கண்ணன் பெருந்தூது (சிறுகதை)
- கண்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்ணன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Kannan Peruntoothu (Short Story).
கண்ணன் பெருந்தூது (சிறுகதை) அ. மாதவையா எழுதிய கடைசி சிறுகதை. உருவ வார்ப்புக்குச் சிறந்த உதாரணமாக புதுமைப்பித்தனால் மதிப்பிடப்படும் சிறுகதை.
எழுத்து, வெளியீடு
நவம்பர் 1925-ல் பஞ்சாமிர்தம் இதழில் வெளிவந்தது. அ. மாதவையாவின் மறைவிற்குப்பின் வெளிவந்த பஞ்சாமிர்தம் இதழில் கார்த்திகை 1925-ல் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் வெளியான சிறுகதை இது.
கதைச்சுருக்கம்
"கண்ணன் பெருந்தூது என்ற பாட்டின் முதலடி மந்திரம் எடுத்துப்பாடுவது, திடீரென அந்த பெண்களின் வம்புப் பேச்சு குறுக்கிடுவது, மறுபடியும் பாட்டு, மீண்டும் குறுக்கீடு என கதை நிகழ்கிறது. சில நொடிகளில் மிகச் சிறிய பரப்பிலே மிகப் பெரிய பொருளைப் புதைத்து வாசக கவனமெல்லாம் அந்தப் பெண்களின் நடையிலேயே அவர்களின் பேச்சிலேயே நிற்கும் வண்ணம், சம்பவ ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வொருமை என்று பிராண்டர் மாத்தியூஸ் வகுத்த இலக்கணப்படி அமைந்திருக்கிறது." என சிட்டி-சிவபாத சுந்தரம் இணையர் இக்கதையின் சுருக்கத்தைப் பற்றி கூறியுள்ளனர்.
இலக்கிய இடம்
புதுமைப்பித்தன், "உருவ வார்ப்புக்குச் சிறந்த உதாரணமாக இதைத்தான் சொல்ல வேண்டும். கதைப் பாத்திரங்களில் குண விஸ்தாரமும் கதையின் போக்கும் பிரமாதம்" என்று இச்சிறுகதையை மதிப்பிடுகிறார். தமிழில் வெளியான முதல் சிறுகதையென எழுத்தாளர் ஜெயமோகனாலும், வேதசகாயக்குமாராலும் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:18 IST