கு.மு. அண்ணல்தங்கோ
கு.மு. அண்ணல்தங்கோ (குடியாத்தம் முருகப்பன் அண்ணல்தங்கோ; குடியேற்றம் முருகப்பன் அண்ணல்தங்கோ; சுவாமிநாதன்) (ஏப்ரல் 12, 1904 - ஜனவரி 4, 1974) தமிழக எழுத்தாளர், இதழாளர், திரைப்படப் பாடலாசிரியர். சுதந்திரப் போராட்ட வீரர். தனித்தமிழ் இயக்க ஆதரவாளராகச் செயல்பட்டார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.
பிறப்பு, கல்வி
சுவாமிநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட கு.மு. அண்ணல்தங்கோ, வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியேற்றம் என்னும் குடியாத்தத்தில் முருகப்ப முதலியார் - மாணிக்கம்மள் இணையருக்குப் பிறந்தார். இளமையில் தந்தை இறந்ததால் தொடக்கக்கல்வி வரை மட்டுமே பள்ளியில் பயின்றார். தனிப்பட்ட ஆர்வத்தால் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத மொழிகளைக் கற்றுக் கொண்டார்.
தனி வாழ்க்கை
கு.மு. அண்ணல்தங்கோவின் மனைவி: சிவமணி. மகன்: தமிழர் தங்கோ. மகள்: தமிழரசி, நாவுக்கரசி.
இலக்கிய வாழ்க்கை
கு.மு. அண்ணல்தங்கோ சமூகசீர்திருத்த நோக்கம் கொண்ட கவிதைகளையும், அரசியல் கட்டுரைகளையும் மிகுதியாக எழுதியிருக்கிறார். பின்னர் தனித்தமிழியக்கக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். அண்ணல்தங்கோவின் முதன்மை இலக்கியப் பங்களிப்பாகக் கருதப்படுபவை அவர் எழுதிய தமிழியக்கக் கருத்துக்கள் அடங்கிய இசைப்பாடல்கள்.
இதழியல்
கு.மு. அண்ணல்தங்கோ, 1924-ம் ஆண்டு ‘குடியரசு’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1942-ல், ‘தமிழ்நிலம்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார்.
திரை வாழ்க்கை
கு.மு. அண்ணல்தங்கோ திரைப்பாடல் ஆசிரியராய்ச் செயல்பட்டார். ‘பராசக்தி’, ‘பெற்றமனம்’, பசியின் கொடுமை’, கோமதியின் காதலன்’ போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.
அரசியல்
கு.மு. அண்ணல்தங்கோ இளமையிலேயே காங்கிரஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். 1922-ல், ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தலைமை வகித்த திருப்பத்தூர் வட்ட அரசியல் மாநாட்டை நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார். 1923-ல், மதுரை வைத்தியநாத ஐயருடன் இணைந்து கள்ளுக் கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தினார். நாக்பூரில் தடையை மீறி கொடிப் போராட்டம் நடத்திச் சிறை சென்றார். அதே ஆண்டில் டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1924-ல், காந்தி தலைமையில் நடந்த பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
1925-ல் நிகழ்ந்த வைக்கம் போராட்டம், 1928-ல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930-ல் உப்புசத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை அகற்றும் போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு முறை சிறை சென்றார். டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இணைந்து, வ.வே.சு. ஐயருக்கு எதிரான குருகுலப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1934-ல், காந்தி குடியாத்தம் வந்தபோது அவரை வரவேற்றுச் சிறப்புரையாற்றினார். 1936-ல் காங்கிரசில் இருந்து விலகினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார். அது ஏற்கப்படாததால் அக்கட்சியிலிருந்து விலகினார்.
அமைப்புப் பணிகள்
கு.மு. அண்ணல்தங்கோ, 1927-ல் ‘திருக்குறள் நெறி தமிழ்த் திருமணம்’ என்பதை அறிமுகப்படுத்தினார். தன் திருமணத்தை அந்நெறியில் புரோகிதர் மற்றும் சடங்குகளின்றி நடத்தினார். தனித் தமிழ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். சுவாமிநாதன் என்னும் தன் பெயரை தூய தமிழில் அண்ணல்தங்கோ என்று மாற்றிக் கொண்டார். வேலூரில் 1937-ல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவையைத் தொடங்கினார். அதன் மூலம் ஆண்டுதோறும் பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் வரவழைத்துச் சிறப்பித்தார். 1937, 1938-ல் தமிழர் உரிமை மாநாடுகளை வேலூர் மற்றும் வடசேரியில் நடத்தினார். 1938-ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
சி.பி. சின்னராஜ் என்ற பெயரை சி.பி. சிற்றரசு என்றும், நாராயணசாமியை நெடுஞ்செழியன் என்றும், அரங்கசாமியை அரங்கண்ணல் என்றும், இளமுருகு தனபாக்கியத்தை இளமுருகு பொற்செல்வி என்றும், காந்திமதிக்கு அரசியல் மணி (பின்னர் மணியம்மை ஆனார்) என்றும் பெயர் மாற்றியவர் அண்ணல் தங்கோதான். மு. கருணாநிதிக்கு அருள்செல்வன் என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அண்ணா அதனை ஏற்காததால் அப்பெயர் மாற்றம் நிகழவில்லை.
கு.மு. அண்ணல்தங்கோ, 1953-ல், தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். தமிழ்நாடு பெயர் மாற்ற மாநாடு நடத்தினார். அண்ணா, பாரதிதாசன், ஞா.தேவநேயப் பாவாணர், ஜி.டி. நாயுடு, கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். எழுத்தாளர் கோவி. மணிசேகரனுக்குத் தமிழ்க் கற்பித்தார். 1972-ம் ஆண்டில் புதுடில்லியில் நடைபெற்ற சுதந்திர தின வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து தியாகிகளில் கு.மு. அண்ணல்தங்கோவும் ஒருவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மத்திய அரசு வேலூரின் மையப் பகுதியில் அளித்த 15 ஏக்கர் நிலத்தை அரசுக்கே திருப்பியளித்தார்.
விருதுகள்
- கு.மு. அண்ணல்தங்கோவின் சுதந்திரப் போராட்ட உணர்வைச் சிறப்புக்கும் வகையில் அப்போதைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி தாமிரப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.
- அண்ணல்தங்கோவின் தூய தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் வகையில் அழகர் அடிகள் 1960-ல் ‘தூயதமிழ்க் காவலர்’ என்ற விருதை வழங்கிப் பாராட்டினார்.
மறைவு
கு.மு. அண்ணல்தங்கோ, ஜனவரி 4, 1974 அன்று காலமானார்.
நாட்டுடைமை
தமிழக அரசு, கு.மு. அண்ணல்தங்கோவின் நூல்களை 2008-ல், நாட்டுடைமை ஆக்கியது.
நினைவு
கு.மு. அண்ணல்தங்கோ நினைவாக ‘கு.மு. அண்ணல்தங்கோ அறக்கட்டளை’ அமைக்கப்பட்டுள்ளது.
கு.மு. அண்ணல்தங்கோ நினைவாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ’கு.மு. அண்ணல்தங்கோ நூலகம்’ அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கு.மு. அண்ணல்தங்கோவிற்கு, குடியாத்தத்தில், ரூபாய் 50 லட்சத்தில், மணிமண்டபத்துடன் கூடிய திருவுருவச் சிலை அமைக்க இருப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
மதிப்பீடு
கு.மு. அண்ணல்தங்கோ, தனித்தமிழ் இயக்கத்துடன் இணைந்து தமிழ் இனம், மொழி உயர்வுக்கான பல பணிகளை முன்னெடுத்தார். தனித்தமிழில், பேசவும் எழுதவும் வேண்டும் என வலியுறுத்தினார். திருக்குறள் நெறியையும், தனித்தமிழையும் பரப்பினார். மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோர் தனித்தமிழ் ஆய்வை, சொற்பிறப்பை நிலைநாட்டியவர்கள் என்றால், அண்ணல்தங்கோ அக்கொள்கையைச் செயல்படுத்தும் களப்பணியாளராகச் செயல்பட்டார். மறைமலையடிகள், பாவாணர் வழிவந்த தனித்தமிழ் இயக்க அறிஞர்களுள் ஒருவராக கு.மு. அண்ணல்தங்கோ மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- தமிழ்மகள் தந்த செய்தி அல்லது சிறையில் யான் கண்ட கனவு
- அறிவுப்பா அல்லது என் உள்ளக் கிழவி சொல்லிய சொல்
- தமிழ்த்தேசியப் பாடல்கள்
- அண்ணல்தங்கோ கவிதைகள்
- அண்ணல் முத்தம்மாள் பாட்டு
- மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?
- நூற்றுக்கு நூறு வெற்றிக் காங்கிரசு வெற்றித் தமிழ்மறவர்
- தேர்தல் போர் முரசுப் பாடல்கள்
- முருகன் தந்த தேன் கனிகள்
உசாத்துணை
- அண்ணல்தங்கோ இணையதளம்
- கு.மு. அண்ணல்தங்கோ வாழ்க்கைக் குறிப்பு: செங்குந்தமித்திரன் மாத இதழ், ஏப்ரல் 2020
- கு.மு. அண்ணல்தங்கோ: குங்குமம் இதழ் கட்டுரை
- தி. ஸ்டாலின் குணசேகரன் கட்டுரை: தமிழருவி தளம்
- ‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல்தங்கோ!
- அண்ணல்தங்கோ நூல்: தமிழ் இணைய மின்னூலகம்
- அண்ணல்தங்கோ பிறந்தநாள் விழா
- அண்ணல்தங்கோ என்னும் ஆளுமை
- தூயதமிழ் போராளி அண்ணல்தங்கோ
- விடுதலை வேள்வியில் தமிழ் வளர்த்தவர் தினமணி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
26-Jul-2023, 10:36:12 IST