under review

அ. கந்தன்

From Tamil Wiki
அ. கந்தன்

அ. கந்தன் (ஆகஸ்ட் 31, 1937 ) மலேசிய எழுத்தாளர், கல்வியாளர், சமூகப்பணியாளர். மலேசியாவில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளி, சமூகம், அரசியல், எழுத்துத்துறை, பொது இயக்கப்பணி, பொதுத் தொண்டு எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். திராவிட இயக்க அரசியல் ஈடுபாடு கொண்டவர்.

பிறப்பு, கல்வி

அ. கந்தன் ஆகஸ்ட் 31, 1937 அன்று பேராக் மாநிலம் பாகான் டத்தோ பட்டணத்திற்கு அருகில் உள்ள ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் அழகப்பன், தாயார் பெயர் அமிர்தம்மாள். 10 சகோதர சகோதரிகளில் இவர் மூன்றாவது பிள்ளை.

அ. கந்தன் திருமணத்தன்று பெற்றோருடன் எடுத்துக் கொண்ட குடும்பப் படம்.

பெற்றோரின் அறியாமையினாலும் வறுமையினாலும் அ.கந்தன் 9 வயது வரை பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. பின்னர், அண்டை வீட்டுக்காரரான ஆசிரியர் மதினி சோமுநாயுடு அவர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி ஸ்ட்ராத்மாஷி தோட்டத்தில் உள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று, தமிழாசிரியர் போதனா முறை வகுப்பான ஏழாம் வகுப்பைச் சிம்பாங் அம்பாட் பாரதி பள்ளியிலும் தெலுக் அன்சன் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியிலும் கற்றார்.

தனிவாழ்க்கை

ஆசிரியர் ஆயத்தப் பரீட்சையில் தேர்வு பெற்றிருந்த அ.கந்தன் தமிழாசிரியர் பணி கிடைக்காததால் சில காலம் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்தார். அப்பொழுது தோட்டத் தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்பேற்றார். பாகான் டத்தோ தமிழர் சங்கத்தில் ஆர்வமுடன் செயல்பட்ட அ.கந்தன் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களைப் பாகான் டத்தோவிற்கு வரவழைத்து அங்குள்ள மக்களுக்கு மொழியுணர்வை ஊட்டினார். அ. கந்தனின் மொழி ஆர்வத்தினால், இவ்விருவருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது. கோ. சாராங்கபாணி ஆதரவில் 1961-ல் அ. கந்தன் சிங்கப்பூர் உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளியில் ஊதியமற்ற ஆசிரியராகப் பணிபுரிந்தார். அச்சமயத்தில் அ. கந்தனுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து ஆதரித்தது சிங்கை இசைக்குழுவின் பாடகர் திரு. இராமசந்திரன். உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டடத்திற்காக நிதி திரட்டுவதற்காகக் கோ. சாரங்கபாணி கூட்டிய 500 தொண்டர்களில் அ.கந்தனும் ஒருவர்.

அ. கந்தனுக்கு நவம்பர் 11, 1966-ல் திருமதி பெருமாயம்மாவோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆறு ஆண் பிள்ளைகள்.

கல்விப்பணி

கந்தன் 1962-ல் பேரா மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளி அமைப்பாளரான திரு. கந்தவனம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். நாடகக் குழுவின்வழியாக தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்வி பற்றி பெற்றோர்களிடம் அ.கந்தன் உரையாடினார். தமிழர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ம.இ.காவின் இளைஞர் பகுதியின் தலைவரானார். அ.கந்தனின் தீவிரமான மொழி மற்றும் இனப்பற்று பள்ளி நிர்வாகத்திற்குப் பிடிக்காத காரணத்தால் பாகான் டத்தோ தமிழ்ப்பள்ளியில் வேலை இழந்தார். பின்னர் பேரா செலாமா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வேலை செய்தார். ம.இ.கா செலாமா கிளை செயலாளராகவும் திராவிடர் கழகத்தில் துணை தலைவராகவும் தீவிரமாகச் செயல்பட்டதால் மீண்டும் அ.கந்தன் வேலையை இழந்தார். ஆசிரியர் பணியில் பல சிக்கல்களைக் கண்டிருந்தாலும் அ.கந்தன் 35 ஆண்டுகளுக்கு மேல் தொடக்க, இடைநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

அ.கந்தன் தோட்டத்துப் பள்ளியில் தமிழ்க்கல்வியைப் பெற்று பின் ஆசிரியர் ஆயத்தப் பயிற்சியில் சேர்ந்தபின் வாசிப்பதிலும் எழுதுவதிலும் தனி ஈடுபாடு கொண்டார். டாக்டர் மு. வரதராசன், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ் காவலர், கி.ஆ.பெ. விசுவநாதம், பாரதிதாசன் போன்றோரின் எழுத்துப் படைப்புகளை இவர் ஆர்வமாகப் படித்தார். தாமறிந்த சமகால வாழ்க்கையைத் தமக்குறிய மொழிநடையில் எழுத வேண்டும் என்று உந்துதலைப்பெற்று எழுத்துத் துறையில் ஈடுபட்டார். தொடக்கத்தில் தமிழ் முரசும் பின்னர் தமிழ் நேசனும் இவருடைய எழுத்துலகத்திற்குக் களமாக அமைந்தன. 1954-ல், தமிழ் முரசு மாணவர், மணிமன்றத்தில் உறுப்பியம் பெற்றுத் தமிழர் திருநாள் விழாக்களில் கலந்து கொண்டு தன் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அ.கந்தன் வளர்த்துக் கொண்டார்.

அமைப்புப் பணிகள்

அ.கந்தன் நாடகத்துறையிலும் தன் ஈடுபாட்டை வெளிபடுத்தியுள்ளார். தோட்டப்புறத் திருவிழாவின்போது சுயமாக நாடகம் எழுதி பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் கல்விக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் 1974 பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவராகச் செயலாற்றினார். மன்றத்தின் மூலம் இலவச வகுப்புகளை முன்னின்று இவர் நடத்தினார். 1977-ம் ஆண்டு இவர் சுங்கை சுமூன் தமிழ் இளைஞர் மணிமன்றத்தைத் தோற்றுவித்து அதன் தலைவரானார். 1972-ம் ஆண்டில் மலேசிய திராவிடர் கழகம், செலாமா கிளையின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அ.கந்தன் தெலுக் இந்தான் தமிழர் சங்கத்தில் 1980-1989 வரை தலைவராகவும் சிம்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங்கின் இந்தியர் சன்மார்க்க சங்கத்தில் 1997-2000 வரை செயலாளராகவும் பாகான் டத்தோ ம.இ.கா தொகுதி காங்கிரஸின் 1998-2002 வரை செயலாளராகவும் செயலாற்றினார்.

சிம்பாங் அம்பாட் இந்தியர் சன்மார்க்க சங்க வளாகத்தில் ஒவ்வொரு ஞாயிறும் தமிழ் இலக்கிய, இலக்கண வகுப்புகளை அ.கந்தன் திரு.மு.சீராளனுடன் இணைந்து வழிநடத்தினார். எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடமும் தமிழ்மொழிப் பாடமும் அங்கு கற்றுத்தரப்பட்டன. மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின், ஊத்தான் மெலிந்தாங் கிளையின் திருமாலனார் படிப்பகத்திற்காக அ.கந்தன் பங்காற்றினார்.

2000--ம் ஆண்டுகளில் பாகான் டத்தோ தொகுதியின் செயலாளராகத் திகழ்ந்தார். அக்காலக்கட்டத்தில் வகுப்பறை பற்றாக்குறையை எதிர்நோக்கிய அல்பாபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குத் துணைக் கட்டடம் பெற இவர் உதவினார். கிளைகளின் மானியத்தில் ஒரு பகுதியைச் சிம்பாங் அம்பாட் இந்தியர் சன்மார்க்கச் சங்க கட்டடச் சீரமைப்பிற்கும் பெற்றுத்தந்தார்.

2002--ம் ஆண்டு அ.கந்தன் கட்சி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார்.

போராட்டங்களும் பிரச்சாரங்களும்

தமிழ் ஆசிரியர்களுக்குப் போதனா முறை வகுப்பிற்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போரட்டத்தில் மயக்கமுற்ற நிலையில் இருந்த அ. கந்தன்.
  • 'தமிழ் போதனா முறை வகுப்பு’ திறக்கப்பட வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
  • தமிழ்ப்பள்ளிகள் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமென 13 இயக்கங்கள் பி.பி. நாராயணன் தலைமையில் கல்வி அமைச்சுக்குப் பரிந்துரை வழங்கியதற்கு முதன் முதலில் தமிழ் நேசன் மூலம் கண்டனம் செய்து அதனைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
  • ஆங்கில, ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம் போதிக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் கேட்க வேண்டுமெனத் தூண்டினார்.
  • தேசிய தின நிகழ்ச்சிக்குத் தமிழுக்குத் தனி மேடை தேவை என போராடிப் பெற்றார்.
  • தமிழ் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் தோட்டங்கள் தோறும் பாலர் பள்ளி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்த பிரச்சாரம் நடத்தினார்
  • நடமாடும் நூலகத்தைச் சொந்த முயற்சியில் உருவாக்கி, வாசிக்கும் பழக்கத்தை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டார்.

ஓய்வூதிய மறுப்பு

மலேசியாவில் தற்காலிகத் தமிழாசிரியர்களின் பயிற்சிக்காகவும் நிரந்தர பணிக்காகவும் போராடி வெற்றியைப் பெற்றுத்தந்த அ. கந்தன் 1992--ம் ஆண்டு நிரந்தரப் பணியற்ற தற்காலிக ஆசிரியராகவே ஓய்வுபெற்றார். அதனால் அ.கந்தனுக்கு அரசின் ஓய்வூதியத் தொகை மறுக்கப்பட்டது. அவரின் போராட்டத்தால் பயன்பெற்ற மலேசியாவில் எஞ்சியுள்ள 700 SRT ஆசிரியர்களில் 130 பேரின் ஒத்துழைப்புடன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 2021--ம் ஆண்டு தொடங்கி அவருக்கு வாழும் காலம் வரை மாதந்தோறும் 1200 ரிங்கிட் ஓய்வூதியத்திற்கு ஈடாக வழங்கப்பட்டது.

விருதுகள்/பரிசுகள்

கந்தன் 4.jpg
  • பி.பி.என் விருது (1984)
  • பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்ற இலக்கியம் வழங்கிய 'தமிழ்த்தொண்டர்’ விருது (1974)
  • ம.இ.கா பாகான் டத்தோ தொகுதியின் 'மக்கள் எழுத்தாளர்’ விருது (1997)
  • மலேசிய பாரதிதாசன் இயக்கத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் தினத்தில் இவரது எழுத்துத் துறைக்காகச் சிறப்பிக்கப்பட்டார். (2003)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசு இவரது கதைக்குக் கிடைத்தது (2003)

வாழ்க்கை வரலாறுகள்/ஆவணப்படம்

தொண்டனின் பயணம் - சு. குணசீலன் (2020)

பண்பாட்டு இடம்

அ.கந்தன் மலேசியாவில் தமிழ்மொழி ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் திகழ்வதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். மலேசியாவில் தமிழர்கள் மொழியடிப்படையில் ஒரு சமூகமாக திரள்வதற்கு அடிப்படை அமைத்தவர்.

நூல்கள்

கடித இலக்கியம்

  • அன்புள்ள தமிழரசுக்கு

ஆய்வுத் தொகுப்பு

  • மலேசியாவில் தமிழ்ப்பள்ளியும் தமிழ்க்கல்வியும் (1979)
  • ஒரு தொண்டனின் பயணம் தொடர்கிறது (1980)

நாவல்

  • அன்புக்கு நான் அடிமை (1982)

குறள் விளக்கக் கட்டுரைகள் /கதைகள்

  • குறளமுதம் (1997)
  • திருக்குறள் விளக்கக் கதைகள்(1998)

கட்டுரை

  • இளந்தமிழா விழித்திடு (1996)
  • முத்தமிழும் முக்கனியும் (1997)
  • சமயமும் தமிழும்

தன்முனைப்பு நூல்

  • உன்னால் முடியும் தம்பி (1997)

குறுநாவல்

  • அம்மா (1998)
  • எழுச்சி(1999)
  • விடியலை நோக்கி (1998)

வரலாற்றுக் குறிப்பு நூல்

  • ஒரு சிறந்த தலைவர்(1996)

இலக்கண நூல்

  • தமிழ் இலக்கண வினா-விடை

சிறுகதைத் தொகுப்பு

  • உரிமைப் போராட்டம்

உசாத்துணை

  • குணசீலன், சு. (2020). தொண்டனின் பயணம்.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:50 IST