under review

சுப்ர. பாலன்

From Tamil Wiki
சுப்ர. பாலன் (படம் நன்றி: கல்கி இணையதளம்: https://kalkionline.com/)

சுப்ர. பாலன் (டி.எஸ். பாலசுப்ரமணியன்; திருக்கோகர்ணம் சுப்ரமணிய ஐயர் பாலசுப்ரமணியன்) (பிறப்பு: மே 11, 1939) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். கல்வித் துறையில் நிதி அதிகாரியாகப் பணியாற்றினார். திராவிட இயக்க ஆதரவாளர்.

பிறப்பு, கல்வி

டி.எஸ். பாலசுப்ரமணியன் என்னும் இயற்பெயரை உடைய சுப்ர. பாலன், மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். புதுக்கோட்டையில் உயர் கல்வி கற்றார். தட்டச்சு, குறுக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றார். சம்ஸ்கிருத்தில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

சுப்ர. பாலன் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரிக் கல்வித் துறையில் மூத்த நிதி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: பா. நாகலெட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; இரண்டு மகள்கள்.

சுப்ர. பாலன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

சுப்ர. பாலன், புதுக்கோட்டையில் இருந்த டவுன்ஹால் நூலகத்தில் கல்கி, மு.வ., கண்ணதாசன் போன்றோரது நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். தொடக்க காலத்தில் கவிதைகள் எழுதினார். முதல் கவிதை கண்ணதாசன் நடத்திய 'தென்றல்' வார இதழில் வெளியானது.

சிறார் பங்களிப்பு

சுப்ர. பாலன், சிறார் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டு சிறுகதைகள், பாடல்கள் எழுதினார். அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா போன்றவர்களோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர்கள் பங்களித்த சிறார் இதழ்களில் எழுதினார்.

சிறார் இசைப் பாடல்கள்

சுப்ர. பாலன் எழுதிய 'வாருங்கள் சேர்ந்து பாடலாம்' என்ற சிறார் பாடல், இசையமைப்பாளர் எம்.பி. ஸ்ரீநிவாசனின் இசையமைப்பில் வானொலி சேர்ந்திசை நிகழ்ச்சியில் இடம் பெற்றது. சுப்ர. பாலனின் சிறார் இசைப் பாடல்கள், பத்மா சேஷாத்திரி பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடமாக வைக்கப்பட்டன. சுப்ர. பாலனின் சிறார் பாடல்களில் சில, கர்நாடக மாநிலக் கல்வித் திட்டத்தின் தமிழ்ப் பாடநூலில் இடம் பெற்றன.

கல்கி இதழ் கட்டுரை - சுப்ர. பாலன்
சிறுகதைகள்

சுப்ர. பாலனின் முதல் சிறுகதை 1973-ல், கல்கி இதழில் வெளியானது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தீபம், கோபுர தரிசனம், மங்கையர் மலர், லேடீஸ் ஸ்பெஷல், தினமணி, கலைமகள், இலக்கியப்பீடம், புதுகைத் தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்களை எழுதினார். அறிவியல் சிறுகதைகளை எழுதினார். தாவரங்கள் மீதும் இயற்கை மீதும் ஈடுபாடு கொண்டு சில சிறுகதைகளை எழுதினார்.

'கலசைக்கிழார்', 'யெஸ்பால்', 'ஆத்மேஸ்வரன்' போன்ற புனை பெயர்களில் எழுதினார். சுப்ர. பாலனின் சிறுகதைகளில் சில இந்தி, வங்காளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சுப்ர. பாலன், கவிதை, சிறுகதை, பயணக் கட்டுரை, அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், நேர்காணல், வாழ்க்கை வரலாறு என பல்துறை சார்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

மொழிபெயர்ப்பு

சுப்ர. பாலன், சுதாமூர்த்தி எழுதிய நூல்களை 'உண்மையின் வலிமை', 'துணிச்சல்கார தீரேந்திரன்', 'வாழை மர இளவரசி' போன்ற தலைப்புகளில் மொழிபெயர்த்தார். வானதி பதிப்பகம் அந்நூல்களை வெளியிட்டது.

மேனகா காந்தி எழுதிய நூலை 'மரங்களின் கதைகள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். மணிவாசகர் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டது.

கவி காளிதாசரின் மீது கொண்ட ஈடுபாட்டினால் அவரது நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

சுப்ர. பாலன் மு. கருணாநிதியுடன்

இதழியல்

சுப்ர. பாலன். கல்கி இதழில் பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை எழுதினார். கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களைத் தேடித்தொகுத்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களாக அவை வெளிவரக் காரணமானார். ஓவியர் மணியம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்றைக் கல்கியில் தொடராக எழுதினார். தினமலர் குழுமத்தின் வெளியீடான 'காலைக்கதிர்' நாளிதழின் 'வாரக்கதிர்' இணைப்பான கதைமலரில் சுப்ர.பாலன் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சின்னச்சின்னக் கதைகள் 100' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நா. பார்த்தசாரதியின் மறைவுக்குப் பின், 'நா. பா.' என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார்.

விருதுகள்

  • சுப்ர. பாலனின் 'மத்தாப்பூ' என்ற சிறார்களுக்கான பாடல் நூல், 1985-ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது.
  • சுப்ர. பாலனின் 'சூரியகுளத்து முதலைகள்' சிறுகதை, 2009-ன் சிறந்த இலக்கியச் சிந்தனை சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டது. (2009)

மதிப்பீடு

சுப்ர. பாலன், ஆன்மிக ஆர்வலராகவும், திராவிட இயக்க ஆதரவாளராகவும் ஒருங்கே செயல்பட்டார். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை எழுதினார். 'சிலம்புச்சாலை' போன்ற இலக்கிய ஆய்வு நூல்களை எழுதினார். சுதா மூர்த்தி, மேனகா காந்தி போன்றோர் எழுதிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். கல்கியின் நூல் வடிவம் பெறாமலிருந்த பல எழுத்துக்களைத் தேடித்தொகுத்து வெளியிட்டதும், கல்கியின் வரலாறான, சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' நூல் வடிவம் பெற்றபோது அதற்குக் 'குறிப்பு அகராதி' தயாரித்தளித்ததும் சுப்ர. பாலனின் குறிப்பிடத்தகுந்த இலக்கியப் பணியாக அறியப்படுகிறது.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • காலடியில் ஓர் உலகம்
  • நானும் என் சூரியனும் (உரைநடைக் கவிதை)
சிறார் நூல்கள்
  • மத்தாப்பூ (சிறார் பாடல் நூல்)
  • விண்வெளிக் கதைகள்
  • அறிவியலின் மறுபக்கம்
  • மந்திரக்காற்று (ஆங்கில மூலம்: சுதாமூர்த்தி)
  • விண்ணில் சுழலும் விந்தைகள்
சிறுகதைத் தொகுப்பு
  • உலகம் என்பது
  • கனவுகளுக்குக் காத்திருத்தல்
  • புல்வெளிப் பயணங்கள்
  • யசோதைகள்
  • ஊமை மனங்கள்
  • மேலிடங்கள்
  • வெள்ளம் வடிந்தபிறகு
  • சின்னச்சின்னக் கதைகள் 100
ஆன்மிகம்
  • கண்ணன் நடந்த புண்ணிய பூமி
  • தலங்களின் தரிசனம்
  • திருக்கோகர்ணம் தலப்பெருமை
  • அருள் தரும் ஆலயங்கள்
  • யாதுமாகி நின்றாள்
  • மகான்களின் அருளுரைகள்
  • கட்டுரை நூல்
  • எங்கள் தந்தையர்
  • நலமுடன் வாழலாம்
  • சாதனையால் உயர்ந்தவர்கள்
  • தமிழ் நாட்டுக் கலைகள் - கைவேலைகள்
  • அறிவியலாரின் மறுபக்கம்
  • பூப்பூவாய்ச் சில நினைவுகள்
இலக்கிய ஆய்வு
  • சிலம்புச்சாலை (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரை நூல்)
  • காவியத் துளி
  • மகாகவி காளிதாஸ் ரஸானுபம்
  • தூது செல்லாயோ (மூலம்: காளிதாசனின் மேகசந்தேசம்)
தொகுப்பு நூல்கள்
  • எழுத்துலகில் அமரதாரா (கல்கி பற்றியும் அவரது படைப்புகள் பற்றியுமான பல்வேறு எழுத்தாளர்களின் மதிப்பீடு)
  • கல்கி கடிதங்கள்
  • வாழ்க சுதந்திரம் வாழ்க நிரந்தரம் (கல்கி தலையங்கங்கள்)
  • அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள்
  • அமரர் கல்கியின் பெண் பாத்திரங்கள்
  • டாக்டர்கள் சொல்லுகிறார்கள் (தொகுப்பாசிரியர் டாக்டர் என். எஸ். வியாஸ்; கட்டுரை வடிவம் சுப்ர-பாலன், சாருகேசி)
  • மணியம் - 100
மொழிபெயர்ப்பு
  • உண்மையின் வலிமை (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி)
  • துணிச்சல்கார தீரேந்திரன் (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி)
  • வாழை மரஇளவரசி (ஆங்கில மூலம்: சுதா மூர்த்தி)
  • மரங்களின் கதைகள் (ஆங்கில மூலம்: மேனகா காந்தி)
  • அன்புள்ள அம்மாவுக்கு (ஆங்கில மூலம்: டாக்டர் எம். பாலசுப்பிரமணியன்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:27:17 IST