under review

இராம. குருநாதன்

From Tamil Wiki
பேராசிரியர், முனைவர் இராம. குருநாதன்

இராம. குருநாதன் (இராமலிங்கம் குருநாதன்) (பிறப்பு: அக்டோபர் 21, 1946) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கியக் கட்டுரை நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். ‘ஒப்பிலக்கிய மாமணி’ உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

இராம. குருநாதன், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அக்டோபர் 21, 1946 அன்று, அ. இராமலிங்கம் - சேது அம்மாள் இணையருக்குப் பிறந்தார். கும்பகோணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘குறிஞ்சி நில இயற்கையும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட்., பட்டம் பெற்றார். ‘அகிலன் புதினங்களில் கதைமாந்தர்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இராம. குருநாதன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார். பேராசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: ஜெயலட்சுமி. மகள்: தேவிப்பிரியா.

இராம. குருநாதன் நூல்கள்
முனைவர் இராம. குருநாதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

இராம. குருநாதன், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ் மன்றச் செயலாளராகப் பணியாற்றினார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார். பல்வேறு நூல்களை எழுதினார். கவிதை நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார்.

பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களை எழுதினார். இராம. குருநாதனின் படைப்புகள் அமுதசுரபி, கல்கி, ஆனந்த விகடன், புத்தகம் பேசுது, தீராநதி, தாமரை, கணையாழி, இனிய உதயம் போன்ற இதழ்களில் வெளியாகின. இராம. குருநாதனின் சிறுகதைகள் சில கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. திருக்குறளுக்கு நடைமுறை உரை என்ற தலைப்பில் எளிய உரை ஒன்றை எழுதினார். கவிதை, சிறுகதை, நாவல், ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பேராசிரியர் இராம. குருநாதன்

கல்விப் பணிகள்

இராம. குருநாதன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு மதிப்பீட்டு வல்லுநராகப் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக் குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். இராம. குருநாதனின் வழிகாட்டுதலில் 16 பேர் முனைவர் பட்டமும், 50 பேர் இளம் முனைவர் பட்டமும் பெற்றனர். கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், நா. முத்துக்குமார், இளையகம்பன் ஆகியோர் இராம. குருநாதனின் மாணவர்கள்.

இதழியல்

இராம. குருநாதன், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பயிலும்போது ’குத்துவிளக்கு' என்னும் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். தோழர் இ.ஜே.சுந்தர் நடத்திய 'சுட்டி' இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

பொறுப்புகள்

  • சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்
  • சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர்
  • பல்கலைக்கழகப் பாடத் திட்டக் குழு உறுப்பினர்
  • பொது நூலக ஆணைத் தேர்வுக்குழு உறுப்பினர்
  • சென்னை கன்னிமாரா மையப் பொது நூலகச் செயலர்
  • சென்னை திருவள்ளுவர் இலக்கிய மன்றச் செயலர்
  • குடந்தை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலைய செயலர்
  • கல்கத்தா இராசாராம் மோகன்ராய் நூலக நிதிநல்கைக் குழு நெறியாள்கையாளர்

விருதுகள்

மதிப்பீடு

இராம. குருநாதன், கவிதை, எழுத்து, இலக்கிய ஆய்வு, ஒப்பியல் என்று பல களங்களில் இயங்கினார். உலக இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுப் பல ஆய்வு நூல்களை எழுதினார். இவரது மொழிபெயர்ப்புக் கவிதை நூல்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இராம. குருநாதன், சிறந்த இலக்கிய ஆய்வாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • இராம. குருநாதன் கவிதைகள்
  • கவிதை மலரும் காலம்
சிறுகதை நூல்கள்
  • தூக்கத்தில் நடப்பவர்கள்
கட்டுரை/இலக்கிய ஆய்வு நூல்கள்
  • ஹைக்கூ சிலபார்வைகள் சில பதிவுகள்
  • சங்கப்பாடல்களும் ஜப்பானியக் கவிதைகளும்
  • புறநானூறு புதிய பார்வை
  • புறநானூற்றில் புதிய வெளிச்சம்
  • நூற்றாண்டுக்குப் பின் புதுமைப்பித்தன்
  • சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை
  • காப்பியச் சாளரம்
  • மூண்டெழுகளம்
  • நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் - ஓர் ஒப்பாய்வு
  • கீரரும் கீட்சும்
  • ஒப்பிலக்கியத் திறனாய்வு
  • ஒப்பிலக்கிய உணர்வுகள்
  • ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்
  • திருக்குறள்: நடைமுறை உரை
  • ஜெயித்துக் காட்டுங்கள்
  • இராமலிங்க அடிகளார்
  • நாட்டுப்புற இரங்கற்பா
  • பெண்ணியம் (தேவிப்பிரியாவுடன் இணைந்து எழுதியது)
  • தலித்தியல் (பத்மாவதி விவேகானந்தனுடன் இணைந்து எழுதியது)
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • பெயர்வு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • தூக்கத்தில் நடப்பவர்கள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • விநோத சந்திப்பு (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • தமிழ் யாப்பியல் உயராய்வு
  • தற்கால இந்திய ஆங்கிலக் கவிதைகள்
  • போடோ சிறுகதைகள்
  • விட்டு விடுதலையாகி (இராஜஸ்தானி நாவல்)

உசாத்துணை


✅Finalised Page