வீராசாமி தம்பிரான்
வீராசாமி தம்பிரான் (1830 - 1893) புரிசை தெருக்கூத்து பரம்பரையை உருவாக்கி நடத்திய முதல் தலைமுறை கூத்து கலைஞர். முதலில் தோல் பொம்மலாட்ட கலைஞராக இருந்து பிறகு கூத்திற்கு வந்தவர். சதிராட்டத்திற்கு நட்டுவாங்கம் செய்பவராக, மந்திரவாதம், ஜால வித்தைகள் செய்யத் தெரிந்தவராக இருந்தார். புரிசையின் புகழ்பெற்ற கூத்து கலைஞர்களான நடேச தம்பிரானுக்கும், கண்ணப்ப தம்பிரானுக்கும் தாத்தா இவர். ராகவ தம்பிரானுக்கு அப்பா.
வாழ்க்கை குறிப்பு
வீராசாமி தம்பிரானின் அப்பா பெயர் பரசுராம தம்பிரான். உடன்பிறந்தவர்கள் மூன்று தம்பிகள். முத்துச்சாமி தம்பிரான், பாம்புக்குட்டி தம்பிரான், குப்புசாமி தம்பிரான். பரசுராம தம்பிரானின் தொழில் விவசாயம். இவர்கள் சைவத்தில் தீவிர பிடிப்புள்ள லிங்காயத வழி வந்த வீரசைவ இனத்தை சேர்ந்த பண்டார வகுப்பினர். வீராசாமி தம்பிரான் மந்திரவாதியாகவும் இருந்தார். தன் அப்பாவிடமிருந்து மந்திரவாதத்தை கற்றார். காற்று, கறுப்பு, பட்சி தோஷம் இவற்றிற்கு மந்திரிப்பது, பிரசவ வேதனையில் இருக்கும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக எண்ணெய் மந்திரித்துக் கொடுப்பது, விபூதி போடுவது, பேய் பிடித்தவர்களுக்குப் பேய் ஓட்டுவது, குளிசம் கட்டுவது போன்ற மந்திரவாத செயல்களை வழக்கமாக செய்தார்.
வீராசாமி தம்பிரான் தண்ணீரில் நடப்பது, பசும்பால் கறந்தால் உதிரமாக வரும்படி செய்வது, கள்ளை ரத்தமாக்குவது, மரத்தில் உள்ள காய்களை உதிரச் செய்வது, வீடுகள் பற்றி எரிவது போல் காண்பிப்பது போன்ற ஜாலவித்தைகளையும் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். இது போன்ற காரியங்களை தன்னுடைய தயாதியான தட்சிணாமூர்த்தி தம்பிரானுடம் இணைந்து செய்தார். வீராசாமி தம்பிரானை போட்டியிட்டு ஜெயிக்க வேண்டுமென்று பெருமட்டூரிலிருந்து இன்னொரு ஜாலவித்தைக்காரர் புரிசைக்கு வந்து, புரிசை ஏரி தண்ணீரின் மீது கடை விரித்து பொருள்களை வாங்க விரும்புவோர் வரலாம் என்ற செய்தியை பரப்பினாராம். வீராசாமி தம்பிரான் பாதரட்சைகளை அணிந்து கொண்டு நேரே தண்ணீரின் மீது நடந்ததும் ஏரியின் மீது போடப்பட்டிருந்த கடை மறைந்து தண்ணீரின் மீது இவர் நடந்தது மட்டும் தெரிந்திருக்கிறது. பெருமட்டூர் ஜாலவித்தைகாரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைக்கார அதிகாரி அந்த வட்டாரத்தில் உள்ள 121 கிராமங்களில் ஆளுக்கு அறுபது அறுபது கிராமங்களை வீராசாமி தம்பிரானுக்கும், பெருமட்டூர் மந்திரவாதிக்கும் மிராசு கிராமங்களாக பிரித்து கொடுத்திருக்கிறார். மீதமுள்ள செய்யாறுக்கு அடுத்த அனுகாவூர் கிராமத்தை பாதி பாதியாக பிரித்து வெள்ளாளர் தெரு வீராசாமி தம்பிரானுக்கும், கவுண்டர்மார் தெரு பெருமட்டூர் மந்திரவாதிக்கும் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் மிராசு வருடந்தோறும் வீட்டிற்கு வந்துவிடும். அதனால் புகழுடனும் செல்வாக்குடனும் இருந்தார் வீராசாமி தம்பிரான்.
தனிவாழ்க்கை
வீராசாமி தம்பிரான் வள்ளியம்மாளை மணந்தார். மகன்கள் ராகவ தம்பிரான், விஜய தம்பிரான், கிருஷ்ண தம்பிரான் (நடேச தம்பிரானின் அப்பா), துரைசாமி தம்பிரான் (கண்ணப்ப தம்பிரானின் அப்பா). மகள்கள் கனகம்மாள், அன்னம்மாள்.
கலை வாழ்க்கை
நடனம்
வீராசாமி தம்பிரான் தேவதாசிகளுக்கு பரதநாட்டியம் (சதிராட்டம்) கற்றுக் கொடுப்பவராகவும், மெட்டி கட்டுவது, நாட்டியத்திற்கான உடை மடி கட்டுவது போன்ற பயிற்சிகளையும் அளித்தார். மெட்ராஸ் கந்தசாமி கோவிலில் தாசிகளுக்கு நடனம் சொல்லி கொடுத்திருக்கிறார்.
தோல்பொம்மைக் கூத்து
வீராசாமி தம்பிரான் தோல் பொம்மலாட்ட கலைஞராக இருந்தார். கிராமங்களில் ஏதாவது விசேஷம் நடக்கும் போது வீராசாமி தம்பிரான் அங்கு தோல் பொம்மை விளையாட்டு நடத்துவார். அதை மக்கள் சாதம் எல்லாம் கட்டிக் கொண்டு வெளியூரில் இருந்து வந்து பார்ப்பார்கள். தன் தாத்தா வீராசாமி தம்பிரான் பழகுவதற்காக வைத்திருந்த தோற்பொம்மை ஒன்று ரொம்ப காலம் தன் வீட்டில் கிடந்ததை பற்றி கண்ணப்ப தம்பிரான் குறிப்பிட்டுள்ளார். அது பச்சை நிறத்தில் இருந்த ராமர் பொம்மை என்பதால் தமிழகம் முழுக்க தோல்பாவை நிழற்கூத்துகளில் நடத்தப்படுவது போல வீராசாமி தம்பிரான் இராமாயணக் கதைகளை தான் நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது.
தெருக்கூத்து
பிறகு பொம்மைகளுக்கு பதிலாக மனிதர்களே கூத்து ஆடலாம் என்று தன் இனத்தவர்களை கொண்டு கம்ச சம்ஹாரம் எனும் கூத்தை பாகவத கீர்த்தனைகளால் ஏற்படுத்தி நடத்தினார் வீராசாமி தம்பிரான். அதற்கடுத்து தன் சொந்தங்கள் இருபது பேருக்கு மகாபாக் கதைகளைக் கற்றுக் கொடுத்து, உடையணிகள், அலங்காரங்கள் செய்து ஒரு குழுவை உருவாக்கி கூத்து பயிற்சி அளித்தார். ஹிரண்ய சம்ஹாரம், கிருஷ்ணன் தூது எழுதிய கலவை குமாரசாமி தம்பிரான், சுபத்திரை கல்யாணம், சிறுத்தொண்டர் விலாசம் எழுதிய சுப்பிரமணிய தம்பிரான், மாசிலாமணி கவிராயர் ஆகியவர்கள் எழுதிய கதைகளை கொண்டு தெருக்கூத்து ஏற்படுத்தினார். இப்படி புரிசை தெருக்கூத்தின் முதல் தலைமுறை உருவாகியது. வீராசாமி தம்பிரான் காலத்தில் தான் புரிசையில் பாஞ்சாலி (திரௌபதி) அம்மன் கோவில் உருவாயிற்று என்றும், கிராமத்தின் வற்புறுத்தலால் தான் இவர் தெருக்கூத்துக்கு வந்தார் என்றும் சொல்கிறார்கள்.
வீராசாமி தம்பிரான் காலத்தில் குழுவில் இருந்த சாத்தனூர்காரர்கள் பிரிந்து சென்று விட்டார்கள். எந்தெந்த கூத்துக்கள் அக்குழுவினரால் ஆடப்பட்டதென்று தெரியவில்லை. இந்த கட்டத்தில் மீண்டும் விடாமுயற்சியாக வந்தவாசி ராமசாமி உடையார், புதுப்பாக்கம் சுப்ரமண்ய தம்பிரான், பரசுராம தம்பிரான் - இப்படி பலரிடம் பாரத கூத்து பாடல்களை எழுதி வாங்கி பாரத கூத்தை கற்றுணர்ந்தனர் வீராசாமி தம்பிரான் குழுவினர். ஒவ்வொரு கூத்தையும் வீராசாமி தம்பிரான் தனித்தனியாக நடத்தி வந்தார் என்றும், அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்துக்குள் இருக்கும் என்றும், அப்போது தான் புரிசையில் பாரத (திரௌபதி அம்மன்) கோயில் கட்டியதாகவும், பாரத திருவிழா நடந்ததாகவும் கண்ணப்ப தம்பிரானின் குறிப்பு புத்தகம் சொல்கிறது. அதனால் வீராசாமி தம்பிரான் ஆரம்பித்த கூத்து ஒரு முழு மகாபாரத கூத்தாக மாறுவதற்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது என்று ந.முத்துசாமி குறிப்பிட்டார்.
இக்காலத்தில் கூத்து அலங்காரம் மரக்கட்டைகளில் கண்ணாடி புதைத்து ரேக்குகள் ஒட்டி செய்யப்பட்டது. வெளிச்சத்திற்கு மண்ணெண்ணெய் தீவட்டி கொளுத்தி இரண்டு பக்கமும் ஏகாலிகள் பிடித்து கொள்வது வழக்கம். அதற்கு முன்பு முதலில் கம்ச சம்ஹாரம் கூத்து கற்றுக் கொண்டு ஆடியபோது முகத்தில் பூசுவதற்கு அரிதாரம், சிகப்பு காவிக்கல், நாமக்கட்டி, மரக்கரி, உடைகளில் பளபளப்புக்கு கோல்டு மணி, குழாய் மணி, ஜம்பர் சீட்டி, மதரசாய சேலை - பரித்தி சாயம் தோய்க்கப்பட்டது பயன்படுத்தப்பட்டது. ஆடும் இடத்திற்கு இரண்டு புறமும் மர உலக்கையை நட்டு மேற்புறம் வைக்கோற் பிரியை சுற்றி அதன்மேல் சாணியை பிசைந்து பிசைந்து வைத்து அதன் மீது மண் சட்டி (சலா சட்டி) வைத்து அதில் மணல் கொட்டி அதன்மேல் இலுப்பை கொட்டை, வேப்பங்கொட்டை, புங்கங்கொட்டை ஆகியவற்றை ஆடுகிற செக்கின் பழுதான உலக்கையை எடுத்து பிளந்து அந்த சக்கையை கொளுத்தி உண்டாக்கும் வெளிச்சத்தை வைத்து கூத்து நடந்தது. ராகவ தம்பிரான் காலத்தில் செக்குலக்கையில் இருந்து மண்ணெண்ணெய்க்கு மாற்றம் உண்டாகி விட்டது.
வீராசாமி தம்பிரான் தன் மகன்கள் நான்கு பேருக்கும் கூத்து பயிற்சி அளித்தார். இதில் ராகவ தம்பிரான் திறன் வாய்ந்த கூத்து கலைஞராக இருந்தார். தன் மகன்கள் சிறந்த கலைஞர்களாக உருவானபின் தான் வேஷம் கட்டுவதை விட்டுவிட்டார் வீராசாமி தம்பிரான்.
வீராசாமி தம்பிரான் காலத்தில் அவருடன் குழுவாக இருந்து செயல்பட்டோர் (செவி வழியாக கேட்டு வந்ததை சில விடுபடல்களுடன் கண்ணப்ப தம்பிரான் எழுதி வைத்திருந்ததை கொண்டு இத்தகவல் தரப்படுகிறது):
- வீராசாமி தம்பிரான்
- சாத்தூர் எல்லப்ப தம்பிரான் (ஆற்காடு அருகிலுள்ள சாத்தூர்)
- எண்டத்தூர் இராம தம்பிரான் (உத்திரமேரூர் அருகிலுள்ள எண்டத்தூர்)
- மதுராந்தகம் சுப்பராயமேஸ்திரி
- இருங்கல் பரசுராம தம்பிரான்
- வாலாஜா தாகபுஷ்ப தம்பிரான்
- கலவை குமாரசாமித்தேவர்
- கீழப்பாடி ஜெகன்னாத தம்பிரான்
- ராகவ தம்பிரான்
- கிருஷ்ண தம்பிரான்
- விஜய தம்பிரான்
- துரைசாமித்தேவர்
புரிசை தெருக்கூத்து பரம்பரை
திருவண்ணாமலை மாவட்டம் புரிசையில் இயங்கி வரும் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் கூத்து மன்றம், நடேச தம்பிரார் நாடக மன்றம் போன்ற தெருக்கூத்து குழுக்கள் வீராசாமி தம்பிரான் பரம்பரையில் வந்தது. இப்பரம்பரையில் இருந்து உருவாகி வந்த ராகவ தம்பிரான், நடேச தம்பிரான்,கண்ணப்ப தம்பிரான், கண்ணப்ப காசி, கண்ணப்ப சம்பந்தன் போன்றவர்கள் கூத்திற்கு செய்த பங்களிப்பிற்காக பரவலாக அறியப்படுபவர்கள். முனுசாமி செட்டியார், வேதாசலம் நாயுடு, மண்ணுசாமி உடையார், எல்லப்ப தம்பிரான், வீரராகவன் போன்ற சிறந்த கலைஞர்கள் புரிசை கூத்து குழுவில் இருந்துள்ளனர்.
மதிப்பீடு
1950-களில் இயல் இசை நாடக மன்றத்தின் (அன்று சங்கீத நாடக அகாடமி பிராந்திய பிரிவு) தலைவராக இருந்த ஈ. கிருஷ்ணய்யரும், அவருக்கு உதவியாக இருந்த சியாமளாவும் மன்றத்திற்காக தெருக்கூத்தை தேட ஆரம்பித்த போது அதிக சிதைவில்லாமல் மரபை காப்பாற்றி கொண்டுவரும் குழுவாக புரிசை பரம்பரையில் வந்த நடேச தம்பிரான் குழுவினரை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு இயல் இசை நாடக மன்றத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. வெங்கட் சாமிநாதன் புரிசை கலைஞர்களான நடேச தம்பிரான், கண்ணப்ப தம்பிரான் ஆகியவர்களின் கலைத்திறன் பற்றி எழுதியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையில் புரிசை கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்து உயர் செவ்வியல் கலை என்று குறிப்பிட்டார். ந. முத்துசாமி புரிசை தெருக்கூத்தின் மேம்பாட்டிற்காக பங்களித்துள்ளார். அவர் 'கூத்துப்பட்டறை' அமைப்பை உருவாக்குவதற்கு தெருக்கூத்து கலையும், நடேச தம்பிரான், கண்ணப்ப தம்பிரான் போன்ற புரிசை தெருக்கூத்து கலைஞர்களும் உந்துதலாக இருந்தனர்.
மறைவு
வீராசாமி தம்பிரான் 1893-ல் தன்னுடைய 63-வது வயதில் காலமானார். வீராசாமி தம்பிரான் இறப்பிற்கு பிறகு அவர் தொடங்கிய புரிசை கூத்து குழு அவரது மகனான ராகவ தம்பிரான் தலைமையில் 'ராகவ தம்பிரான் குழு' என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தியது.
உசாத்துணை
- 'அன்று பூட்டிய வண்டி', ந.முத்துசாமி, உயிர்மை பதிப்பகம்
- தெருக்கூத்து நடிப்பு, முனைவர் மு. இராமசுவாமி, 1999, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்:
- கண்ணப்ப தம்பிரானுடன் நேர்காணல்: வெங்கட் சாமிநாதன் - சொல்வனம் இதழ்
- தெருக்கூத்து - பகுதி 1, வெங்கட் சாமிநாதன் - சொல்வனம் இதழ்
- நாட்டார்கலைகளை பேணத்தான் வேண்டுமா? - எழுத்தாளர் ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:54:02 IST