அரவிந்தன்
அரவிந்தன் (D.I. Aravindan) (பிறப்பு: அக்டோபர் 18, 1964 - ஏப்ரல் 3, 2026) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாசிரியர். காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக இருந்தார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றினார். அரசியல், கிரிக்கெட், திரைப்படம், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த எழுத்துக்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
அரவிந்தன் சென்னையில் டி.டி. இங்கர்சால், மைதிலி இணையருக்கு அக்டோபர் 18, 1964-ல் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சென்னையிலுள்ள சிந்தாமணி ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். அகோபில மடம் உயர்நிலைப்பள்ளியில் உயர்கல்வி பயின்றார். அஞ்சுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியாக வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
அரவிந்தன் ஜூலை 27, 1997-ல் ஸ்ரீதேவியை மணந்தார். மனைவி யோகாசனப் பயிற்றுநர். மகள் நம்ரதா, மகன் சைதன்யா.
இதழியல்
- அரவிந்தன் சுயாதீனப் பத்திரிக்கையாளராக 1988 முதல் தினமணி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் எழுதினார்.
- 1990-ல் இந்தியா டுடே பத்திரிக்கையில் பணியில் சேர்ந்தார். இந்தியா டுடே இதழின் இலக்கியப் பக்கங்கள், இலக்கியச் சிறப்பு மலர்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் பெருமளவில் பங்காற்றினார். 2000 வரை இப்பணியில் இருந்தார்.
- முத்ரா (Mudra Communications), காலச்சுவடு இதழ், இந்தியா கிளிட்ஸ் (India Glitz) ஆகியவற்றில் பணியில் இருந்தார். காலச்சுவடு இதழில் பணிபுரிந்தபோது இலக்கியம், கலைகள், சமூகம், அரசியல் சார்ந்த தீவிர எழுத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் பங்காற்றினார்.
- சென்னை நகரத்திற்கான பிரத்யேக இதழான 'சென்னை நம்ம சென்னை' என்னும் இதழைத் தொடங்கி நான்கு ஆண்டுகள் நடத்தினார்.
- 'நம் தோழி' என்னும் பெண்கள் மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் ஓராண்டு பணிபுரிந்தார்.
- 2013 முதல் 2017 வரை தி இந்து தமிழ்திசை நாளிதழில் இருந்தார். தி இந்து தமிழ் நாளிதழின் உருவாக்கக் குழுவில் ஒருவராக இருந்து அதன் அடித்தளப் பணிகளில் பங்காற்றினார். இவரது தலைமையின் கீழ் இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்கள் வெளிவந்தன.
- மின்னம்பலம், சமயம் டாட் காம் தமிழ் (டைம்ஸ் குழுமம்) ஆகிய நிறுவனங்களில் இதழாளராக பணிபுரிந்துள்ளார்.
பயிலரங்கம்
அரவிந்தன் இதழியல் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். இதழியல், இலக்கியம் சார்ந்த பயிலரங்கங்களையும் நடத்தினார்.
பதிப்பகம்
அரவிந்தன் 2022 முதல் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அரவிந்தன் 1990 முதல் சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதைத் தொகுப்பு 'வானப்பிரஸ்தம்' நர்மதா பதிப்பகம் வெளியீடாக 2000-ல் வெளியானது. ஆன்மிகத் தேடல் கொண்ட ஓர் இளைஞனின் லௌகீக அலைக்கழிப்புகளை மையமாகக் கொண்ட இவரின் முதல் நாவல் 'பயணம்' 2015-ல் வெளியானது. இரண்டாவது நாவலான 'பொன்னகரம்' சென்னையின் குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டது. தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான நடைமுறைக்குப் பொருத்தமான எளிய கையேடு ஒன்றை வெளியிட்டார். சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனங்கள் எழுதி வருகிறார். ஆதர்ச எழுத்தாளர்களாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, காப்ரியேல் கார்ஷியா மார்க்கேஸ் ஆகியோரைக் குறிப்பிட்டார்.
மொழிபெயர்ப்பு
அரவிந்தனின் முதல் மொழிபெயர்ப்பு 'தாமஸ் ஆல்வா எடிசன் (வாழ்க்கை வரலாறு)" ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகம் வெளியீடாக 1997-ல் வெளிவந்தது. மொழியியல், மொழிபெயர்ப்பியல் குறித்த கட்டுரைகளை எழுதினார். சென்னைத் தமிழ் பற்றிய இவருடைய கட்டுரைகள் சென்னையின் பிரத்யேகமான மொழியைத் தமிழின் முக்கியமான வட்டார மொழிகளில் ஒன்றாக முன்னிருத்திப் பேசுகின்றன. இங்கிலாந்து வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டு அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளிக்கொணர்ந்தார்.
விருதுகள்
- சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது (2017), பால சரஸ்வதி: அவர் வாழ்வும் பணியும் நூல் மொழிபெயர்ப்புக்காக.
இலக்கிய இடம்
அரவிந்தனின் சிறுகதைகள் பெருநகர வாழ்வின் கோலங்களை மையமாகக் கொண்டவை. உலகமயமான சூழலில் பெருநகர வாழ்வு தரும் வாய்ப்புகளும் நெருக்கடிகளும் தனி மனிதர்களின் வாழ்நிலைகளையும் உறவுகளையும் உளநிலைகளையும் பாதிக்கும் விதத்தை சித்தரிப்பவை.
மறைவு
அரவிந்தன் ஏப்ரல் 3, 2026-ல் காலமானார்.
நூல் பட்டியல்
நாவல்
- பயணம்
- பொன்னகரம்
சிறுகதைத் தொகுப்பு
- வானப்பிரஸ்தம்
- குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது
- கடைசியாக ஒரு முறை
- வெல்கம் டு மில்லெனியம்
பிற
- சுட்டி மகாபாரதம் (சிறுவருக்கான மகாபாரதம்)
கட்டுரைத் தொகுப்பு
- தாமரை இலைமீது ததும்பும் சொற்கள் (இலக்கிய விமர்சனம்)
- கனவின் யதார்த்தப் புத்தகம் (இலக்கிய விமர்சனம்)
- நெகிழும் வரையறைகள், விரியும் எல்லைகள் (இலக்கிய விமர்சனம்)
- உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள் (இலக்கிய விமர்சனம்)
- முகமூடிகளுக்கு வரலாறு சொல்லும் சேதி (அரசியல்)
- பிரியாணியும் புளியோதரையும் (அரசியல்)
- அந்தப் பதினேழு ரன்கள் (கிரிக்கெட்)
- ஒரு சொல் கேளீர் (மொழி)
- இமையம்: அடையாளத்தை அழித்துக்கொள்ளும் கலைஞன் (இலக்கிய விமர்சனம்)
மொழிபெயர்ப்பு
(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
- தாமஸ் ஆல்வா எடிசன் (வாழ்க்கை வரலாறு)
- ராணியுடன் ஒரு தேநீர் விருந்து (வெல்ஷ் மொழிக் கதைகள் - ஆங்கிலம் வழி)
- பீமாயணம் (டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கைக் கதை)
- பால சரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் (டக்ளஸ் எம். நைட் ஜூனியர்)
- கர்னாடக இசையின் கதை (டி.எம். கிருஷ்ணா)
- செபாஸ்டியன் குடும்பக் கலை (டி.எம். கிருஷ்ணா)
- காற்றில் கலந்த துயரம் (டி.எம். கிருஷ்ணா)
- காலத்தின் கப்பல் (சீன நாவல் - ஜாங் வெய். ஆங்கிலம் வழி)
- மரணத்தின் கதை (ஆசுதோஷ் பரத்வாஜ் - கள அனுபவப் பதிவு)
- மகாபாரதம் (கணேஷ் தேவி - ஆய்வு நூல்)
- இந்தியாவின் சுருக்கமான வரலாறு (ஜான் ஜுபர்ஸிக்கி)
- உன் கதை என் கதை (கோனி பால்மன்)
இணைப்புகள்
- அரவிந்தன் - வலைதளம்
- அரவிந்தனின் இரண்டு நாவல்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
- நண்பர் அரவிந்தன் - ஷங்கர்ராமசுப்ரமணியன்
- சு.ரா.வின் சிறுகதைகள் காட்டும் சுவடுகள் - அரவிந்தன்
- இமையம் - கோவேறு கழுதைகள் அரவிந்தன்
- வெல்கம் டு மில்லெனியம் - பெருமாள் முருகன்
- ஜே. கிருஷ்ணமூர்த்தி: பாதையற்ற நிலத்தின் பயணி - அரவிந்தன்
- நவீன இலக்கியத்தின் போக்கு ! - அரவிந்தன்
- இமையம் படைப்புகள் - ஒருநாள் தேசியக் கருத்தரங்கம் | அரவிந்தன்
- Aravindan speech | பெருந்தேவியின் நூல்கள் | அரவிந்தன்
- Aravindan speech | அரிசங்கர்- உண்மைகள் பொய்கள் கற்பனைகள் | அரவிந்தன் உரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 07:56:15 IST