under review

குணங்குடி மஸ்தான் சாகிபு

From Tamil Wiki

To read the article in English: Kunangudi Masthan Sahib. ‎

குணங்குடி மஸ்தான்
குணங்குடி மஸ்தான்

குணங்குடி மஸ்தான் சாகிபு (சுல்தான் அப்துல் காதிர்) (கி.பி. 1792 – 1838) ஓர் இஸ்லாமிய சூஃபி இறைஞானி. தமிழிலும், அரபியிலும் புலமை பெற்றவர். இளமையிலேயே துறவு பூண்டவர். பக்தி உணர்வு மிக்க இவரது பாடல்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானவை. குணங்குடியாருடைய பாடல்கள் இஸ்லாமியக் கருத்துக்கள் கொண்டவையாயினும் சமரச நோக்கம் கொண்டவை என்பதால் மதங்களைக் கடந்து புகழ் பெற்றவை. தமிழ் சித்த மரபினரில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவில் உள்ள குணங்குடி என்ற சிற்றூரில் 1792-ஆம் ஆண்டு நயினார் முகம்மது - பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தார்.(ஹிஜ்ரி 1207)ம் அவருடைய தாய்வழிப் பாட்டன் முல்லா ஹூசைன் நபி (ஸல்) வழி வந்தவர் என குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய அரபு மொழி இரங்கல் பாடலில் குறிப்பிடுகிறார்.

தரீக்கா (Thareeka) என்ற சொல்லுக்கு வழி பாதை என்று பொருள். இறைவனை அறியவும் அவனை அடையவும் வழிகாட்டும் வழிகள் என்று அர்த்தம். கீழக்கரையில் இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீக்காவின் ’தைக்கா சாஹிபு’ என்றழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் இஸ்லாமிய சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றார்.

குணங்குடி மஸ்தான் சாயபு தர்கா, சென்னை

தனிவாழ்க்கை

1813-ல் தாய்மாமன் மகள் மைமூனை மணமுடித்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்த போது, அதை மறுத்து தன் 17-ஆம் வயதில் குடும்பத்தை துறந்தார்.

ஆன்மீக வாழ்க்கை

1813-ஆம் ஆண்டில் திரிசிரபுரத்து ஆலிம் மௌல்வி ஷாம் சாகிபுவிடம் இஸ்லாமிய யோக நெறியில் தீட்சை பெற்றார். இதன் பின்னர் "சிக்கந்தர் மலை" என்று அறியப்படும் திருப்பரங்குன்றத்திற்குச் சென்று அங்கு நாற்பது நாட்கள் 'கல்வத்’ எனப்படும் தனிமைத் தவத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் அறந்தாங்கி நகருக்கு அருகில் உள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்கள் தங்கி தவம் இயற்றினார். தொண்டியில் தன் தாய்மாமனின் ஊராகிய வாழைத்தோப்பில் நான்கு மாதங்கள் தங்கி தவம் புரிந்தார். காதிரிய்யா தரீக்காவின் முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானியை தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் அலைந்து திரிந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார். உலகப்பற்றை நீக்கி பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இஸ்லாமிய இறைப் பித்தரானார். மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு.

ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, வடஇந்தியா சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். பின்னர் வடசென்னையில் ராயபுரத்தில் பாவா லெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற பகுதியில் தங்கினார். பாவா லெப்பை இவருக்கு 'தைக்கா’ (ஆஸ்ரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். அங்கே தவவாழ்க்கை மேற்கொண்டார்.

குணங்குடியார் இஸ்லாமியச் சூஃபி ஞானியாக இருந்தபோதிலும் அவரது சமரச நோக்கின் காரணமாக அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். ஐயாசாமி முதலியார் (குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி எழுதியவர்), மகாவித்துவான் திருத்தணிகை சரவணப்பெருமாளையர் (நான்மணிமாலை), வெங்கட்ராயப்பிள்ளை கவிராயர், கோவளம் அருணாசலம் முதலியார் மகன் சபாபதி (தோத்திரப் பாடல்கள்), காயற்பட்டினம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை (வாயுரை வாழ்த்து) ஆகியோர் இவரது சீடர்களில் முக்கியமானவர்கள்.

பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் 'சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்ததால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – பின்னர் தண்டையார் பேட்டை ஆயிற்று.[1]

இந்திய தமிழ் இஸ்லாம் மரபு

இந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை இந்த பண்பாட்டுத் தொகுப்பில் இருந்து வந்தவையே.[2]

தமிழகத்தில் இஸ்லாமிய ஆன்மீகத்தை பதினாறாம் நூற்றாண்டில் சதக்கத்துல்லா அப்பா மறுவரையறை செய்தார். அவர் முன்வைத்ததை தமிழ் இஸ்லாம் மரபு என்று சொல்லலாம். தமிழகத்தின் பொதுப்பண்பாட்டில் இருந்த பிற ஆன்மீக அம்சங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொண்டு அது உருவானது. குணங்குடி மஸ்தான் அந்தத் தமிழ் இஸ்லாமின் வழி வந்தவர்.[3]

இலக்கியப் பணி

தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் குணங்குடியாரின் பாடல்கள் எளிமையான அழகிய கவித்துவம் கொண்டவை. மஸ்தான் சாகிபு நாயகி நாயக பாவங்களில் அல்லாவைப்பற்றி பாடியிருக்கிறார். தன் மனதின் மணியாகிய அல்லாவை 'மனோன்மணியே’ என்றழைத்து, பெண்ணாக உருவகித்து தன்னை பெருங்காதலனாக வைத்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் புகழ்பெற்றவை; கற்பனை வளமும் கவிதை நயமும் தத்துவச் செறிவும் கொண்டவை:

மெய்தழுவவும் இருவர் மெய்யோடு மெய்நெருங்கக் 
கைதழுவவும் கனவு கண்டேன் மனோன்மணியே
கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே
துவளும் துடியிடையும் தோகை மயில் நடையும்
பவள இதழும் என்று பார்ப்பேன் மனோன்மணியே
கூந்தலுக்கு நெய் தோய்த்துக் குளிர் மஞ்சள் நீராட்டி
வார்த்து சிங்காரித்து வைப்பேன் மனோன்மணியே
என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உந்தனுக்கே
உன்னை விட்டால் பெண்ணெனக்கு உண்டோ மனோன்மணியே!

குணங்குடியார் இயற்றிய பராபரக் கண்ணி மொத்தம் நூறு பாடல்களை கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது. இவை தாயுமானவர் பாடல்கள் போல் செய்யுள் அமைப்பும் தத்துவக் கொள்கையும் கொண்டவை.

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெரும்
சோதியாய் நிர்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே
வேத மறைப்பொருளை வேதாந்தத்து உட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
நாவால் புகழ்க்கு எட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. தன் குருநாதரான முஹியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி பற்றிய பாடல்கள் கொண்ட முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. முதற்கட்ட பாடல்கள் அல்லாஹ், இருள், பிரபஞ்ச உருவாக்கம் குறித்த தோற்றவியல் அறிவை விரிவாகப் பேசுகிறது. இப்பாடல்களில் அரபுச் சொற்கள், உருதுச் சொற்கள், பாரசீகச் சொற்கள் நிறைய இடம்பெற்றிருந்தன.

குருவின் சர்வ வல்லமையை போற்றிப் புகழ்ந்து,

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள் அடக்கி விளையாட வல்லீர்,  
அகிலம் ஈரேழினையும் ஆடும் கறங்குபோல் ஆட்டி விளையாட வல்லீர்"

எனப் பாடுகிறார்.

அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது. குருவருள்நிலை, தவநிலை, துறவுநிலை, நியமன நிலை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுகின்றன. அகத்தீசன் சதகத்தில்,

'கொள்ளிவைத்து உடலைக் கொளுத்துமுன் முச்சுடர்க்

கொள்ளிவைத் தருள் புரியவும்’

என்று வேண்டுகிறார். முச்சுடர்க் கொள்ளி என்பது யோகக்கனலைக் குறிப்பது.

இதைத் தவிர ஈரடிகளாலான கண்ணி வகைப் பாடல்களும் பல பாடியிருக்கிறார். நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, றகுமான் கண்ணி, எக்காளக் கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி என்பவை அவற்றுள் சில.

தொகுப்பும் பதிப்பும்

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைத் தொகுத்து பாதுகாத்து வைத்திருந்தவர் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த சீயமங்கலம் அருணாசல முதலியார், தொகுத்து வெளியிட உதவியவர் சேகனாப் புலவர் என்னும் புலவர் நாயகம் அவர்கள்.

தமிழ் நூல் விவரணப்பட்டியலைத் தொகுத்த மேற்கத்திய அறிஞர் ஜாண் மார்டாக் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களின் பதிப்பு வரலாறு பற்றி குறிப்பிடும்போது இந்துக்கள் குணங்குடி மஸ்தானை தம் ரிஷிகளில் ஒருவராகக் கருதியதால் அவர் பாடல்களை திரும்பத்த திரும்ப அச்சிடுகின்றனர் எனக் கூறுவதை ரா. முத்துக்குமாரசாமி தனது "சூபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும்" என்ற ஆய்வில் மேற்கோள் காட்டுகிறார். அவர் சுட்டிக் காட்டும் தகவல்கள்[4]:

குணங்குடியாரின் பாடல்களை அருணாசல முதலியாருக்குப் பிறகு ஜூன் 1874-ல் சி. நாராயணசாமி முதலியார் பதிப்பித்துள்ளார். 1875 டிசம்பரில், மிகக் குறுகிய காலத்திற்குள் இப்பாடல் தொகுப்பு பத்தாம் பதிப்பை கண்டுள்ளது. கோட்டாறு கா.ப. ஷெய்குத் தம்பிப் பாவலர் பதிப்பு பார்த்து அமரம்பேடு அரங்கசாமி முதலியார் 1921-ல் மற்றுமொரு பதிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து 1923-ல் கே.வி. துரைசாமி முதலியார் மஸ்தான் சாகிபு திருப்பாடல் திரட்டை வெளியிட்டார். மஸ்தான் சாகிபின் திருப்பாடல் திரட்டு என்பதாக வெளிவந்த பதிப்பு முதல் முறையாக பிரபண்ண வித்துவான் காஞ்சீபுரம் இராமஸ்வாமி நாயுடு அவர்களைக் கொண்டு பதவுரை, விசேஷ உரையோடு வெளிவந்தது. மூலத்தையும் உரையையும் செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெயினா முகமது பாவலர் சரிபார்த்திருந்தார். இக்குறிப்புரையுடன் 1905-ல் திரிபுர சுந்தரிவிலாசம் அச்சகம் வெளியிட்டது. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிப்பு 1916 மற்றும் 1925-களில் வெளி வந்தது.

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களுக்கான விரிவான உரையை எழுதியவர் மா. வடிவேலு முதலியார் அவர்கள். 1908-ல் பூ.ச. துளசிங்க முதலியார் விரிவுரையோடு கூடிய பதிப்பை வெளியிட்டார். 1928-ல் இரண்டாம் பதிப்பை வடிவேலு முதலியார் உரையுடன் சென்னை ஷாஹுல் ஹமீதியா நிறுவனம் வெளியிட்டது.

குணங்குடி மஸ்தான் மரணமடைந்து ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டிற்குப் பிறகு (144 ஆண்டுகள்) முதன்முதலாக 1970-களில்தான் திருத்தணி என்.ஏ.ரஷீத் என்ற ஒரு முஸ்லிம் இலக்கியச் செல்வரின் உரை விரிவாக்கத்தோடு ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல் தொகுப்பும் உரையும் வெளிவந்தது.

அழகியல்

சூஃபி மரபு இஸ்லாமின் முக்கியமான ஆன்மிக சாரம். தமிழின் சூஃபி மரபு அப்போது இருந்த பக்தி இயக்கத்தின் அழகியலை உள்வாங்கிக் கொண்டு உருவானது. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் மொழி நடை, செய்யுள் வடிவம், உணர்வெழுச்சி ஆகியவை பக்தி இயக்கத்தின் மரபை பின்பற்றுபவை. அதனால் இவரது பாடல்கள் மத எல்லைகளைக் கடந்து பக்தி இயக்கத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் உவப்பானவையாக ஆயின.

சூஃபி மெய்ஞானம் நுண்மையானது, அருவமானது. அதைச் சொல்ல வெறுமே மொழி அழகினால் மட்டுமே நிலைகொள்ளும் கவித்துவம் தேவை. பொருளின்மையைக்கூடச் சென்று தொடும் அழகாக அது இருக்கவேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் பல இடங்களில் எளிமையான சொல்லடுக்கில் அது நிகழ்கிறது.

மறைவு

குணங்குடி மஸ்தான் சாகிபு ஆகஸ்ட் 6, 1838 (ஜமாதுல் அவ்வல் 14, ஹிஜ்ரி 1254) திங்கட்கிழமை அன்று வைகறை நேரத்தில் தன்னுடைய நாற்பத்து ஏழாவது வயதில் இறந்தார். இவர் தங்கியிருந்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலேயே இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கே இவருடைய தர்கா ஷெரீப் அமைந்துள்ளது

படைப்புகள்

குணங்குடி மஸ்தான் எழுதிய நூல்களில் சில:

  • அகத்தீசர் சதகம் – 100 பாடல்கள்
  • ஆனந்தக் களிப்பு – 38 பாடல்கள்
  • நந்தீசர் சதகம் – 51 பாடல்கள்
  • நிராமயக் கண்ணி – 100 பாடல்கள்
  • பராபரக் கண்ணி – 100 பாடல்கள்
  • மனோன்மணிக் கண்ணி -100 பாடல்கள்
  • முகியத்தீன் சதகம் - 100 பாடல்கள்

உசாத்துணைகள்

தரவுகள்

குறிப்புகள்