under review

தற்குறிப்பேற்றணி (தற்குறிப்பு ஏற்ற அணி)

From Tamil Wiki

இயல்பாக நிகழும் நிகழ்விற்கு கவிஞர் தன் உள்ளக்குறிப்பை/காரணத்தை ஏற்றுவது தற்குறிப்பேற்றம் (தன் குறிப்பு ஏற்றம்) எனப்படும். அது ஒரு செய்யுளில் பயின்று வருவது தற்குறிப்பேற்றணி.

விளக்கம்

பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம்.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
                                                       -தண்டியலங்காரம்

எடுத்துக்காட்டுகள்

எடுத்துக்காட்டு -1 (சிலப்பதிகாரம்)

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட - இளங்கோவடிகள்

அணிப்பொருத்தம்

பொருள்:கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

எடுத்துக்காட்டு - 2 (கம்பராமாயணம்)

மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து.
செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர். கமலச் செங் கண்
ஐயனை 'ஒல்லை வா’ என்று அழைப்பது போன்றது அம்மா! -கம்பர்

அணிப்பொருத்தம்

சீதையின் மணத் தன்னேற்புக்கு மிதிலையில் நுழையும் போது நகரத்து மதில்களிலுள்ள கொடிகள் அசைவது திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள் என்பதைக் குறிப்பாகச் சொல்லி அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவிலே வந்து மணம் புரியுமாறு அந்த நகரம் தன் கொடிகளான கைகளைக் காட்டி அழைப்பது போன்றது.

இயல்பாகக் கொடிகள் அசைவதை இராமனை அழைப்பதாக தன் குறிப்பை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்றணி ஆயிற்று.

எடுத்துக்காட்டு - 3 (சீறாப்புராணம்)

கூறுமா அழுங்கலும் குலைந்தறாத இன்மையும்
சீருலாவும் எம்பிரான் பெரும்பதம் பழிச்சினால்
தீருமால் வருந்தினீர் திருக்கலந்த எங்களூர்
வாரும் என்றழைப்பதொக்கும் மாடம் ஆடும் தோகையே -உமறுப் புலவர்

அணிப்பொருத்தம்

மக்கா நகரத்துக் கொடிகள் அங்கு வரும் மக்களை "நபிகளின் மகிமையால் செல்வம் பொருந்திய இந்நகரில் உங்கள் துன்பமும், வறுமையும் தீரும் ,வருக வருக" என அழைப்பதைப் போல அசைந்தன.

கொடிகள் காற்றில் அசைவதை மக்களை வரவேற்பதற்காக என்று புலவர் தன் கருத்தை ஏற்றிக் கூறியதால் இது தற்குறிப்பேற்றணி.

எடுத்துக்காட்டு - 4 (நள வெண்பா)

காரிருளில் கானகத்தே காதலியைகீ கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.

அணிப்பொருத்தம்

நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்(அலவன்) தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் கடல் நாடிச் செல்கின்றன.

நண்டுகள் இயல்பாக வளையை விட்டு வெளியேறி, கடல் நாடிச் செல்வதை நளனைப் பார்க்கக் கூடாது என்பதால் வெளியேறிச் செல்வதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்றமாகிறது

எடுத்துக்காட்டு - 5 (வில்லி பாரதம்)

ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட் கல்லால் படைத் துணை யாக மாட்டான்
மீண்டு போகென்று அந்த வியன்மதில் குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற (உத்தியோக பருவம் )

அணிப்பொருத்தம்

துவாரகைக் கோட்டை மதில்மேலுள்ள கொடிகள் இயல்பாகக் காற்றில்அசைவதை வில்லிப்புத்தூரார் கண்ணனிடம் போரில் உதவி வேண்டிச் செல்லும் துரியோதனனைக் கண்டு அவை 'கண்ணன் போரில் பாண்டவர்க்கல்லாது உனக்குத் துணை வர மாட்டான். திரும்பிச் செல்' என்று கூறுவது போல் அசைவதாக தன் மனக்குறிப்பை ஏற்றிச் சொல்வதால் இது தற்குறிப்பேற்றணியாகிறது.


✅Finalised Page