under review

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்

From Tamil Wiki
கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
ராஜாளியார் சிலை
ராஜாளியார் இல்லம்
ராஜாளியார் கோபுரம் அரித்துவாரமங்கலம்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் (டிசம்பர் 01, 1870 - ஏப்ரல் 06, 1920) பழந்தமிழ் ஓலைச் சுவடிகளையும் தொல்காப்பிய ஆய்வாளர்களையும் பேணிய புரவலர், சமூக சேவகர், இந்திய தேசிய காங்கிரஸின் கமிட்டி உறுப்பினர். முதன்முதலில் தொல்காப்பியருக்குச் சிலை வைத்தவர். இவரின் நூலகச் சேமிப்பில் இருந்து பெறப்பட்ட ஓலைச்சுவடியை அடிப்படையாகக் கொண்டே 'வீரசோழியம்’ எனும் நூல் பதிப்பிக்கப்பட்டது.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஹரித்துவாரமங்கலத்தில் வாசுதேவ ராஜாளியார் - ஆயி அம்மாள் தம்பதியருக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் டிசம்பர் 01, 1870-ல் பிறந்தார்.

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் பச்சைக்கோட்டையில் விஞ்சிராயரிடம் எட்டு ஆண்டுகள் குருகுலக் கல்வியைப் பயின்றார். சிறு வயது முதலே யோக நூல், சோதிட நூல், மருத்துவ நூல் முதலியவற்றைக் கற்று தேர்ந்தார். மெட்ரிகுலேஷன் படிப்பைக் கும்பகோணத்தில் முடித்தார். தஞ்சை எஸ்.பி.ஜி. கல்லூரியில் சேர்ந்து சிலகாலம் படித்தார். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளை அறிந்தவர். மருத்துவ அறிவு, இசையறிவு, சமய அறிவும் பெற்றவர்.

தனிவாழ்க்கை

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் தன்னுடைய தாய்மாமனான வடுவக்குடி வேலு வாண்டையார் மகளான பெரியநாயகி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் இரு பெண் குழந்தைகளும் பிறந்தன. ஆண் குழந்தை 12 வயதில் உயிரிழந்தது. முதல் மகள் ருக்மணிம்மாளைச் சீராளூர் இராஜ மன்னார்சாமி நாட்டாருக்கு மணமுடித்தார். இரண்டாவது மகள் ஆண்டாளம்மாளை வடுகக்குடி சிவகாமி வாண்டையாருக்கு மணம் முடித்தார்.

பொது வாழ்க்கை

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்
அரசியல்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் இந்திய தேசிய காங்கிரஸின் கமிட்டி உறுப்பினராக இருந்தார். மிதவாத தலைவரான அவர் ஆங்கிலேய அதிகாரிகளான ஆர்தர் லாலி, சென்னை ஆளுநர் ஆஸ்டின் துரை உள்ளிட்டவர்களுக்கு நண்பராக விளங்கினார். தாலுகா போர்டு தலைவராக இருந்தார்.இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் 1912-ல் தில்லி வந்தபோது அவரது முடிசூட்டு நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தனர்களில் இராசாளியாரும் ஒருவர்.

சேவைகள்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் ஹரித்துவாரமங்கலத்தில் சித்த மருத்துவமனையையும் பள்ளிக்கூடத்தையும் நிறுனார். ஏழை, எளிய மக்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார்.

'குற்றப்பரம்பரை’ சட்டத்தை நீக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்று அங்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடமும் ராணியாரிடத்தும் கோரிக்கை வைத்தார். தஞ்சைப் பகுதி ஈசநாட்டுக் கள்ளர்களை இந்தச் சட்டத்திலிருந்து காத்தார்.

திருப்பணிகள்

வைணவ பக்தரான கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் ஹரித்துவாரமங்கலம் பெருமாள் கோவிலுக்குக் கோபுரம் கட்டினார். சமய வேறுபாடு கருதாமல் சிவன் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தார்.

தமிழ்ப்பணிகள்

சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஒன்று நிறுவவேண்டும் என கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி, அதை அதிகாரிகளிடம் வலியுறுத்தி தமிழ்த்துறை தொடங்க காரணமாக அமைந்தார். 1903-ல் குன்னூரில் ஒரு பொதுநூலகத்தை அமைத்து அங்கே தொல்காப்பியருக்குச் சிலை வைத்தார்.

இலக்கியவாழ்க்கை

சுவடிப்பாதுகாப்பு

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் தன்னுடைய வீட்டில் அரிய பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகளைச் சேமித்துப் பாதுகாத்தார். திருவாவடுதுறை ஆதீனம் இவரின் வீட்டுக்கு வந்து, இவரின் நூலகத்தைக் கண்டு வியந்து, அதற்கு 'சரசுவதி மகால்’ என்று பெயரிட்டு, திருமடத்தின் சார்பில் பச்சைக்கல் மாலையைப் பரிசளித்தார்.

தமிழறிஞர்களுக்கு ராஜாளியார் புரவலராக இருந்துள்ளார். இவரிடமிருந்து பல்வேறு வகைகளில் உதவிகளைப் பெற்றவர்கள் தாங்கள் பதிப்பித்த, எழுதிய நூல்களில் அவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் அரசன் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், உ.வே.சாமிநாதையர், விஞ்சைராயர், சர்க்கரை இராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ணன், சேதுராம பாரதியார், தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாதப் பிள்ளை, வேங்கடேசப் பிள்ளை, முத்துசாமி ஐயர், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், மு. இராகவையங்கார் ஆகியவர்களுக்கு நூல்களை அளித்து உதவியதாக தெரியவருகிறது.

இவருடைய நூலகச் சேமிப்பில் இருந்து பெறப்பட்ட ஓலைச்சுவடியை அடிப்படையாகக் கொண்டே 'வீரசோழியம்’ எனும் நூல் பதிப்பிக்கப்பட்டது.ஔவை சு. துரைசாமிப் பிள்ளை தன்னுடைய புறநானூற்று உரை நூலின் முன்னுரையில், ஹரித்துவாரமங்கலத்துக்கு அருகில் உள்ள பள்ளியூர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் என்பவர் வழியாக ராஜாளியார் பற்றித் தாம் அறிந்ததாகவும் அவரிடம் இருந்த புறநானூறு ஏட்டுச்சுவடியைப் படியெடுத்து வைத்திருந்த சேனைநாட்டாரிடமிருந்து தாம் பல திருத்தங்களை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உ.வே.சா.வின் பார்வைக்கு இந்தப் புறநானூற்றுச் சுவடி உட்படவில்லை என்பதையும் சுட்டியுள்ளார். பின்னாளில் இவர் தன்னுடைய நூலகத்தில் இருந்த அரிய ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் தருமபுரம் கல்லூரிக்குக் கொடையாக அளித்தார்.

இசைத்தமிழ் பங்களிப்பு

'கர்ணாமிர்த சாகரம்’ இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் வளர்ச்சிக்காக 1912-ல் ஏற்படுத்திய 'தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்க’த்தின் வளர்ச்சிக்குக் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் உறுதுணையாக இருந்துள்ளார்.

தொல்காப்பிய பதிப்பு

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தெய்வச்சிலையார் எழுதிய தொல்காப்பிய சொல்லதிகார உரையை 1929-ல் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை பதிப்பித்தபோது, அவருக்குப் பதிப்புச் செம்மைக்காகத் தன்னுடைய நூலகச் சேமிப்பில் இருந்த அரிய தொல்காப்பிய ஓலைச்சுவடியை அளித்து உதவினார்.குன்னூரில் நூலகம் தொடங்கி, அங்கு செப்டம்பர் 10, 1911-ல் தொல்காப்பியருக்கு முதன்முதல் சிலை வைத்தார்.

தமிழ்ச்சங்க அமைப்புப்பணிகள்

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் கருந்தட்டாங்குடி வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் தொடங்கப்பட்ட வித்தியா நிகேதனம் தமிழ் சங்கத்திற்கு தலைவராக இருந்தார். மதுரையில் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவுவதற்கும் தமிழ்க் கல்லூரியை உருவாக்குவதற்கும் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் உறுதுணையாக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஏழு நாள் விழாவைப் பொறுப்பேற்று இவர் நடத்தினார். இவர் தஞ்சையில் தமிழ்ச் சங்கம் தொடங்குவதற்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உருவாக்கத்திற்கும் நிதிநல்கியுள்ளார். அவற்றின் வழியாகப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கவும் நிதியுதவி செய்துள்ளார்..

மறைவு

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் ஏப்ரல் 06, 1920-ல் காலமானார்.

விருது

அன்னிபெசன்ட் அம்மையார் இவரது சமூகச் சேவையைப் பாராட்டி F.T.S (Fellowship of Theosophical Society) என்ற பட்டத்தினை வழங்கினார்.

வாழ்க்கை வரலாறு

வா. கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் சாதனைச் சரித்திரம் -அம்மாப்பேட்டை த.கோபால்சாமி

இலக்கிய இடம்

கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் தமிழ் இலக்கியப் புரவலர், தமிழ்ச்சுவடிகளின் காப்பாளர் என்னும் இரு நிலைகளில் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பாற்றியவர். பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் பதிப்பிக்க முனைந்த தமிழறிஞர்களுக்குத் தாம் முயன்று சேமித்திருந்த அரிய ஓலைச்சுவடிகளைக் கொடுத்து உதவியவர். தொல்காப்பியம், புறநானூறு, வீரசோழியம் முதலான நூல்களையும் பழைய உரைகளையும் பாடபேதமின்றிப் பதிப்பிக்க இவரின் நூலகச் சேமிப்பிலிருந்த அரிய ஓலைச்சுவடிகள் உதவியுள்ளன. இசைத் தமிழ் வளர்ச்சிக்கும் பல உதவிகளைச் செய்துள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page