under review

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது

From Tamil Wiki
கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது - உ.வே.சா. (இரண்டாம் பதிப்பு - 1931)

தூது இலக்கிய நூல்களுள் ஒன்று, கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது. கச்சி எனப்படும் காஞ்சியில் வீற்றிருக்கும் கடவுளான ஆனந்த ருத்திரேசர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, வண்டினைத் தூதாக விடுத்ததாகப் பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இந்நூலில் 504 கண்ணிகள் அமைந்துள்ளன. இதன் காலம் 18 -ம் நூற்றாண்டு. இதனை அச்சிட்டு வெளியிட்டவர். உ.வே. சாமிநாதையர்.

பிரசுரம், வெளியீடு

உ.வே. சாமிநாதையர், மார்ச், 1888-ல், முதன் முதலில் வெளியிட்ட நூல் கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது. இந்நூலை மேலும் விரிவாக்கி, குறிப்புரையுடன், இரண்டாம் பதிப்பினை 1931-ம் ஆண்டு வெளியிட்டார். தொடர்ந்து சில பதிப்புகள் சிலரால் அச்சிடப்பட்டு வெளிவந்தன. இந்நூலின் காலம் 18-ம் நூற்றாண்டு.

ஆசிரியர் குறிப்பு

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது நூலை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். இவர் கவி ராட்சசன் என்று போற்றப்பட்டவர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருத்தணியில் வாழ்ந்த இவர், பல புராண, சிற்றிலக்கிய நூல்களை இயற்றினார். கச்சியப்ப முனிவரையும், அவரது சமகாலப் புலவரான சிவஞான முனிவரையும் ஒன்றாகச் சேர்த்து 'பட்டர் இருவர்' எனச் சான்றோர் உலகம் பெருமைப்படுத்தியது.

கச்சியப்ப முனிவர், இதே இறைவனைக் குறித்து 'கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி' என்ற நூலையும், 'கச்சி ஆனந்த ருத்திரேசர் கழிநெடில்' என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

நூல் அமைப்பு

கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது கலிவெண்பாவில் பாடப்பட்ட தூது என்னும் சிற்றிலக்கியம். இந்நூலில், விநாயகர் மற்றும் ஆனந்த ருத்திரேசர் ஆகியோர் மீதான இரு காப்புச் செய்யுள்களுடன், 504 கண்ணிகள் அமைந்துள்ளன.

ஆனந்த ருத்திரேசரின் சிறப்பு, அடியவர்களுக்கு அவர் அருள் புரியும் விதம், உயிர்களின் மீது அவருக்கு இருக்கும் கருணை, தம்மைப் பூசித்தவர்களையும் குற்றம் செய்தால் தண்டிக்கும் அறம் போன்றவை கச்சியப்ப முனிவரால் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறைவன் உலா வருதல், தலைவி அவரைக் கண்டு காதல் கொள்ளுதல், பின் இறைவனிடம் காதலைச் சொல்லி, கொன்றை மாலையை வாங்கி வருமாறு வண்டைத் தூதாக அனுப்புதல், வண்டின் சிறப்புகள், பெருமை போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறுதியில்,

பூங்கொன்றை வாங்கியிங்குப் பொற்பக் கொணர்ந்தென்றும்
ஓங்கு பெரு வாழ்க்கை உதவு”

- எனத் தலைவி வண்டிடம், இறைவன் சூடிய கொன்றை மாலையைப் பெற்று வந்து, பெரு வாழ்வு தர வேண்டும் என வேண்டுகிறாள்.

சங்க இலக்கியக் கருத்துக்கள், சிலேடை அணி, தற்குறிப்பேற்ற அணி போன்ற அணி நயங்கள், அகப்பொருட் செய்திகள், பண்களின் பெயர்கள் எனப் பல செய்திகள் கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள்

கச்சி ஆனந்த ருத்திரேசரின் பெருமை

பூமாது புல்கும் புயல் வண்ணப் புத்தேளும்
நாமாது புல்குநளி னத்தோனுங் – கோமானும்

வானவரு மண்ணவரும் வானடைய வைந்தொழிலும்
தானடவி நின்ற தனிமுதல்வன் – வானமுதற்

பூதமுதற் காரணமாய்ப் பூத பவுதிகமாய்ப்
பேதமு மான பெருஞ்சோதி – கோதகன்ற

சிற்றறிவுக் குள்ளே செறிந்து திருமேனி
முற்று மெடுத்த முறைமையான் – முற்ற

மறையாக மங்கலைகண் மற்றுங் கிளந்து
முறையாவும் வைத்த முனைவன்

இறைவனின் உலாச் சிறப்பு

இரவுபகல் காட்டு மெறுழுருளை மான்றேர்
வரதன் மணிவீதி வந்தான் – புரவளிக்கும்

அத்திர சாலை யமுதடு சாலையா
வைத்த தனிச்சே வகன்வந்தான் – பைத்தமணி

நாகமு நீள்கோட்டு நாகமுஞ் சூழ்ந்திருப்ப
மாகரும் போற்றுமுடை யான்வந்தான் – ஆகும்

பரிசமுருக் காண்டல் பகர்கேள்வி யோர்பால்
மருவுமணிப் பூணினான் வந்தான் – பரவை

அலைத்தும் புவிபெயர்த்திட் டந்தரத் தோங்கி
மலைத்த விடைக்கொடியான் வந்தான் – நிலைத்த

கடவுளர்தம் மாதர் களம்வறங்கூ ராது
மிடல்படைத்த நன்மிடற்றான் வந்தான் – படர்கருமம்

ஈட்டா ருயிர்விழிக ளெல்லா முருக்காணக்
காட்டாகு முக்கண்ணி னான்வந்தான் – வேட்ட தருள்

ஆனந்த ருத்திரத்தெம் மண்ணல் வந்தான்...

வண்டின் பெருமை

அருள் பெரிதுந் தாங்க நின்போ லார்பெற்றார் பெற்றார்
மருள்சிறிதுந் தாங்கவா ராரே – தெருளரியே

முன்னின்ப நின்னின்ப முற்றிய வென்னின்பம்
பின்னின்ப மன்றிப் பிறிதுண்டே – அன்னை நீ

ஆதற் குரிமை யடுத்தலா னிற்றூது
போதற்க ணாக்கப் புகன்றனேன்

மதிப்பீடு

தமிழில் வெளிவந்துள்ள பல வண்டு விடு தூது நூல்களில், கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது நூல், தெய்வத்தின் பால் தலைவி விடுத்த தூது நூல். இந்நூலில் தேவாரம் முதலிய திருமறைச் செய்திகளும், சைவ சித்தாந்தக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நூலைப் பதிப்பித்த உ.வே.சா., “இஃது ஒரு சிறு நூலாக இருப்பினும், இதனுட் பொதிந்துள்ள உயர்ந்த கருத்துக்களும் சரித்திரங்களும் சொற்பொருட் பிரயோகங்களும் அணி வகைகளும் நடைநயமும் மிகப்பெரிய நூலில் அமைந்தன போலவே விளங்குகின்றன.” என்று மதிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page