under review

இராசேந்திர சோழன்

From Tamil Wiki

To read the article in English: Rajendra Cholan. ‎

ராஜேந்திரசோழன்
நன்றிjeyamohan.in
இராஜேந்திரசோழன்

எழுத்தாளர் இராசேந்திர சோழன் (பிறப்பு டிசம்பர் 17, 1945) (மற்ற பெயர்கள்: ராஜேந்திர சோழன், அஸ்வகோஷ், அஸ்வகோஸ்) தமிழ் எழுத்தாளர். மார்க்ஸிய பார்வை கொண்டவர். பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை என மாற்றிக்கொண்டார். வடதமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். அடித்தள மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் பாலுணர்ச்சிகளின் அடிப்படையில் எழுதியமையால் விவாதங்களுக்கு உள்ளானவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர்.

பிறப்பு

இராசேந்திர சோழன் டிசம்பர் 17, 1945-ல் தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார்.தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். 1961-ல் பள்ளியிறுதி முடித்தார். தந்தை ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்படிச் சொல்ல அதை மறுத்து சென்னைக்குச் சென்று பலவேலைகள் செய்து வாழ்ந்தார். நான்காண்டுகளுக்குப்பின் 1965ல் திரும்பிவந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தகுதி பெற்றார்.

தனிவாழ்க்கை

இராசேந்திர சோழன் 1968-ல் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியராகி இருபதாண்டுகாலம் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலத்தில் வசிக்கிறார். இவர் மனைவி பெயர் ராஜகுமாரி. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசிக்கிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்.

அரசியல்வாழ்க்கை

இராசேந்திர சோழன் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கங்களில் ஈடுபட்டு அதன் வழியாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்ட்)யின் கலையிலக்கியச் செயல்பாடுகளுடன் இணைந்தார். அவர்களின் அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யுடன் கருத்துவேறுபாடு கொண்டார். கட்சி தனிநபர் ஒழுக்கம், போன்றவற்றில் கட்டுப்பெட்டித்தனமான பார்வை கொண்டிருக்கிறது, தமிழகத்தின் சாதிப்பிரச்சினையை மேம்போக்காக பொருளியல்நோக்கிலேயே அணுகுகிறது என்பவை அவருடைய குற்றச்சாட்டுகள். பின்னர் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) யில் சிலகாலம் ஈடுபட்டார்.

1992-ல் சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப் பின் மார்க்ஸிய அமைப்புகளில் தேசியம் சார்ந்த உரையாடல்கள் தொடங்கின. இந்தியத்தேசியம் என்னும் அமைப்பை ஏற்கமுடியாதென்றும், தமிழ்த்தேசியம் போன்ற பண்பாட்டுத்தேசிய உருவகங்களை ஏற்றுக்கொண்டு அவற்றின் அடிப்படையில் மக்கள்போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறும் ஒரு தரப்பினர் உருவாயினர். இராஜேந்திரசோழன் தமிழ்த்தேசிய அரசியல் மேல் நம்பிக்கை கொண்டவர். பெ.மணியரசன் தலைமையில் தமிழ்த்தேசிய பொதுவுடைமை கட்சி என்னும் அமைப்பில் நிர்வாகப் பொறுப்பில் இருந்து செயல்பட்டார். 'தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியது தான் மார்க்ஸியம். மார்க்ஸியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறையப் பேரிடம் உள்ளது. அப்படி இல்லை’ என தன் அரசியல் நிலைபாட்டை குறிப்பிடுகிறார் (இந்து தமிழ் பேட்டி)

இலக்கிய வாழ்க்கை

ஆசிரியராகப் பணியாற்றுகையில் டால்ஸ்டாய், கார்க்கி இருவரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய 'மார்க்ஸிய மெய்ஞானம்: ஓர் அரிச்சுவடி’ எனும் நூல் பெரிய செல்வாக்கை செலுத்தியது. தமிழில் புதுமைப்பித்தனும், தி.ஜானகிராமனும் கவர்ந்த எழுத்தாளர்கள்.

1971-ல் 'ஆனந்த விகடன்’ மாவட்ட அளவில் சிறப்பிதழ்கள் வெளியிட்டு, அது சார்ந்த சிறுகதைப் போட்டிகளும் நடத்தி வந்த நேரத்தில், தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் அறிமுகமானார். ஜெயகாந்தன் தேர்ந்தெடுத்த அந்தக்கதை கோபுலு ஓவியத்துடன் வெளியானது.இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யின் இதழ் செம்மலரில் 'பறிமுதல்’ என்னும் கதை வெளியானது. அரசுப் பணி எழுத்துக்குத் தடையாக இருக்கும் சூழல் என்பதனால் அஸ்வகோஷ் என்ற பெயரை வைத்துக்கொண்டார். தொடர்ந்து செம்மலர், தீக்கதிர் போன்ற இதழ்களில் அஸ்வகோஷ் என்னும் பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினார்.

கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்து கதைகள் எழுதுவது பற்றி வந்த அறிவுறுத்தல்களால் ஒவ்வாமை கொண்ட ராஜேந்திரசோழன் சென்னையில் இருந்து வெளிவந்த கசடதபற இதழில் கதைகள் எழுதினார். அது மார்க்சியத்துக்கு எதிரான கொள்கை கொண்ட இதழ். அஃக், கணையாழி போன்ற இதழ்களிலும் எழுதினார் 'கோணல் வடிவங்கள்’, 'புற்றிலுறையும் பாம்புகள்’ போன்ற புகழ்பெற்ற கதைகள் 1970-1974 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அப்போது கசடதபற குழுவுக்கு அணுக்கமான இருந்த க்ரியா ராமகிருஷ்ணன் அறிமுகமானார். க்ரியா பதிப்பக வெளியீடாக வந்த ’எட்டு கதைகள்’ என்னும் தொகுதி இவருடைய முதல் நூல். அது தமிழ் நவீன இலக்கியவட்டாரத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் என்னும் தொகுப்பு வெளிவந்தது .சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவல் விவாதங்களை உருவாக்கியது. தமிழினி பதிப்பகம் இவருடைய சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டபின் இலக்கியச் சூழலில் பெரிதும் பேசப்படுபவராக ஆனார்.

இதழியல்

இரண்டாண்டு காலம் சென்னைத் தோழர்களுடன் இணைந்து 'பிரச்சனை’ , 'உதயம்’ இதழ்களை நடத்தி அவற்றில் நிறைய எழுதினார். ’மண்மொழி’ என்ற சமூக மேம்பாட்டு இதழை நடத்தியுள்ளார்.

நாடகத்துறை

நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டு, தில்லி தேசிய நாடகப் பள்ளி தமிழகத்தில் திண்டுக்கல்லை அடுத்த காந்தி கிராமத்தில் பாதல் சர்க்கார் தலைமையில் 10 வார காலம் நடத்திய தீவிர நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஊதியமில்லா விடுப்பு போட்டு கலந்து கொண்டார். பயிற்சி முடிந்து நெய்வேலியில் அனல் மின் நிலையத் தோழர்களைக் கொண்ட ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார். புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து அவர் எழுதிய நாளை வரும் வெள்ளம், நெருக்கடிநிலை அடக்குமுறைகளைப் பற்றிய விசாரணை ஆகியவை குறிப்பிடத்தக்க நாடகங்கள்.

விவாதங்கள்

1985 ல் அஸ்வகோஷ் என்ற பெயரில் ராஜேந்திரசோழன் எழுதி வெளியிட்ட சிறகுகள் முளைத்து என்னும் குறுநாவலும் அந்நாவலுக்கு ராஜேந்திர சோழன் எழுதிய மிக நீண்ட முன்னுரையும் இடதுசாரிவட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கின. அதில் குடிசைப்பகுதி இளைஞன் ஒருவனின் வயதடைதலும் அரசியலுணர்வு பெறுதலும் பேசப்பட்டிருந்தன. தொழிலாளர்ப் பெண்களை ஒழுக்கமற்றவர்களாகச் சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார். நெடுங்காலம் கைப்பிரதியாக இருந்து வெளியான நாவல் என அந்த முன்னுரையில் குறிப்பிடுகிறார். அந்த விவாதமே மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளுடன் அவர் விலக்கம் கொள்ள வழிவகுத்தது.

2008 ல் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் பின்புலத்துடன் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் 14 ஜூன் 2008 ல் சென்னையில் தொடங்கப்பட்டபோது பிரம்மராஜன் போன்ற நவீனக் கவிஞர்களுடன் ராஜேந்திர சோழனும் கலந்துகொண்டார். இடதுசாரியான அவர் சாதிச்சங்கத்தின் இலக்கிய அமைப்பின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டது விமர்சிக்கப்பட்டது.

2010 ல் இடதுசாரிகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதத்தைப் பற்றி மௌனம் சாதிப்பது அல்லது சாதகநிலைபாடு எடுப்பது என்னும் அரசியல்சூழ்ச்சிமுறை எப்படி அவர்களின் நம்பகத்தன்மையை அழிக்கிறது என தமிழினி மாத இதழில் எழுதிய கட்டுரை ராஜேந்திரசோழனின் நண்பர்கள் நடுவிலும் எதிர்ப்பை ஈட்டியளித்தது. 'இறைநம்பிக்கையும் மதவெறியும் ஒன்று அல்ல’ என்னும் அவருடைய கருத்து கடுமையாக மறுக்கப்பட்டது.

ஆய்வுநூல்கள்,வாழ்க்கை வரலாறுகள்

 • 2019-ல் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் மகன் வம்சி மற்றும் உமா கதிர் இருவரும் இராசேந்திரசோழன் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்து இயக்கினர்.
 • 2019-ல் புதுவை சீனு. தமிழ்மணி, முனைவர். பா.இரவிக்குமார், முனைவர். இரா. செங்கொடி, முனைவர் வி. செல்வப்பெருமாள் ஆகிய நால்வர் குழு, நட்புக் குயில்கள் என்ற அமைப்பின் பெயரில் 'பன்முகப் படைப்பாளி இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்) - வாழ்வு - படைப்பு - செயல்பாடு’ என்ற தலைப்பில் இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிட்டனர்.

இலக்கிய இடம்

இராசேந்திர சோழனின் படைப்புக்கள் மனிதனின் ஆதார பண்புகளையும், இயங்குநிலையையும் பேசுகின்றன. ’ஏழ்மை, இல்லாமை அதன் காரணமாக மனிதர்கள் அடையும் அவமானங்கள், சிதையும் மனித மாண்புகள், அனைத்தையும் மீறி வெளிப்படும் அன்பும் நேசமும் இவைதான் பெரும்பாலான அவர் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை’ என்று ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார்.

ஜெயமோகன் "தமிழில் பாலியல்சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும், சிறகுகள் முளைத்து… என்னும் சிறிய நாவலையும் சுட்டிக்காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்கநெறிகளுக்கு அப்பால் பாலுறவுத்தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள். ஆனால் அவருடைய பாலியல் புரிதல் அகம்சார்ந்தது அல்ல. சமூகச்சித்திரத்தின் ஒரு பகுதி அது. அச்சமூகச்சித்திரம் ஏற்கனவே அவர் புரிந்து வைத்திருக்கும் மார்க்ஸிய கொள்கைகளால் ஆனது. ஆகவே நுண்மைகள் அற்ற, சற்று துணிவான பாலியலெழுத்தாகவே அவருடைய கதைகள் நிலைகொள்கின்றன’ என்கிறார். எஸ். ராமகிருஷ்ணனும் புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதையை தமிழின் சிறந்த 100 சிறுகதைகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

படைப்புகள்

புனைவிலக்கியம்
 • இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
 • சிறகுகள் முளைத்து (1988)
 • பரிதாப எழுத்தாளர் பண்டித புராணம் (1997)
 • இராசேந்திரசோழன் சிறுகதைகள்
 • 21வது அம்சம்
 • பதியம் நாவல்
 • காவலர் இல்லம் நாவல்
 • புற்றில் உறையும் பாம்புகள்
 • சவாரி
நாடகம்
 • தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
 • மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
 • அஸ்வகோஷ் நாடகங்கள்
 • அரங்க ஆட்டம்
 • நாளை வரும் வெள்ளம்
 • விசாரணை
 • வட்டங்கள்
 • மீண்டும் வருகை
கட்டுரைகள்
 • கருத்தியல் மதம் சாதி பெண்
 • மண் மொழி மனிதம் நீதி
 • மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி
 • தமிழகம் தேசம் மொழி சாதி
 • பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்
 • மொழிக் கொள்கை
 • சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை
 • இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்
 • அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்
 • திராவிடம் மார்க்சியம் தமிழ்த் தேசியம்
 • பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள்
 • தலித்தியம் - நோக்கும் போக்கும்
 • தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்
 • தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்
தத்துவம்
 • பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?
 • பின் நவீனத்துவம் -பித்தும் தெளிவும்
 • மார்க்சிய மெய்யியல் ,கடவுள் என்பது என்ன?(1995)
 • சொர்க்கம் எங்கே இருக்கிறது? (2006)
 • தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
 • பொதுவுடைமையும் தமிழர்களும்
அறிவியல்
 • அணுசக்தி மர்மம்
 • அணு ஆற்றலும் மானுட வாழ்வும்
 • அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்
விருதுகள்
 • விஜயா வாசகர் வட்ட விருது (2020)
 • புனைவிலக்கியத்துக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது (2021)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கள்
 • திலிப் குமார் தொகுத்த The Tamil Story மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இவரது 'சாவி’ சிறுகதை ஆங்கிலத்தில் The Key என்று வெளியாகியுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page