சித்ரன்
சித்ரன் (இயற்பெயர்: வினோத் கண்ணா, பிறப்பு: 1985) தமிழில் எழுதிவரும் சிறுகதை எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
சித்ரன் புதுக்கோட்டையில் சிவஞானம், மணிமேகலை இணையருக்கு மகனாக அக்டோபர் 27, 1985-ல் பிறந்தார். இயற்பெயர் வினோத் கண்ணா. சித்ரனின் பெற்றோர்கள் இருவரும், சிறிமாவோ சாஸ்திரி உடன்படிக்கையின் படி 1974-ம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள். புதுக்கோட்டை தூயமரியன்னை உயர்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை மேற்கு தாம்பரம், ஸ்ரீ சாய்ராம் சித்த மருத்துவ கல்லூரியில் சித்த மருத்துவத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
விவசாயத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சாலினியை பெப்ருவரி 12, 2016 அன்று மணந்தார். மகள்கள் எழிலி, கொற்றவை. சித்ரன் தமிழ்நாட்டு அரசின் அறநிலைத்துறையில் தணிக்கை ஆய்வாளராக திருச்சி பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சித்ரன் கல்குதிரையில் 2013-ல் வெளியான ராபர்டோ பொலான்யோவின் 'Dance card' சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு வழியாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். 2018-ல் சித்ரனின் முதல் சிறுகதை தொகுப்பான 'கனாத்திறமுரைத்த காதைகள்' வெளியானது. 2023-ம் ஆண்டு ‘வெளியான ‘பொற்பனையான்’ தொகுப்பு விமர்சகர்களால் குறிப்பிடத்தக்க தொகுப்பாக அடையாளப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து சிறுகதைகள், குறுங்கதைகள் எழுதி வருகிறார்.
சித்ரனின் முதல் சிறுகதை 'தூண்டில்' 'மணல் வீடு' சிற்றிதழில் 2015-ல் வெளியானது. ரமேஷ் பிரேம், ஜெயமோகன், கோணங்கி, கி. ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரை தனது முன்னோடிகளாக கருதுகிறார்.
இலக்கிய இடம்
'சித்ரனின் படைப்பு மனம் இரு விதமாக இயங்குகிறது. ஒன்று தன் வாழ்விற்கு மிக நெருக்கமான அல்லது முற்றிலும் யதார்த்த உலகில் நடக்கச் சாத்தியமான சம்பவங்களில் சற்றே புனைவு கலந்து சிறுகதைகளை படைக்கிறார். இக்கதைகளின் அடியாழத்தில் ஒரு அமானுஷ்யமான தீவிரம் குடிகொண்டிருந்தாலும் யதார்த்தவாத தொனியைத் தொட்டுச் செல்கிறது இவரின் எழுத்து நடை' என்று நரேன் மதிப்பிடுகிறார்.
விருது
- க.சீ . சிவகுமார் நினைவு சிறந்த அறிமுக எழுத்தாளர் சிறுகதை தொகுப்புக்கான விருது 2019
- சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருது - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்
நூல் பட்டியல்
சிறுகதை தொகுப்பு
- கனாத்திறமுரைத்த காதைகள் (யாவரும் பதிப்பகம், 2018)
- பொற்பனையான் & பிற கதைகள் (யாவரும் பதிப்பகம், 2023)
இணைப்புகள்
- சித்ரனின் பொற்பனையான்- நரேன்: ஜெயமோகன் தளம்
- பொற்பனையான் – யதார்த்த உலகைத் தீட்டும் தூரிகை: பிரவீன் மனோ: சிற்றில்
- சீர்மையின் நுதல் விழி- சுனில் கிருஷ்ணன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Jun-2023, 21:08:10 IST