under review

க.த. திருநாவுக்கரசு

From Tamil Wiki
திருநாவுக்கரசு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருநாவுக்கரசு (பெயர் பட்டியல்)
டாக்டர் க. த. திருநாவுக்கரசு

க.த. திருநாவுக்கரசு, (டாக்டர் க.த. திருநாவுக்கரசு; முனைவர் க.த. திருநாவுக்கரசு; பேராசிரியர் க.த. திருநாவுக்கரசு) (நவம்பர் 20, 1931 - மே, 05, 1989) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய, இலக்கண, வரலாற்று நூல்களை எழுதினார். திருக்குறள் மணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார். இவர் எழுதிய 'திருக்குறள் நீதி இலக்கியம்' என்ற இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது.

பிறப்பு, கல்வி

க.த. திருநாவுக்கரசு, நவம்பர் 20, 1931 அன்று, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்துள்ள கருங்குழியில், தர்மலிங்க முதலியார் - ருக்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரிலும் செங்கல்பட்டிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1954-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1969-ல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 'பழந்தமிழ் இலக்கியத்தில் அறம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார். அதே பல்கலையில் மொழியியல் பயின்று பட்டயம் பெற்றார். 1979-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில், 'மு. வரதராசனாரின் படைப்பிலக்கியம் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழ் தவிர, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர்.

தனி வாழ்க்கை

க.த. திருநாவுக்கரசு மணமானவர்.

கல்விப் பணிகள்

க.த. திருநாவுக்கரசு, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் 1954 முதல் 1959 வரை ஆறாண்டுகள் பயிற்றாசிரியராகப் பணியாற்றினார். 1962 முதல் 1968 வரை ஏழு ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் உள்ள மணலி தமிழ்க் கல்லூரியில் 1968 முதல் 1969 வரை இரண்டு ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றினார். திருக்குறளில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவராய் விளங்கிய க.த. திருநாவுக்கரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1969 முதல் 1972 வரை திருக்குறள் ஆராய்ச்சித் துறையில் தலைவராகப் பணியாற்றினார். ஆய்வுப் பணியில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக ஆய்வுப் பணியில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

முனைவர் க.த. திருநாவுக்கரசு நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

க.த. திருநாவுக்கரசு திருக்குறள், சங்க இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, இந்தியத் தத்துவம், பண்டை உலக நாகரிக வரலாறு, தென்னிந்திய வரலாறும் பண்பாடும், கல்வெட்டியல், இலக்கிய ஒப்பாய்வு, சமூகவியல், மொழியியல் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அவை குறித்து பல நூல்களையும் இலக்கிய, ஆய்விதழ்களில் பல கட்டுரைகளையும் எழுதினார். 1966, 1969, 1970, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டுத் தொல்பொருள் ஆய்வுத்துறை நிகழ்த்திய கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுரைகளை நிகழ்த்தினார். 1970, 1974, 1977 ஆகிய ஆண்டுகளில் திராவிட மொழி இயல் சங்கம் நடத்திய ஆய்வுக் கருத்தரங்கில் பங்குகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் கழகம் 1969, 1970, 1971, 1972, 1973, 1974, 1976, 1977, 1978, 1981 ஆகிய ஆண்டுகளில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல்கலைப் பழந்தமிழ் (1971), உரையாசிரியர் (1975) ஆகிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசித்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகம், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் முறையே 1977, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டு மரபு ஆகிய கருத்தரங்குகளில் பங்கு பெற்றுக் கட்டுரைகள் வாசித்தார். தொடர்ந்து பல்வேறு இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்.

க.த. திருநாவுக்கரசு, இலக்கியம், இலக்கணம், வரலாற்றாய்வு, நாடகம், மொழிபெயர்ப்பு என முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • க.த. திருநாவுக்கரசு, சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்தில், 1967 முதல் 1973 வரை, மாதந்தோறும் இரண்டு திங்கட்கிழமைகளில் புறநானூறு குறித்து வகுப்புகள் நடத்தினார்.
  • சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள வேதாந்த சங்கத்தில் 1968 முதல் 1974 வரை பொதுமக்களுக்கு வெள்ளிதோறும் திருக்குறள் வகுப்புக்களை நடத்தினார்.
  • 1972-ம் ஆண்டு நடைபெற்ற முதல் அனைத்திந்தியத் திருக்குறள் கருத்தரங்கத்தின் அமைப்பாளராகப் பணியாற்றினார்.

பொறுப்புகள்

  • தமிழக அரசின் தமிழக வரலாற்றுக் குழுவில் 15 ஆண்டுகள் உறுப்பினராய் இருந்து, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தமிழ் வல்லுநராகப் பணியாற்றினார்.
  • பாரத ஸ்டேட் வங்கியில் தமிழ் ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணிபுரிந்தார்.

விருதுகள்

  • திருக்குறள் மணி பட்டம்
  • தமிழக அரசின் திரு.வி.க. விருது
  • தமிழக அரசின் குறள் நெறி பரப்புமையம் அளித்த குறள்நெறித் தோன்றல் பட்டம்
  • சாகித்ய அகாதெமி விருது (1974 - திருக்குறள் நீதி இலக்கியம் நூலுக்காக)
  • இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தர் மடம் வழங்கிய திருக்குறள் சித்தர் பட்டம்

மறைவு

க.த. திருநாவுக்கரசு, மே, 05, 1989-ல் காலமானார்.

நாட்டுடைமை

க.த. திருநாவுக்கரசுவின் நூல்கள் 2024-ம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்படடுள்ளன.

ஆவணம்

க.த. திருநாவுக்கரசுவின் நூல்கள் சில தமிழ் இணையக் கல்விக்கழக மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு

க.த. திருநாவுக்கரசு, தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழி பெயர்ப்பாளர், திறனாய்வாளர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தார். வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தார். திருக்குறள் தொடர்பான நூல்களுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற மூவரில் ஒருவராக க. த திருநாவுக்கரசு.அறியப்படுகிறார். தமிழறிஞராகவும், வரலாற்றாய்வாளராகவும், திருக்குறள் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பப் பெரும் முயற்சிகள் மேற்கொண்ட தமிழ் அறிஞர்களுள் ஒருவராகவும் க.த. திருநாவுக்கரசு மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

வரலாற்று நூல்கள்
  • முதலாம் இராசராச சோழன்
  • சிந்து வெளி தரும் ஒளி
  • சிந்துவெளி எழுத்து வடிவங்கள்
  • வாழ்வும் வரலாறும்
  • வரலாற்று வஞ்சி
  • இலங்கையில் தமிழ்ப் பண்பாடு
  • சிந்துவெளி எழுத்து வடிவங்கள்
  • குறுநில மன்னர் வரலாறு
  • பர்மாவில் தமிழ்ப் பண்பாடு
  • தாய்லாந்தில் தமிழ்ப்பண்பாடு
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு
  • தமிழர் நாகரிக வரலாறு - விடிவெள்ளி
ஆய்வு நூல்கள்
  • திருக்குறள் நீதி இலக்கியம்
  • திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும்
  • வாழ்வும் இலக்கியமும்
  • திருக்குறளும் இந்திய அறநூல்களும்
  • அறிஞர் அறவாழி
  • சான்றோர் கண்ட திருவள்ளுவர்
  • பழந்தமிழ் மொழியியல்
  • ஒளிவிளக்கு
  • தமிழ் நிலவு
  • தம்மபதம்
  • மு.வரதராசனாரின் படைப்பிலக்கியம்
  • தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம்
  • திறனாய்வு அணுகுமுறைகள் (கு. பகவதி இணைப்பதிப்பாசிரியர்)
இலக்கியம்
  • தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும்
  • திருக்குறள் கையடக்கப் பதிப்பு
  • திருக்குறள் நூலடைவு
  • இலக்கியக் கொள்கை தொகுதி - மூன்று
இலக்கணம்
  • எட்டாம் வகுப்புத் தமிழ் இலக்கணம்
  • மானிடவியல் சொல்லகராதி
  • தொல்காப்பிய நூலடைவு
நாடகம்
  • அடிமை விலங்கு
  • பொற்கொடி
மொழிபெயர்ப்பு
  • ஜி.எம். டிரெவெலியனின் இங்கிலாந்தின் வரலாறு
  • வின்சென்ட் ஸ்மித்தின் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு - 3
  • சாகித்ய அகாதமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் - இலட்சுமி நாத பெஸ்பரூவா
  • சாகித்ய அகாதமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் - இராசாராம் மோகன்ராய்
  • சாகித்ய அகாதமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் - ஜீவனானந்த தாஸ்
பதிப்பாசிரியர்
  • பூ. ஆலால சுந்தரஞ் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு
  • தமிழ் இலக்கியக் கொள்கை - 2 (டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து)
ஆங்கில நூல்கள்
  • Raja Raja the Great
  • Historical Heritage of the Tamils
  • Studies in Tamil and Greek Literature
  • Chieftains of the Sangam age
  • A Critical study of Dr. Mu. Va's works

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:06:24 IST