under review

ஆண்டாள் பிரியதர்ஷினி

From Tamil Wiki
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி
கவிஞர், எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி

ஆண்டாள் பிரியதர்ஷினி (பிறப்பு: அக்டோபர் 5, 1962) கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். மொழிபெயர்ப்பாளர். திரைப்படப் பாடலாசிரியர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவர். சென்னை, கோவை, புதுவைத் தொலைக்காட்சி நிலையங்களில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆண்டாள் பிரியதர்ஷினி, 1962-ல், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், புலவர் நெல்லை ஆ. கணபதி - சுப்புலட்சுமி தம்பதியினருக்குப் பிறந்தார். சென்னை சாரதா வித்யாலயாவில் பள்ளிக் கல்வி பயின்றார். எதிராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலையில் எம்.பில். முடித்தார்.

தனி வாழ்க்கை

ஆண்டாள் பிரியதர்ஷினி, சென்னை, கோவை, புதுவை தொலைக்காட்சி நிலையங்களில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். கணவர் பால இரமணி (அமரர்). ஒரு மகன்; ஒரு மகள்.

சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
அப்துல் கலாமுடன்
நடிகர் கமல்ஹாசனுடன்

இலக்கிய வாழ்க்கை

ஆண்டாள் பிரியதர்ஷினியின் தந்தை, தாய் இருவருமே எழுத்தாளர்கள், கவிஞர்கள். அவர்கள் வழியில் ஆண்டாள் பிரியதர்ஷினியும் கவிதைகள் எழுதினார். சுஜாதா இவரது கவிதைகளை கணையாழியின் கடைசி பக்கங்கள் மூலம் கவனப்படுத்தினார். “காலத்திற்கு ஏற்றாற் போல் கவிதை தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. ஆண்டாள் பிரியதர்ஷினி இன்னும் பல உயரங்களைத் தொடுவார்” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார். முன்னணி இதழ்களில் ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகள் வெளியாகி வாசக கவனம் பெற்றன. தொடர்ந்து சிறுகதைகளையும், கட்டுரைகள், நாவல்களையும் எழுதினார். தினமலர், ஆனந்த விகடன், குங்குமம், கலைமகள் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. இவரது சில சிறுகதைகள் நாடகமாகவும் மேடை ஏறின. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘சுருதி பிசகாத வீணை’ இவர் கல்லூரி படிக்கும்போது வெளியானது.

ஆண்டாள் பிரியதர்ஷினி, குறும்படங்களைத் தயாரித்தார். ‘செம்மொழி மாநாட்டுக் கவியரங்கம்' உள்பட பல கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். இவரது 'தகனம்', ‘வானவில் வாழ்க்கை’, ‘கதாநாயகி' பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாட நூலாக இடம் பெற்றன. பல மாணவர்கள் இவரது படைப்புகளை ஆராய்ந்து இளமுனைவர், முனைவர் பட்டம் பெற்றனர்.

சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள பெண் படைப்பாளர் படைப்புகள் நூலில் இவரது சிறுகதை இடம் பெற்றது. பெண் கவிஞர்களின் தொகுப்பு நூலான ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ கவிதைத் தொகுப்பு நூலில் இவரது கவிதை இடம்பெற்றது.

மொழிபெயர்ப்பு

காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ புத்தகத்தை தற்காலத்திற்கேற்றவாறு எளிய தமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். இது ஆண்டாள் பிரியதர்ஷினியின் முதல் மொழிபெயர்ப்பு நூல்.

திரைப்படம்

ஆண்டாள் பிரியதர்ஷினி திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இவரது பாடல்கள் இடம் பெற்ற படங்கள்:

  • ஜாம்பவான்
  • ஒரு பொண்ணு ஒரு பையன்
  • தீ நகர்
  • தரகு
  • அச்சமுண்டு அச்சமுண்டு
  • உச்சக்கட்டம்
  • யாதுமாகி
  • வல்லமை தாராயோ
  • கொல கொலயா முந்திரிக்கா
  • நெல்லை சந்திப்பு
  • ராமர்
  • குடியரசு
  • ரசிக்கும் சீமானே
  • தொலைக்காட்சி தொடர் பாடல் ’மாதவி’
சிறந்த புத்தகத்துக்கான விருது
தமிழக அரசின் கலைமாமணி விருது

அரசியல்

பாரதி, பெரியார், அண்ணாவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆண்டாள் பிரியதர்ஷினி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி, மக்கள் தொடர்புப் பிரிவின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். பல்வேறு அரசியல், இலக்கிய நிகழ்வுகளில், கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். ஊடகங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது (’பெருமூச்சின் நீளம்' சிறுகதைத் தொகுப்புக்காக)
  • நெய்வேலி புத்தகக் கண்காட்சி விருது (’முத்தங்கள் தீர்ந்துவிட்டன' கவிதைத் தொகுப்புக்காக)
  • திருப்பூர் அரிமா சக்தி விருது (’பெருமூச்சின் நீளம்' சிறுகதைத் தொகுப்புக்காக)
  • லில்லி தேவசிகாமணி விருது (‘தோஷம்’ சிறுகதைக்காக)
  • காசியூர் ரங்கம்மாள் விருது (‘தகனம்’ நாவலுக்காக)
  • பாவலர் முத்துசுவாமி விருது (‘உண்டியல்’ சிறுகதைக்காக)
  • கவிஞர் வைரமுத்து விருது (கவிதைகளுக்காக)
  • KRG நாகப்பன் ராஜம்மாள் விருது (’சுயம் பேசும் கிளி’ கவிதைத் தொகுப்புக்காக)
  • ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது (பல சிறுகதைகளுக்காக)
  • இலக்கியச் சிந்தனை விருது (‘கழிவு’ சிறுகதைக்காக)
  • தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது (2011)
  • மத்திய அரசின் பரிசு (சாண அடுப்பும் சூரிய அடுப்பும்)
  • நெல்லை இலக்கிய வட்டம் வழங்கிய ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
  • தேனீ இலக்கியக் கழகம் வழங்கிய ‘கவிச்செம்மல்’ பட்டம்

இலக்கிய இடம்

எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி ஆண்டாள் பிரியதர்ஷினி. பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்துள்ளார். தனது கவிதைகளில் வெளிப்படும் சமூக மற்றும் பெண்ணியச் சிந்தனைகளால், புரட்சிகரமான கருத்துக்களால் கவிஞராகவே அடையாளம் பெற்றுள்ளார். பெண்ணியக் கருத்துக்களைத் தன் எழுத்திலும் மேடையிலும் முன் வைத்து வருகிறார்.

ஆண்டாள் பிரியதர்ஷினி புத்தகங்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • சுயம் பேசும் கிளி
  • மன்மத எந்திரம்
  • காதல் நாற்பது
  • நான் வல்லினம்
  • எனக்கும் கடவுளுக்கும் ஊடல்
  • நானும் இன்னொரு நானும்
  • என் காதலன் என் காதலி
  • முத்தங்கள் தீர்ந்துவிட்டன
  • தோகையெல்லாம் துப்பாக்கிகள் (மரபுக் கவிதை)
  • சூரியனை விடிய வைப்போம் (புதுக் கவிதைப் புதினம்)
சிறுகதைத் தொகுப்பு
  • தேசம் மிச்சமிருக்கட்டும்
  • கடைசிக் கடிதம்
  • தோஷம்
  • தலைமுறை தாகம்
  • சுருதி பிசகாத வீணை
  • ரிஷியும் மனுஷியும்
  • வானவில் வாழ்க்கை
  • சரஸ்வதியின் சிலுவை
  • பெருமூச்சின் நீளம்
  • ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)
நாவல்
  • தகனம்
  • கனவுகள் கைப்பிடிக்குள்
  • முதல் ஒளிபரப்பு ஆரம்பம்
  • தாளம் தப்பிய தாலாட்டு
குறுநாவல்
  • சாருலதா
  • கதாநாயகி
  • வேடிக்கை மனிதர்கள்
  • வலி
  • சிகரம் சிலந்திகளுக்கும் எட்டும்
கட்டுரை நூல்
  • பெண் எழுத்து
  • விடிவைத்தேடி
மொழிபெயர்ப்பு
  • சத்திய சோதனை - மகாத்மா காந்தி
தொகுப்பு நூல்
  • பெண் வாசனை (பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு)
  • புதிய திருப்பாவை
ஆன்மிகம்
  • ஷீரடி பாபா அருளுரை
புதிய படைப்புகள்
  • 45 டிகிரி குனியும் மனிதர்கள்
  • மாயனே மாயனே
  • பனிக்குடம் உடையும் நேரம்
  • கலப்பை சுற்றும் நூலாம்படை
  • வல்லினம் 2.O

உசாத்துணை


✅Finalised Page