under review

காரை இறையடியான்

From Tamil Wiki
காரை இறையடியான்

காரை இறையடியான் (முகம்மது அலி மரைக்காயர்) (நவம்பர் 17, 1935 - ஜனவரி 21, 1994) கவிஞர். எழுத்தாளர். இதழாளர். பதிப்பாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘பூஞ்சோலை’ என்னும் தனித்தமிழ் இதழை நடத்தினார். ‘சமரசம் இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இஸ்லாமிய இலக்கியங்கள் சிலவற்றைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

முகம்மது அலி மரைக்காயர் என்னும் இயற்பெயரை உடைய காரை இறையடியான், நவம்பர் 17, 1935 அன்று, காரைக்காலில், ஹாஜி முகம்மது அப்துல் காதர் - பாத்திமா உம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவரது பாட்டனார் அமுதகவி சாயபு மரைக்காயர், தமிழ்ப் புலவர். பல இலக்கியங்களைப் படைத்தவர். இளைய சகோதரர் பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர்.

காரை இறையடியான், காரைக்காலில் உள்ள மு.வி.ச. உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். தமிழில் ‘வித்துவான்’ பட்டத்திற்கு முந்தைய நிலையான பிரவேசப் பண்டிதர் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

காரை இறையடியான்

தனி வாழ்க்கை

காரை இறையடியான், தான் பயின்ற மு.வி.ச. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். காரைக்கால் அகம்மதியா அரபிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். பிள்ளைகள்: தமிழ்ச்செம்மல் (எ) உமர்ஃபாரூக்; அருட்செல்வன் (எ) முகம்மது சாதிக்; இசையன்பன் (எ) அனீஸ்; செந்தமிழ்ச்செல்வி (எ) சிராசுன்னிசா.

காரை இறையடியான் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

காரை இறையடியானின் முதல் கவிதை கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வெளியானது. தொடர்ந்து பாரதிதாசனின் குயில் இதழில் இவரது கவிதைகள் முகம்மது அலி என்ற பெயரில் வெளிவந்தன. தேவநேயப் பாவாணர் உடன் ஏற்பட்ட தொடர்பால், தனித்தமிழ்ப் பற்றால் ‘காரை இறையடியான்’ என்ற புனை பெயரில் எழுதினார். சி. இலக்குவனார் நடத்தி வந்த குறள் நெறியில் இவரது கவிதைகள் வெளியாகின. தொடர்ந்து அறிவு, எழில், ஏவுகணை, அறமுரசு, கவிஞன், கவிதா மண்டலம், கண்ணதாசன், குமரி, சாந்தி விகடன், சூறாவளி, தமிழ்ச்சிட்டு, தமிழ்ச்செய்தி, தமிழ்ப்பாவை, தமிழ் முழக்கம், தென்மொழி, தென்குமரி, தென்னவன், முஸ்லிம் முரசு, மணி விளக்கு, மதிநா எனப் பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். தனது கவிதைகளுக்காக கவியரசு கண்ணதாசன், அழ. வள்ளியப்பா, சுரதா ஆகியோரால் பாராட்டப்பெற்றார். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை நூல்களைப் போல் இஸ்லாமிய சமயத்துக்காக காரை இறையடியான் எழுதிய நூல் ‘திருவருட்பாவை’. இதுவே காரை இறையடியான்எழுதிய முதல் நூல். காரை இறையடியான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழில் இரட்டைமணி மாலையையும் பதிகத்தையும் முதன் முதலில் பாடிய காரைக்கால் அம்மையார் மீது இரட்டை மணி மாலையையும் பதிகத்தையும் பாடினார். காரை இறையடியான் எழுதிய நூல்கள் பல அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக உள்ளன.

இதழியல்

காரை இறையடியான், தனது நண்பர் காரை அலிமூடன் இணைந்து ‘பூஞ்சோலை’ என்ற தனித்தமிழ் மாத இதழை ஆசிரியராக இருந்து நடத்தினார். சமரசம் இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

இசை

காரை இறையடியான் திருக்கண்ணபுரம் சீனிவாசப் பிள்ளையிடம் இசை பயின்றார். திருமணம், பெயர்சூட்டு விழா, நினைவு விழா, பாராட்டு விழா போன்ற நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பாடல்கள் பாடினார்.

நாடகம்

காரை இறையடியான் பள்ளியில் படிக்கும்போது பல நாடகங்களில் நடித்தார். மேடை நாடகங்களிலும் நடித்தார்.

பதிப்பு

காரை இறையடியான், ‘பாத்திமா பதிப்பகம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தோற்றுவித்தார். பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் எழுதிய ‘நபிமொழி நானூறு’ என்னும் நூலை வெளியிட்டார். தொடர்ந்து தனது முதல் நூலான ‘திருவருட்பாவை’ நூலை வெளியிட்டார். மு. சாயபு மரைக்காயரின் நூல்களையும் தனது நூல்களையும் மற்றும் பிற எழுத்தாளர்களது நூல்களையும் தனது பதிப்பகம் மூலம் வெளிக்கொணர்ந்தார்.

பொறுப்புகள்

  • தேவநேயப் பாவாணர் தொடங்கிய உலகத் தமிழ்க் கழகத்தில் மாவட்டத் தலைவராகப் பணியாற்றினார்.

விருதுகள்/பரிசுகள்

  • தென்றல் இதழ் நடத்திய வெண்பாப் போட்டியில் முதல் பரிசு
  • மதுரை எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் பரிசு
  • தமிழ்க் கவிஞர் மன்றம் நடத்திய போட்டியில் பரிசு
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய குழந்தை இலக்கியக் கவிதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய 1987-ம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான விருது - தமிழமுதம் கவிதைத் தொகுப்பு.
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய 1992-ம் ஆண்டின் தத்துவம், சமயம் ஆகிய துறைகளில் வெளியான சிறந்த நூலுக்கான விருது - நபிமொழிக் குறள்
  • புதுவை அரசு பாரதி நூற்றாண்டு விழாவில் அளித்த பாரதி பட்டயம்
  • தனித்தமிழ்த் தென்றல் பட்டம்
  • தர்காப்புலவர் பட்டம்
  • பாவலர்மணி பட்டம்
  • கவிமாமணி பட்டம்

மறைவு

காரை இறையடியான், ஜனவரி 21, 1994 அன்று, தனது 59-ம் வயதில் காலமானார்.

நினைவு

காரை இறையடியான் நினைவாக, காரைக்கால் சண்முகா மேல்நிலைப்பள்ளியில், காரை இறையடியான் தமிழ் இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது.

மதிப்பீடு

காரை இறையடியான், இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்தவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர். தனித் தமிழ் ஆர்வலராக விளங்கிய இஸ்லாமியர். சமரச நோக்கு உடையவராகத் திகழ்ந்தார். “தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்” என்கிறார் முனைவர் அறிவுநம்பி. “இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும் பாவலர் இறையடியானுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனியிடமுண்டு” என்று மதிப்பிடுகிறார், திருமுருகன்.

நூல்கள்

  • திருவருட்பாவை
  • திருநபி இரட்டை மணிமாலை
  • காரைக்கால் மஸ்தான் சாகிபு வலியுல்லா வரலாற்றுப் பேழை
  • தமிழமுதம்
  • வாழ்வியல்
  • கல்லறைக் காதல்
  • கன்னித்தமிழ் வளர்த்த காரைக்கால் அம்மையார்
  • செந்தமிழ்த் தொண்டர் ஆற்றுப்படை
  • நபிமொழிக் குறள்
  • அறிவியல் ஆத்திசூடி - உரை நூல்

உசாத்துணை


✅Finalised Page