரன் வேறு, புறநாற்றுப் பாடலைப் பாடிய சோழன் நல்லுருத்திரன் வேறு என்று கருதினார். பார்க்க: நல்லுருத்திரன்

இலக்கிய வாழ்க்கை

சோழன் நல்லுருத்திரன் பாடிய பாடல் புறநானூறில் 190-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. பிறருடைய முயற்சியில் வாழும் சிறியோரின் நட்பை தவிர்த்து தன் முயற்சியால் வாழும் நல்லோரின் நட்பைப் பெறல் என்னும் பொருளில் பொதுவியல் திணையில் பொருண்மொழிக்காஞ்சி துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பிறரது முயற்சியால் வாழும் சிறியோர்களுக்கு உவமையாக எலி கூறப்பட்டுள்ளது. நன்கு விளைந்திருக்கும் காலத்தில் நெல்-மணிக் கதிர்களைக் கொண்டுபோய்த் தன் வளையில் பதுக்கிக்கொள்ளும் எலி போன்றோர் நட்பு வேண்டாம்.
  • தன் முயற்சியால் வாழும் நல்லோருக்கு உவமையாக புலி கூறப்பட்டுள்ளது. தான் கவ்விய காட்டுப் பன்றி தன் இடப்பக்கமாக விழுந்தது என்பதற்காக அதனை உண்ணாமல் பட்டினி கிடந்து மறுநாள் யானை வேட்டைக்கு முயலும் புலி போல் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட மானமுள்ளவர் நட்பு வேண்டும்

பாடல் நடை

புறநானூறு - 190

  • திணை: பொதுவியல்
  • துறை:பொருண்மொழி காஞ்சி

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Sep-2025, 19:52:11 IST