under review

கண்ணப்ப தம்பிரான்

From Tamil Wiki
கண்ணப்ப தம்பிரான்

கண்ணப்ப தம்பிரான் (புரிசை கண்ணப்ப தம்பிரான்) (பேராசான்) (1915-2003) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். கூத்து வாத்தியார். நான்காவது தலைமுறை கூத்துக் கலைஞர். வடக்கத்தி பாணி தெருக்கூத்தைச் சேர்ந்தவர். அதன்வழியாக தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றத்தின் நிறுவனர். இதன்வழியாக தெருக்கூத்துக் கலையை தேசிய அங்கீகாரத்துக்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணப்ப தம்பிரான் திருவண்ணாமலையில் துரைசாமி தம்பிரானுக்கு மகனாக 1953-ல் பிறந்தார். தந்தை துரைசாமி தம்பிரான், தாத்தா வீராசாமி தம்பிரான் ஆகியோர் தெருக்கூத்துக் கலைஞர்கள். தாத்தாவின் அப்பா பரசுராம தம்பிரான் தோல்பாவை கூத்துக் கலைஞர்.

தனி வாழ்க்கை

மனைவி கண்ணம்மாள். இரு மகன்கள். நான்கு மகள்கள். மகன்கள் கண்ணப்ப காசி தம்பிரான், பி.கே. சம்பந்தன் ஆகியோர் புகழ்பெற்ற தெருக்கூத்துக் கலைஞர்கள்.

அமைப்புச் செயல்பாடுகள்

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றம்

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றம் 1980-ல் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஆனது. 1982-ல் சங்கீத நாடக அகாடமி இந்த நிறுவனத்திற்கு ஐந்து வருடங்கள் மானியம் அளித்தது. இதன் வழியாக இளைஞர்களுக்கு கூத்து பயிற்றுவிக்கும் பணி இக்குழுவின் வழியாக நடைபெற்றது. இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற பல இளம் கலைஞர்களுக்கு மத்திய மனித வள அமைச்சகத்தின் ஆதரவ ஊதியம் கிடைத்தது. கண்ணப்ப தம்பிரான், ராகவ தம்பிரான், நடேச தம்பிரான் ஆகியோரின் முயற்சியால் இக்குழு கூத்து முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகளைச் செய்தது.

சூர்ப்பனகை சபதம், காண்டகவனத் தகனம், வாலி வதம், ஹனுமன் தூது, ராவண வதம், தெனாலிராமன், சீதா கல்யாணம், படுகளம் ஆகியவை இக்குழுவின் முக்கியமான கூத்துக்கள். முக்கியமான எழுத்தாளர்களின் கதைகள் கூத்தாக தயாரிக்கப்பட்டது நிகழ்த்தப்பட்டதும் இக்குழுவின் சிறப்பம்சம். 'An old man with huge wings' என்ற மார்குவேஸின் (Gabriel Gracia Marquez) கதை கூத்தாக அரங்காற்றுகை செய்யப்பட்டது. 1996-ல் இக்கூத்து கொலம்பியா நாட்டின் போகோட்டாவில் அரங்கேற்றப்பட்டது. ஜெர்மன் எழுத்தாளர் பெர்டோல்ட் பிரட்-ன் (Bertolt Brecht) 'Caucasian chalk circle' என்ற கதையும் கூத்தாக ஆக்கப்பட்டது. மரபார்ந்த கூத்துக் களத்திலிருந்து நவீனக் களத்தில் கூத்தை முன்னெடுப்பதில் இக்குழு முன்னோடியாக அமைந்தது.

பிரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் (1990) ஆகிய நாடுகளிலும் இக்குழு அரசு நிகழ்ச்சிகளில் தெருக்கூத்தை அரங்கேற்றியுள்ளது. இலங்கையின் நீலன் திருச்செல்வத்தின் 65-வது பிறந்த நாள் விழா (2009), இந்தியாவின் குடியரசு விழாக் கொண்டாட்டம் (2009) ஆகிய நிகழ்வுகளிலும் இவர்கள் குழுவின் கூத்து நிகழ்ந்தது.

கலை வாழ்க்கை

கண்ணப்ப தம்பிரான் பத்து வயது முதல் தன் அப்பா துரைசாமி தம்பிரான், சித்தப்பா ராகவ தம்பிரான் ஆகியோரிடமிருந்து கூத்து பயின்றார். கப்ரியேல் கார்சியா மார்க்குவெஸின் "The old man with huge Wings" புனைவை தெருக்கூத்துக்கு பழக்கி அரங்கேற்றினார். இது 1996-ல் ஐந்தாவது சர்வதேச தியேட்டர் விருதுவிழாவில் கொலம்பியாவில் அரங்கேற்றினார். அவந்தி மேதுரி மற்றும் கூத்துப் பட்டறையுடன் இணைந்து 'God Has changed his name" என்ற தனி இசைக்கு உதவினார். ந. முத்துசாமி கூத்துப்பட்டறையை உருவாக்க ஒருவிதத்தில் காரணமாக இருந்தவர் கண்ணப்ப தம்பிரான். அவருடன் இணைந்து நாடகம், கூத்து சார்ந்து சில முக்கியமான முயற்சிகளை செய்தார் கண்ணப்ப தம்பிரான்.

கண்ணப்ப தம்பிரான் கூத்துக் குழுவிற்காக திருவேங்கடம் பதினாறு கூத்துப் பிரதிகளை உருவாக்கினார். இந்திரஜித், தக்கயாகம், சூர்ப்பனகை சபதம், காண்டகாவனத் தகனம் ஆகியவை அவற்றில் சில. இக்கூத்துப் பிரதிகளைக் கொண்டு கண்ணப்ப தம்பிரானின் குழுவினர் பிரான்ஸ், நார்வே அகிய இடங்களில் கூத்து அரங்கேற்றம் செய்தனர்.

விருதுகள்

  • சங்கீத நாடக அகாடமி விருது
  • கலைமாமணி விருது

மறைவு

கண்ணப்ப தம்பிரான் 2003-ல் காலமானார்.

நினைவு

  • கண்ணப்ப தம்பிரான் நூற்றாண்டுவிழா 2013-ல் கொண்டாடப்பட்டது.
  • கண்ணப்பத் தம்பிரானின் நினைவு நாடக விழாவை 'புரிசை கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம்' 2003-க்குப் பிறகு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமத்தில் நடத்துகிறது.
  • 2003முதல் புரிசை தெருக்கூத்து மன்றம் சார்பில் கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளார் விருது தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

மதிப்பீடு

"ஒரு கலையின் உள்ளார்ந்த கலைவடிவம், அதை வெளிப்படுத்த வரும் கலைஞனால் எல்லை வகுக்கப்பட்டு விடுகிறது என்று தோன்றுகிறது. இல்லையெனில் எதுவும் கொச்சைப் படுத்தப்படும் அபாயம் உள்ளது. ஒரு கலைஞனின் கலை ஆளுமையைப் பொறுத்துதான் அக்கலையின் சிருஷ்டிகரம் விரிவடைகிறது அல்லது குறுகிப் போகிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது. நடேசத் தம்பிரானுக்குப் பிறகு தெருக்கூத்தின் கலைவடிவ எல்லைகளை நிர்ணயிப்பவராக கண்ணப்பத் தம்பிரான் இருந்தார் என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதன் கடைசிப் பேராசான் (Master) கண்ணப்பத் தம்பிரான் என்றும் சொல்லத் தோன்றுகிறது. கடைசி பேராசான் என்று இதை நான் ஏதோ யுகமுடிவு, பேராபத்து என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் சமுதாயத்தில் ஒவ்வொரு துறையில் ஒரு பெரிய கலைஞன் தோன்றுவான். பின்னர் அது தேக்கமடையும். மற்ற துறை எதிலும் பெரு நிகழ்வுகள் நிகழக்கூடும். இப்படியான சுழற்சி சமுதாய வளர்ச்சியில் சகஜம்தான்." என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

அரங்கேற்றிய கூத்துக்கள்

  • மகாபாரதக் கூத்துக்கள்
  • பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன்
  • இந்திரஜித்
  • தக்கயாகம்
  • சூர்ப்பனகை சபதம்
  • காண்டகாவனத் தகனம்
  • வாலி வதம்
  • ஹனுமன் தூது
  • ராவண வதம்
  • தெனாலிராமன்
  • சீதா கல்யாணம்
  • படுகளம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Feb-2025, 06:30:05 IST