under review

உடுமலை முத்துசாமிக் கவிராயர்

From Tamil Wiki
முத்துசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துசாமி (பெயர் பட்டியல்)
உடுமலை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: உடுமலை (பெயர் பட்டியல்)
கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)

உடுமலை முத்துசாமிக் கவிராயர் (சந்தச் சரப உடுமலை முத்துசாமிக் கவிராயர்) (செப்டெம்பர் 13, 1863-1925 ) நாடக நடிகர், நாடக ஆசிரியர். ஆரம்பகாலத் திரைப்படப் பாடல்களை எழுதியவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

உடுமலை முத்துசாமிக் கவிராயர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியின் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். உடுமலைப்பேட்டையில் செப்டெம்பர் 13, 1883-ல் பிறந்தார். தந்தை அங்கப்ப செட்டியார். இருபத்தி நாலு மனை தெலுங்கு தேசாதிபதிகள் என அழைக்கப்படும் வைசிய மரபில் தோன்றியவர்.

1891-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினார் முத்துசாமிக் கவிராயர். சிறுவயதில் மாம்பழக்கவி சிங்கநாவலரிடம் வறுமையின் காரணமாக வேலைக்குச் சேர்ந்தார். தன் மொழி அறிவால் பட்டோலை படிக்கும் ஒருவராக உடுமலை முத்துசாமிக் கவிராயர் இருந்தார். மாம்பழக்கவிச் சிங்கநாவலர்மேல் பல பாடல்கள் எழுதினார்.தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையுடையவர்.

இருபதாம் வயதில் முத்துசாமி உடுமலை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கணக்கப்பிள்ளையாகவும் சில காலம் அம்மைக்கு தடுப்பூசி அம்மை குத்தும் இன்ஸ்பெக்டராகவும்பணிபுரிந்தார். உ.வே.சாமிநாதையர் மூலம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாண்டித்துரைத் தேவரின் ஆதரவு கிடைத்தது. ஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளி, தாராபுரம் லோகல் பண்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களிலுள்ள உயர் நிலைப் பள்ளிகளிலெல்லாம் இவர் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்தார்

அவரது 27-ஆம் வயதில் புலவரேறு தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாச சுவாமிகளிடம் சந்த இலக்கணம் பயின்றார் கவிராயர். அப்போது சங்கரதாஸ் சுவாமிகளுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

எழுத்து

உடுமலை முத்துசாமிக் கவிராயர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை புனையும் ஆற்றல் கொண்டவர். நாடக நடிகர்களுக்கு வேடிக்கைக் கதைகள் பல சொல்பவர். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்த கவிதைகளை எழுதினார். பக்திக் கவிதைகளும் எழுதினார். ஓரடி, சந்தம், வண்ணம் ஆகிய வகைகளிலே பாடல்கள் பாடினார். ஆரம்பகால திரைப்படப் பாடல்களை எழுதியவர்.

உடுமலை முத்துசாமிக் கவிராயர் 'வடிவேலர் சதகம்' என்னும் சதக நூலை எழுதினார். கவிராயர் எழுதிய 'திருவான்மியூர் கீத சேகரம்,' 'ஏனாதி மாலிகாபரணம்', 'பாசுரசேகரம்,' 'முத்துச்சாமி சபதம்' 'உசிதகவிதாமஞ்சரி', 'மனோரத விநோதம்,' 'இன்பவல்லிக் கும்மி' ஆகிய நூல்களும் அச்சில் வந்துள்ளன.

நாடக வாழ்க்கை

'விபீஷண சரணாகதி, 'போஜராஜன், 'பீஷ்மர் சபதம், 'ஞான சவுந்தரி' முதலிய நாடகங்கள் சுந்தரராவ் நடத்திய ஜகன்மோகன நாடகக் குழுவுக்காக கவிராயர் எழுதியவை. 'தயாநிதி,' 'கண்ணாயிரம்' -இவர் எழுதிய சமூக நாடகங்கள். பிரெஞ்சு நாடகப் புலவர் மோலியரின் 'லோபி' நாடகத்தையும் இவர் தமிழில் எழுதினார். இந்நாடகங்கள் அனைத்தும் அக்கால முறைப்படி பாடல்களாகவே எழுதப்பட்டன.

பம்மல் சம்பந்த முதலியாரின் 'மனோகரா,' 'தாசிப்பெண்,' 'சகுந்தலா' நாடகங்களுக்குக் கவிராயர் சில பாடல்கள் எழுதினார்.

முத்துசாமிக் கவிராயர் ஆரிய கான சபா என்ற நாடகக் குழுவை நடத்தினார். உடுமலை நாராயண கவி, சந்தான கிருஷ்ண நாயுடு ஆகியோர் இவரின் மாணவர்கள். அனந்த நாராயணய்யர் இவரின் பாடல்கள் மேல் மதிப்புள்ளவர்.

முத்துசாமிக் கவிராயர் முதுமையில் சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நாடக ஆசிரியராகச் சேர்ந்தார். 'மதுரை வீரன்', 'மன்மத தகனம்' ஆகிய நாடகங்களை எழுதி அரங்காற்றுகை செய்தார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

  • மதுரை வீரன்
  • மன்மத தகனம்
  • விபீஷண சரணாகதி
  • போஜராஜன்
  • பீஷ்மர் சபதம்
  • ஞான சவுந்தரி

விருதுகள்

கன்னிவாடி ஜமீனின் புலவர்கள் கூடிய அவையில் அளிக்கப்பட்ட 'சரபகவி' பட்டம்

மறைவு

உடுமலை முத்துச்சாமி கவிராயர் சித்திரை 25-ம் நாள் சனிக்கிழமை தன் 63-ம் வயதில் காலமானார். திருவாரூரில் ஓடம் போக்கியாற்றின் தென்கரையில் லிங்க ஸ்தாபன சமாதியில் இவருடைய உடல் சேர்க்கப்பட்டது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 18:47:15 IST