under review

இலக்கியவீதி இனியவன்

From Tamil Wiki
இலக்கியவீதி இனியவன்

இலக்கியவீதி இனியவன் (லட்சுமிபதி) (ஏப்ரல் 20, 1942- ஜூலை 2, 2023) ஒரு தமிழக எழுத்தாளர், விமர்சகர். ’இலக்கியவீதி' என்ற இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்து நடத்தினார். இலக்கியவீதி மூலம் பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். புத்தக வெளியீடு, நூல் விமர்சனம், இலக்கியக் கருத்தரங்குகள் பலவற்றை முன்னெடுத்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

லட்சுமிபதி என்னும் இயற்பெயரை உடைய இலக்கியவீதி இனியவன், ஏப்ரல் 20, 1942 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகில் உள்ள விநாயகநல்லுாரில், வீராசாமி – பங்கஜம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி பயின்றார்.

தனி வாழ்க்கை

இலக்கியவீதி இனியவன் விவசாயத்தைத் தொழிலாக மேற்கொண்டார். மணமானவர். மகள்: வாசுகி பத்ரிநாராயணன்.

கவிஞர் அழகியசிங்கர், இலக்கியவீதி இனியவன், கால சுப்ரமண்யம், முனைவர் ப. சரவணன்

இலக்கிய வாழ்க்கை

இனியவன் பள்ளிப் பருவத்தில் ‘இனியவன்’ என்ற புனைபெயரில் சிறார் இதழ் ஒன்றுக்கு அனுப்பிய சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து கண்ணன் போன்ற சிறார் இதழ்களுக்கு எழுதினார். பாரதி, பாரதிதாசன், கல்கி, புதுமைப்பித்தன் போன்றோரது படைப்புகளை வாசித்துத் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தமிழகத்தின் முன்னணி வார, மாத இதழ்களில் இனியவனின் படைப்புகள் வெளியாகின. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை இதழ்களிலும் இவரது படைப்புகள் இடம் பெற்றன.

இனியவனின் படைப்புகளில் சில தெலுங்கு, கன்னடம், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. இனியவனின் புதினங்கள் சில நாடகமாக அரங்கேறின. இனியவன், 250-க்கும் மேல் சிறுகதைகள் எழுதினார். 15 புதினங்களையும் 17 குறுநாவல்களையும் எழுதினார். இரு பயண இலக்கிய நூல்களை எழுதினார். பறவைகள் பற்றி ஆய்வு செய்து இனியவன் எழுதியிருக்கும் ‘வேடந்தாங்கல்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. பயண நூலான ‘உத்திரமேரூர் உலா' சிறந்த வரவேற்பைப் பெற்ற படைப்பாகும்.

அமைப்புச் செயல்பாடுகள்

இனியவன், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தலைமையில், வேடந்தாங்கலில் குழந்தை எழுத்தாளார் சிறப்புக் கருத்தரங்கை நடத்தினார். 1960-ல், மதுராந்தகத்தில், தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஒருங்கிணைத்தார். பல்வேறு இதழ்கள், இலக்கிய அமைப்புகள் நடத்திய போட்டிகளில் நடுவராக, நடுவர் குழுவினரில் ஒருவராகச் செயல்பட்டார்.

இனியவன்
இலக்கியவீதி அன்னம் விருது நிகழ்வு

இலக்கியவீதி

இனியவன், 'வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம்’ என்பதை லட்சியமாகக் கொண்டு, 1977-ல், மதுராந்தகத்தில் 'இலக்கியவீதி' அமைப்பை நிறுவினார். இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், கவியரங்குகள், எழுத்தாளர் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி கலைஞர்களை, இலக்கியவாதிகளை ஊக்குவித்தார். புதிய பல எழுத்தாளர்களை, கலைஞர்களை கலை, இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இலக்கிய மாநாடுகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்தினார். இலக்கியவீதி மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

‘இலக்கியவீதி அன்னம் விருது’ என்பதை ஏற்படுத்தி தகுதி வாய்ந்த சான்றோர்களை, தமிழறிஞர்களை, கலைஞர்களைக் கௌரவித்தார்.

ஊடகம்

சென்னைத் தொலைக்காட்சி 'மண்வாசனை’ தொடரில் இனியவனின் படைப்பு இடம் பெற்றது. வானொலி, தொலைக்காட்சிகளில் உரைச் சித்திரங்கள் வெளியாகின. சென்னைத் தொலைக்காட்சிக்காகப் பலரை இலக்கியவீதி இனியவன் நேர்காணல் செய்தார்.

பொறுப்புகள்

  • இலக்கியவீதி அமைப்பாளர்
  • சென்னைக் கம்பன் கழகச் செயலாளர்
  • அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்க வாழ்நாள் உறுப்பினர்
  • உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்

விருதுகள்/பரிசு

  • கல்கி நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசு - ‘விதியின் கை’ நாவல்.
  • கண்ணன் சிறுவர் நாவல் போட்டியில் முதல் பரிசு - ‘பொன்மனம்' நாவல்.
  • ஆனந்த விகடன் செங்கை மாவட்டச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு - ’இழந்த கண்கள்' சிறுகதை.
  • அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையிடமிருந்து மாட்சிமை விருது (Fellowship)
  • இலக்கியச் செம்மல்
  • சேவைச்செம்மல்
  • பாரதி பணிச்செல்வர்
  • கலை இலக்கியப் பாரி
  • குறள்நெறிப் புரவலர்
  • சோமலெ விருது
  • பாவேந்தர் சீர்மை பரப்புநர்
  • சேவா ரத்னா
  • சென்னை கம்பன் கழக விருது
  • உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க விருது
  • வேலூர் கம்பன் கழக விருது
  • பெரியார் அண்ணா இலக்கியப் பேரவை விருது
  • பொற்றாமரை விருது
  • கண்ணப்பன் அறக்கட்டளை வழங்கிய இலக்கிய நாயனார் விருது
  • வாழ்நாள் சாதனையாளர் விருது
  • அன்புப் பாலம் விருது
  • புதுவை இராசி அறக்கட்டளை விருது

மறைவு

இலக்கியவீதி இனியவன், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், சென்னையில், ஜூலை 2, 2023 அன்று, தனது 81-ம் வயதில் காலமானார். இனியவனது விருப்பத்தின் படி அவரது மகள் வாசுகி பத்ரிநாராயணன், இனியவன் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினார்.

இலக்கிய இடம்

இனியவன் தனது இலக்கியவீதி அமைப்பின் மூலம் இரண்டு தலைமுறை எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒருங்கிணைத்தார். திறமையுள்ள பலரை அடையாளம் காட்டினார். எழுத்தார்வமுள்ள பலரை ஊக்குவித்து, வழிநடத்தி எழுத்தாளராக்கினார். பல கலைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். 1980-களில் இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டார். இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக இலக்கியவீதி இனியவன் மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page