under review

செவ்விலக்கியச் சாரம்-பல்துறை நோக்கில் (நூல்)

From Tamil Wiki
செவ்விலக்கியச் சாரம் நூல்

செவ்விலக்கியச் சாரம் - பல்துறை நோக்கில் (2014) தமிழ் இலக்கியம் சார்ந்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. இதனை எழுதியவர் முனைவர் நா. சுலோசனா. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை வெளியிட்டது.

வெளியீடு

செவ்விலக்கியச் சாரம் (பல்துறை நோக்கில்) நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2014-ல் வெளியிட்டது. இந்நூலின் ஆசிரியர்: முனைவர் நா. சுலோசனா.

நூல் அமைப்பு

செவ்விலக்கியச் சாரம் நூலில் கீழ்க்காணும் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன.

உள்ளடக்கம்

செவ்விலக்கியச் சாரம் நூலில் பழந்தமிழர்களின் தொல்வணிகமான பண்டமாற்றுமுறை, ஐந்திணை மக்களுக்குரிய உறவு மேம்பாடு, பழந்தமிழர் ஒரு பொருளைக் கொடுத்துப் பொருளுக்குரிய காசைப் பெறாமல் பண்டமாற்றாக வேறொரு பொருளைப் பெற்ற விதம் போன்ற செய்திகள் ஆராயப்பெற்றுள்ளன. தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, தோழி கூற்றுகளின்வழி ஐங்குறுநூற்றில் உவமை, உளவியல் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. நாடகத்திற்கான சூழல், களம், காட்சி போன்றவை வகைப்படுத்தப்பட்டு, கலித்தொகையில் நாடகக் கூறுகளாக அவை அமைந்த விதம் விளக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஓர் அறிவியலாளர், உளவியலாளர் என்ற கருத்துக்கள் ஆய்வு வழி முன் வைக்கப்பட்டுள்ளன. ஊர்ப்பெயர்களால் பெயர் பெற்ற புலவர்கள், அன்றைய காலக்கட்ட ஊர்ப்பெயர்கள், அப்பெயர்கள் இன்றைய வழக்கிலுள்ள நிலை புறநானூற்றின்வழி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்ற 99 வகையான மலர்களுள் மருத்துவக் குணம் கொண்ட மலர்களை வகைப்படுத்திப், பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தச்சர்கள், சிற்ப வேலைப்பாடுகள், ஓவியங்கள் இவற்றைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. மொழிநடை, வேற்றுமை உருபுகள், உவமை என்னும் இலக்கண நோக்கிலான கட்டுரைகளும் இடம் பெற்றன.

நூலிலிருந்து ஒரு சிறு பகுதி

பண்டமாற்று

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான உணவுப் பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்றாகப் பெற்றுக் கொண்டுள்ளனர். நானிலப் பாகுபாட்டில் ஒவ்வொரு நிலத்திலும் அந்நிலத்தில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக்கொண்டனர்.

முல்லை நில மக்களின் பண்டமாற்று முறை

முல்லைநில மக்கள் தங்களிடம் இருக்கும் நெய்க்கு விலையாகக் கட்டிப் பசும்பொன்னைப் பெறாமல் தங்களுக்கு வளம் சேர்க்கும் பசு, பெண் எருமை போன்றவற்றைப் பெற்றனர் என்பதை,

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பொறூஉம்
மடிவாய்க் கோவலர் (பெரும்பாண்; 164-166)

-எனப் பெரும்பாணாற்றுப்படை நூல் சுட்டுகிறது. இதன்வழி அவர்கள் வாணிகத்தைப் பெருக்கிக் கொண்டனர்.

குறிஞ்சிநில மக்களின் பண்டமாற்று முறை

குறிஞ்சிநில மக்களின் தொழில் வேட்டையாடுதலாகும். அவ்வகையில் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களைக் கொடுத்து அதற்குப் பதிலாகக் கள் விற்கும் கடையில் மதுபானம் அருந்தியதை,

வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி (அகம். 61, 7-12)

பகைவரின் மார்புகளில் அம்பினைப் பாய்ச்சுகின்ற இளைஞர்கள் யானையின் வெண்மையான தந்தங்களோடு கள்ளினையும் கொண்டு விற்று அதனால் பெற்ற நெல்லினால் சிறப்புச் செய்தவன் புல்லி என்னும் மன்னன் ஆவான் என்று மாமூலனார் குறிப்பிடுவதன் வழி, யானைத் தந்தங்களுக்குப் பதிலாக நெல்லினைப் பெற்றமையை இப்பாடலடிகளின் வழி அறிந்துகொள்ள முடிகிறது.

மதிப்பீடு

செவ்விலக்கியச் சாரம் - பல்துறை நோக்கில் நூல் பண்டைத் தமிழர்களின் வாழ்வியலை, சிறப்பைப் பேசுகிறது. பல்துறை நோக்கில் தமிழர்கள் அறிவார்ந்தவர்களாகவும் வானியல் தொடங்கி அறிவியல் வரை பல்துறைச் செய்திகளை அறிந்தவர்களாக இருந்தார்கள் என்பதையும் இந்நூல் அறியத் தருகிறது. செவ்விலக்கியச் சாரம் நூல் பல களங்களில் அக்காலத் தமிழர்கள் மேம்பாடு அடைந்திருந்ததைக் கூறும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-May-2024, 17:02:51 IST