under review

நல்லுருத்திரன்

From Tamil Wiki

நல்லுருத்திரன் சங்க காலப் புலவர். புறநானூற்றிலும், கலித்தொகையிலும் அவரது பாடல்கள் இடம்பெறுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

புறநானூற்றில் வரும் நல்லுருத்திரனும், கலித்தொகையில் வரும் சோழன் நல்லுருத்திரனும் ஒருவரே என்று புலவர் கா. கோவிந்தன் 'சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3' நூலில் கூறினார். 'சங்க இலக்கியம் பாட்டும் தொகையும்' நூலைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்துள்ள எஸ். வையாபுரிப்பிள்ளை கலித்தொகைப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரன் வேறு, புறநாற்றுப் பாடலைப் பாடிய சோழன் நல்லுருத்திரன் வேறு என்றார்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றில் உள்ள 190-ஆவது பாடலும். கலித்தொகையில் பதினேழு முல்லைத் திணைப் பாடல்களும் நல்லுருத்திரனார் பாடியவை. முல்லைத்திணைப் பாடல்கள் வழி மெல்லிணர்க்கொன்றை, மென்மலர்க்காயா, தண்ணறும்பிடவம், தவழ்கொடித்தளவம், புல்லிலை வெட்சி, குல்லை, குருந்து, கோடல் போன்ற முல்லை நிலத்துக் காட்சிகளைக் கூறுகிறார். கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றிய செய்து உள்ளது.

பாடல் நடை

  • புறநானூறு: 190

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ! 5
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்,
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!

  • முல்லைக்கலி

ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி

உசாத்துணை


✅Finalised Page