under review

செய்யிது ஆசியா உம்மா

From Tamil Wiki

செய்யிது ஆசியா உம்மா (பொ.யு. 1868-1948) கீழக்கரையில் வாழ்ந்த இஸ்லாமிய மதஞானி. சூஃபி மரபில் வந்தவர். சூஃபி இலக்கியங்களை படைத்தவர்

பிறப்பு, இளமை

வள்ளல் சீதக்காதியின் தம்பி பட்டத்து மரைக்காயர் என்னும் முகம்மது அப்துல் காதிர் மரைக்காயரின் மகனாகிய முகம்மது அபூபக்கர் மரைக்காயருக்கும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மகள் சாறா உம்மாவுக்கும் பிறந்த வள்ளல் அவ்வாக்காறு மரைக்காயர் எனப் புகழ்பெற்ற அப்துல்காதிர் மரைக்காயர். இவரே கீழக்கரை ஜூமாப் பள்ளிவாயிலையும் கீழக்கரை புதுப் பள்ளிவாயிலையும் காயல்பட்டணம் புதுப்பல்ளி வாயிலையும் கட்டுவித்தவர். அவரின் மகள் வயிற்றுப் பேரரே இரண்டாம் சீதக்காதி என அழைக்கப்பெறும் ஹபீபு அரசர் என அறியப்படும் ஹபீபு முகம்மது மரைக்காயர்.

ஹபீபு மரைக்காயரின் இளைய சகோதரரின் பேர்த்தி ஆசியா உம்மா. தந்தை பெயர் ஹபீபு முகம்மது மரைக்காயர். ஆசியா உம்மாவின் மூதாதையர்கள் எட்டையபுர மன்னர்களுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தனர். இவருடைய குடும்ப முன்னோர்களில் ஒருவரான ஹபீபு அரசர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கும் புனித மக்காவுக்கும் இடையே கிணறு தோண்டியது சிறப்புக்குரியதாக நினைவுகூரப்படுகிறது. சேதுபதி மன்னரின் அனுமதியுடன் கீழக்கரையில் 1754-ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட வர்த்தகப் பண்டகசாலை ஆசியா உம்மாவின் முன்னோர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் பல கப்பல்களுக்கு உரிமையாளர்களாக இருந்து கடல் வணிகத்தில் முனைந்திருந்தனர்.

ஆன்மிக வாழ்க்கை

ஆசியா உம்மா இளமையில் கீழக்கரையில் வாழ்ந்த கல்வத்து நாயகம் சையிது அப்துல் காதிர் அவர்களின் முதன்மைச் சீடரானார். பெரும்பாலும் இறைத்தியானம், தொழுகை ஆகியவற்றில் ஈடுபட்டு வீட்டுமாடியில் தனிமையாகக் காலத்தைச் செலவிட்டார். அதனால் 'மேல்வீட்டுப் பிள்ளை’ என்ற செல்லப்பெயர் சூட்டி அழைத்தார்கள். ஒசக்கம்மா என்னும் பெயரும் இவருக்கு இருந்தது. புனித ஹஜ் கடமையை ஆற்றினார்

இலக்கியவாழ்க்கை

அப்துல் ஹன்னான் என்கிற புலவரிடம் கவிதையியலும் அரபு மொழியிலக்கணமும் கற்றவர் ஆசியா உம்மா. தன் குருநாதர் ஹல்வத் நாயகத்தைச் சந்திப்பதற்கும் கீழக்கரைக் கடற்கரையில் தனது தென்னந்தோப்புக்குச் சென்று தியானிப்பதற்கும் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருவது வழக்கம். இவர் வசித்த இல்லம் கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளிக்கு அருகில் இருந்திருக்கிறது. இவர் அரபுத்தமிழ் வடிவில் எழுதினார். இவருடைய பாடல்களை அரபுத் தமிழிலிருந்து தமிழ் எழுத்து வடிவத்துக்குக் கொண்டு வந்தவர் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த புலவர் அகமது பஷீர்.

ஆசியா உம்மா பாடிய பாடல்கள் 'மெய்ஞான தீப இரத்தினம்', 'மாலிகா இரத்தினம்' ஆகிய தொகுப்புளாக வெளிவந்துள்ளன. கண்ணி, விருத்தம், துதி, இன்னிசை, ஆனந்தக்களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை, தாலாட்டு ஆகிய யாப்பு வடிவங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். மகான் ஆரிபு நாயகர், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகர், குணங்குடி மஸ்தான் சாகிபு, இமாம் கஸ்ஸாலி முதலானோரைச் சிறப்பிக்கும் கருப்பொருளைக் கொண்ட பாடல்களை எழுதினார். அல்லாஹ்வின் 99 பெயர்களைச் சிறப்பிக்கும் அஸ்மாவுல் ஹூஸ்னா முனாஜாத்தும், 99 நாமங்கள் எனும் மற்றொரு பாடல் தொகுப்பும் உள்ளன

ஆசியா உம்மா தமது குடும்ப முன்னோர்களின் திருப்பணிகளைச் சிறப்பித்து பாடல்கள் இயற்றினார். 'ஹபீபு அரசர் மாலை', 'கல்வத்து நாயகம் முனாஜாத்து', 'கல்வத்து நாயகம் துதி', 'கல்வத்து நாயகம் இன்னிசை', 'பல்லாக்கு தம்பி முனாஜாத்து', 'பல்லாக்கு ஒலி துதி' ஆகியவை குறிப்பிடத்தக்கவை

ஆசியா உம்மா இயற்றிய 'ஞான ரத்தினக் கும்மி' 110 கண்ணிகளைக் கொண்டது. ஞானத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி தனது முன்னால் நிறுத்தி, 'ஞானப் பெண்ணே’ என அழைத்துப் பாடும் கும்மிப் பாடல்கள் இவை.

கருத்தை உன்னிலே தான் அடைத்து
இறைக் காதலே மிக ஆசை கொண்டால்
பொருந்தும் பூலோக வானலோகம்
எல்லாம் புகழாம் இரத்தின ஞானப் பெண்ணே!
(இரத்தின ஞானக்கும்மி)
கர்ப்பப்பைக்குள் கண் சிரசு கைகால் வாய் மூச்சு சப்தம்
அற்புதமாய் இன்ஸானாய் அமைத்த அறிவானந்தமே!
இன்ஸானுக்குள்ளே இறை ஈரேழு லோக மெல்லாம்
இன்ஸான் தானாக இலங்குது அறிவானந்தமே!
(அறிவானந்தக் கண்ணி)

நூல் வெளியீடு

ஆசியா உம்மாவின் பேத்தி அகமது மரியத்தின் முயற்சியினால்' மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்' நூல் அச்சிடப்பட்டது. பின்னர் செய்யிது ஆசியா உம்மாவின் மகன் இ.சு.மு.அப்துல் காதிர் சாஹிப் மரைக்காயரின் மனைவி இ.சு.மு.ரஹ்மத்பீவி உம்மா இந்த நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.

நூல்கள்

  • மெய்ஞான தீப இரத்தினம்
  • மாலிகா இரத்தினம்
  • 99 நாமங்கள்
  • அஸ்மாவும் ஹூஸ்லா முனாஜாத்
  • ஞானரத்தினக்கும்மி
  • ஹபீபு அரசர் மாலை
  • கல்வத்து நாயகம் முனாஜாத்து
  • கல்வத்து நாயகம் துதி
  • கல்வத்து நாயகம் இன்னிசை
  • பல்லாக்கு தம்பி முனானாத்து
  • பல்லாக்கு ஒலி துதி

மறைவு

ஆசியா உம்மா எண்பது வயதில் 1948-ம் ஆண்டில் கீழக்கரையில் காலமானார், குடும்ப முன்னோர் ஹபீப் அரசரின் நினைவு வளாகத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

இலக்கிய இடம்

"தமிழ்மொழி அரபு எழுத்துக்களில் எழுதப்படும் அரபுத்தமிழ் தமிழிலக்கியத்தின் வளமிக்க ஒரு பாதை. அதில் பெரும்பாலும் மதநூல்களே எழுதப்பட்டுள்ளன. இலக்கியச்சுவை மிக்க நூல்களில் ஆசியா உம்மாவின் கவிதைகளுக்கே முதன்மை இடம். அவரை தமிழின் முதன்மையான பெண்கவிஞர்களின் வரிசையில் வைக்கமுடியும். குணங்குடி மஸ்தானைப் பலரும் அறிவர். ஆனால் சமகாலத்தில் சூஃபி ஞானி, செய்யிது ஆசியா உம்மாவைப் பலர் அறியவில்லை. இவர் எழுதியுள்ள மெய்ஞானப் பாடல்கள் எவ்விதமான போலித்தனமும் அற்ற சுயமுத்திரை கொண்ட எளிமையான உயிரோட்டத்தில் பிறந்தவை" என்று பிரமிள் ( பாதையில்லாப் பயணம்) குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page