under review

கொல்லிப்பாவை (தொன்மம்)

From Tamil Wiki
கொல்லிப்பாவை, இப்போதுள்ள சிலை

கொல்லிப்பாவை : சங்க இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தொன்மம். கொல்லிமலையில் இருந்த தெய்வம் எனப்படுகிறது. இந்த தெய்வத்தை பற்றிய பல குறிப்புகள் பரணர் உள்ளிட்ட சங்கக் கவிஞர்களின் பாடல்களில் உள்ளன. காட்டுக்குச் செல்பவர்களை கவர்ந்து இழுத்து உயிர்பறிக்கும் தெய்வம் இது என சொல்லப்படுகிறது.

சொற்பொருள்

பாவை என்னும் சொல் சங்ககாலம் முதல் மயக்கும் தெய்வத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொற்றவையையும் குறிக்கிறது. பாவை என்னும் தெய்வம் சங்ககாலத்தில் அணங்கு என்று குறிப்பிடப்படும் தெய்வமும் ஒன்றாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பலவகையான அணங்குகளும் பாவைகளும் தமிழ்நாட்டில் சங்ககாலத்தில் வழிபடப்பட்டன. அவை மறைந்துவிட்டன. (பார்க்க அணங்கு )

ஆய் அரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் இருந்த அணங்குத்தெய்வம் பற்றி பரணர் பாடுகிறார். ஆய் அரசர்கள் ஆட்சிசெய்தது இன்றைய குமரிமாவட்டம். (ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் ஏர் மலர் நிறை சுனை உறையும் சூர்மகள். அகநாநூறு 198, பரணர்)

(பார்க்க பாவை)

சங்கக் குறிப்புகள்

பரணர்
  • கொல்லிக் குட வரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை - (நற்றிணை 192)
  • பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய நல்லியற் பாவை அன்ன (குறுந்தொகை 89)
  • களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅயோளே (அகநாநூறு 62)
  • திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை (நற்றிணை 201)
கபிலர்
  • ’வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே’ ( குறுந்தொகை-100.கபிலர்)

தொன்மம்

கொல்லிப்பாவை என்னும் தொன்மம் பலவாறாக கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் ‘குவளயங்கண்ணி கொல்லியம்பாவை’ என்று குறிப்பிடுகிறார். (திருவாய்மொழி 2.7.1) இதற்கு எழுதப்பட்ட உரை (வைணவ வியாக்கியானம்) இவ்வாறு குறிப்பிடுகிறது. "கொல்லி மலையிலே ஒரு பாவையுண்டு; வகுப்பழகி தாயிருப்பது, அதுபோலேயாயிற்று. இவளுக்குண்டான ஏற்றமும் பிறப்பும்."

திருமங்கை ஆழ்வார் இன்னொரு பாடலில் ’குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி’ என்று கூறுகிறார். (திருப்புட்குழி)

கொல்லிமலையும் கொல்லிப்பாவையும்

சங்ககாலத்தில் குறிப்பிடப்படும் கொல்லிப்பாவை என்பது இன்றைய கொல்லிமலையில் இருந்த தெய்வம் என்பதற்கு சான்றுகள் சங்கப்பாடல்களிலேயே உள்ளன. 'கொல்லிக் குடவரை' ( நற்றிணை 192) என்றும் 'பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லி' ( குறுந்தொகை 89) என்றும் பரணர் குறிப்பிடுகிறார். கொல்லிமலையை ஆட்சி செய்த சேரமன்னனின் அடைமொழியே பொறையன் என்பது.

வல்வில் ஓரி என்னும் சங்ககால மன்னன் கொல்லிமலையை ஆட்சிசெய்தான் என்றும் அவனுடைய மலையில் குகையில் பாவையின் உருவம் இருந்தது என்றும் கபிலர் கூறுகிறார். ’வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந் தனளே’ ( குறுந்தொகை-100)

கொல்லிமலையில் உள்ளது கொல்லிப்பாவை என்னும் செய்தியுடன் கொல்லி அருவியின் அருகே அமைந்த குகையில் இத்தெய்வம் இருந்தது என்னும் செய்தியும் தெளிவாகவே சங்கப்பாடலில் உள்ளது. (கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு அவ் வௌஅருவிக் குட வரையகத்து- நற்றிணை-201)

பிற்காலத்தில் உருவான கொங்குமண்டல சதகம் என்னும் நூலில் கொல்லிமலையில் கொல்லிப்பாவை இருக்கும் செய்தி குறிப்பிடப்படுகிறது. ’கொல்லியம் பாவை முல்லைவாள் நகையால் உள்ளுருக்குவதும் கொங்கு மண்டலமே’ (கொங்குமண்டல சதகம். பாட, 25)

அபிதான சிந்தாமணி

அபிதான சிந்தாமணி கொல்லிப்பாவையை இவ்வண்ணம் வரையறை செய்கிறது. இது கொல்லி மலையின் மேற்பாற் செய்துவைக்கப் பட்ட பெண் வடிவமாகிய பிரதிமை. இக்கொல்லி மலை முனிவர்கள், தவத்தோர் உறைவதற்கு மிகச் சிறந்த இடமாகும். இங்கு அவர்களுக்கு ஊறு செய்யும் இராக்கதர்கள் வந்து இடைஞ்சல் செய்கின்ற நிலையில் அவர்களை திசை திருப்ப ஒரு பெண் உருவம் செய்து வைக்கப்பெற்றது. அவ்வுருவம் இராக்கதர் வருவதை அறிந்து அவர்கள் வரும்போது நகை செய்து மயக்கும். இம்மயக்கத்தில் மயங்கிக் காமம் தலைக்கேறி தன் உயிர் மாயத்துக்கொல்வர் என்பது முதற்கருத்தாகும். அடுத்து இப்பாவை தேவதைகளால் காக்கப்படுவது, காற்று, மழை, ஊழியாலும் அழியாதது என்று சங்க இலக்கியம் காட்டும் கொல்லிப்பாவையைக் காட்டுவதாக இரண்டாம் கருத்து அமைகிறது. மூன்றாம் கருத்து இது கொல்லி என்னும் பெயர் கொண்ட மலையின்கணுள்ள ஒருபெண்பாற் பிரதிமை. இது மோகினிப்படிமை. என்று புராணச் சார்புடன் அமைகிறது.

கொல்லிமலை தெய்வம்

இன்று கொல்லிமலை அறப்பளீஸ்வரர் என்னும் சிவன் ஆலயம் இருக்கும் இடமாக அறியப்படுகிறது. அறைப்பள்ளி என்னும் சொல்லின் மருவு இது. இயற்கையாக அமைந்த குகையே அறை என சொல்லப்பட்டது. இன்று கொல்லிமலையில் எட்டுக்கை அம்மன் என வழிபடப்படும் ஒரு தெய்வம் உள்ளது. அதுவே கொல்லிப்பாவை என்னும் தொல்தெய்வம் என கூறப்படுகிறது. இன்றைய எட்டுக்கை அம்மனுக்கு அண்மைக்காலக் கற்சிலை ஒன்று உள்ளது. மலைக்குமேல் இன்னொரு தொன்மையான ஆலயம் உள்ளது. அதில் பாறையில் புடைப்புச்சிலையாகச் செதுக்கப்பட்ட ஒரு தொன்மையான தெய்வச்சிலை உள்ளது. அதுவே கொல்லிப்பாவை என்று சிலர் சொல்வதுண்டு.

உசாத்துணை


✅Finalised Page