under review

கல்வியொழுக்கம்

From Tamil Wiki
கல்வியொழுக்கம் சுவடி - பிரிட்டிஷ் நூலகம்; லண்டன்

கல்வியொழுக்கம் ஔவையார்களில் ஒருவரால் இயற்றப்பட்ட நீதி நூல். கல்வி மற்றும் ஒழுக்கத்தின் இன்றியமையாமையை அகர வரிசையில் தொடங்கிக் கூறுகிறது. இதன் காலத்தை அறிய இயலவில்லை.

தோற்றம்

ஔவையார்களுள் ஒருவரால் இயற்றப்பட்ட நூல் கல்வியொழுக்கம். இதன் காலம் அறியப்படவில்லை. இச்சுவடி குறித்து செந்தமிழ் இதழில், அதன் ஆசிரியர் ரா. இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். போற்றிமாலை, நீதியொழுக்கம், கல்வியொழுக்கம், பாண்டியன் கலிப்பா, கொன்றை வேந்தன் சுந்தரபாண்டியன் தொகுதி (பிற்காலத்தில் வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை), ஆத்திசூடி, மூதுரை, நல்வழி போன்றவை அடங்கிய பழஞ்சுவடி ஒன்றை கந்தசாமிக் கவிராயர் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சுவடிகளில் பல பாட பேதங்கள் இருப்பதாகவும் குறித்துள்ளார் [1] .

பதிப்பு, வெளியீடு

'கல்வியொழுக்கம்' முதன்முதலில், 1926-ல், யாழ்ப்பாணம் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த க. பொன்னம்பலம் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. அதன் மறுபதிப்பு, 1968-ல், க.பொன்னம்பலத்தின் தம்பி மருத்துவர் க. குழந்தைவேலுவால், யாழ்ப்பாணம் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.

தமிழ்நாட்டில், புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், 1953-ல், கல்வியொழுக்கம் நூலைப் பதிப்பித்தார். 1966-ல் தாம் எழுதிய ’அவ்வையார்' என்னும் நூலில் கல்வியொழுக்கம் பற்றிக் குறிப்பிட்ட ம.பொ.சிவஞானம், அதனைத் தனி நூலாகப் பதிப்பித்து வெளியிட்டார். 1995-ல், செ. இராசு கல்வியொழுக்கம் நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். தாயம்மாள் அறவாணன் எழுதிய ‘அவ்வையார்' நூலில் கல்வியொழுக்கமும் இணைக்கப்பட்டு வெளியானது. வேம்பத்தூர் கிருஷ்ணன் பதிப்பித்த ’ஔவைத் தமிழமுதம்’ நூலில் கல்வியொழுக்கமும் இடம்பெற்றது.

நூல் அமைப்பு

கல்வியொழுக்கம்,

”கல்வி யொழுக்கம் கருத்துடன் கற்கச் செல்வம் மிகுத்துச் சிறப்புண் டாமே"

- என்ற வரிகளுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து,

அஞ்சு வயதில் ஆதியை ஓது
ஆதியை ஓத அறிவுண்டாமே
இனியது கொடுத்தே எழுத்தை அறி
ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும்
உடைமை என்பது கல்வி உடைமை

என்று தொடங்கி,

வித்தை கல்லாதவர் வெறியராவார்
வீரியம் பேசார் வித்தை அறிந்தோர்
வெண்பா முதலாக விளங்கவே வோது
வேதம் முதலாய் விரைந்த றிந்தோது
வையகமெல்லாம் வாழ்த்தவே ஓது

-என்ற வரிகளுடன் நிறைவடைகிறது.

நூலின் இறுதியில், ”அரசி அவ்வையார் அருளிச் செய்த கல்வியொழுக்கம் முற்றும்” என்ற வரிகள் உள்ளன.

மொழிபெயர்ப்பு

கல்வியொழுக்கம் நூலை ஜெர்மானிய மொழியில் வான் ரூதீன் என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கிலத்திலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

ஆவணம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் கல்வியொழுக்கம் ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டுளன. ஈரோடு கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகம், ஈரோடு அரசு அருங்காட்சியகம், பேரூர் சாந்தலிங்கர் திருமடம் போன்றவற்றிலும் கல்வியொழுக்கம் ஓலைச் சுவடிகள் உள்ளன. தனியார் வசமும் சில ஏடுகள் உள்ளன. லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் கல்வியொழுக்கம் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டுள்ளது.

பாடபேதங்கள்

கல்வியொழுக்கம் ஓலைச்சுவடியில் பல்வேறு பாட பேதங்கள் உள்ளதாக ரா. இராகவையங்கார், செ. இராசு இருவரும் குறித்துள்ளனர். சில ஓலைச்சுவடிகளில், ’அஞ்சு வயதில் ஆரியம் ஓது; ஆரியம் ஓத அறிவுண் டாமே” என்று தொடங்கி, ”வேதம் முதலாய்த் தெரிந்துணர்ந் தோது; வோதி யுணர்ந்தோர்க் கெல்லா வருமே” என்று நிறைவடைந்துள்ளது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page