சுவாமிநாத தேசிகர்
- தேசிகர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேசிகர் (பெயர் பட்டியல்)
சுவாமிநாத தேசிகர் (ஈசானதேசிகர்)(பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், உரையாசிரியர். இலக்கண நூல்களைத் தொகுத்து உரை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுவாமிநாத தேசிகர் இளமையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று அம்பலவாண தேசிகரிடம் தீட்சை பெற்றுத் துறவறம் பூண்டார். அவர்க்குத் தொண்டு செய்து அவரிடம் பல நூல்களைக் கற்றார். ஆதீனத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை சுவாமிநாத தேசிகரின் மீது அன்பு கொண்டு ஞான தேசிகரின் அனுமதி பெற்று இவரைத்தம் இல்லத்திற்கு அழைத்துப் போய் கல்வி கற்பித்தார். இங்கு இளம்பூரணம், நச்சினர்க்கினியம், சேனவரையம் ஆகிய தொல்காப்பிய உரைகளைக் கற்றார். இலக்கணங்களையும், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம்பலக்கோவை(திருக்கோவையார்) பேராசிரியர் உரைகளையும், சமணர் நூல்களாகிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் ஐம்பெருங்காப்பியங்களையும் சங்கச் செய்யுள்களையும் கற்றார். சமஸ்கிருத பண்டிதரான கனகசபாபதி சிவாசாரியரிடம் வடமொழி வியாகரணங்கள் கற்றார். பன்னிரெண்டு ஆண்டுகள் இவ்வாறு வடமொழி, தென்மொழி ஆகியவை கற்றபின் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்று ஞானதேசிகர் முன்னிலையில் பரீட்சையில் தன் திறமையக் காட்டினார்.
சைவ வாழ்க்கை
அம்பலவாண தேசிகர் இவருக்கு ஈசான தேசிகர் என்ற பெயரைச் சூட்டினார். திருநெல்வேலி ஈசான மடத்தில் இவரை நிறுத்தினார். சங்கர நமச்சிவாயர் இவரின் மாணவர். இந்த மடத்தில் இருந்த போது வைத்தியநாத நாவலர் முன்னிலையில் வட மொழியாகிய சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் பிறந்தது என்னும் உரையை ஆற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும் நூல்களைக் கற்றார். தாம் கற்ற இலக்கண விதிகளைத் தொகுத்து ஓர் நூலாக்கி அதற்கு இலக்கணக்கொத்து என்று பெயரிட்டு அதற்கு உரையும் எழுதினர். இந்நூலில் வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் ஆகிய மூன்று பிரிவுகளில் 151 சூத்திரங்கள் உள்ளன.' தசகாரியம்' எனும் ஞான நூலை இயற்றினார்.
பாடல் நடை
- இலக்கணக்கொத்து பாயிரம்
திருநெல் வேலி யெனுஞ்சிவ புரத்தன்
தாண்டவ மூர்த்தி தந்த,செந் தமிழ்க்கடல்
வாழ்மயி லேறும் பெருமாள் மகிபதி
இருபத கமல மென்றலை மேற்கொண்
டிலக்கணக் கொத்தெனு நூலியம் புவனே
நூல் பட்டியல்
- இலக்கணக்கொத்து
- தசகாரியம்
உசாத்துணை
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
- சாமிநாத தேசிகர்: tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 08:02:53 IST