under review

அமெரிக்க இலங்கை மிஷன்

From Tamil Wiki
அமெரிக்கன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமெரிக்கன் (பெயர் பட்டியல்)

To read the article in English: American Ceylon Mission. ‎

இலங்கையில் அமெரிக்க மதபோதகர்கள், 1916
இலங்கையில் அமெரிக்க மதபோதகர்கள், 1916
ரெவெ வின்ஸ்லோ

அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க சீர்திருத்தக் கிறிஸ்துவர்களால் இலங்கையில் நடத்தப்பட்ட மதபோதக அமைப்பு. யாழ்ப்பாணத்தில் நவீன அடிப்படைக் கல்வியும், இரண்டாம் நிலைக் கல்வியும் வழங்கிய முன்னோடிகள். ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாமல் தமிழிலும் கல்வி கற்பித்தனர். தமிழில் பல புத்தகங்களை மொழிபெயர்த்தும், புதிதாய் இயற்றியும் வெளியிட்டுள்ளனர். பொதுக்கல்விச் சாலைகள், மருத்துவக் கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குருமடங்களை நிறுவி மக்கள் பணி செய்தனர். அமெரிக்க இலங்கை மிஷன் நிறுவிய வட்டுக்கோட்டை குருமடம் ஒரு பல்கலையைப் போன்ற அமைப்பு என்பதால் ஆசியாவிலேயே முன்னோடி நிறுவனம் என்று கருதப்படுகிறது.

தொடக்கம்

உடுவில் பெண்பள்ளி 1880

யாழ்ப்பாணத்தில் 1540-களில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்க மதபோதகர்கள் மதம் பரப்ப ஆரம்பித்தனர். 150 வருடங்களுக்குப் பின் 1658-ல் டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) துறைமுகத்தைக் கைப்பற்றினர். இதன்மூலம் டச்சு சீர்திருத்த சபை அங்கு பரவியது. 1796-ல் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றினர். டச்சுக்காரர்களைப்போல் அல்லாமல் ஆங்கிலேயர் பிற கிறிஸ்தவ அமைப்புகளை ஆதரவுடன் நடத்தினர். இதனால் யாழ்ப்பாணத்தில் பல கிறித்துவ மதபரப்பு மையங்கள் (மிஷன்) உருவாகின. இவற்றில் அமெரிக்க இலங்கை மிஷன் முக்கியமானதாகும்.

அமெரிக்கன் போர்ட்

1810-ல் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்தினரால் உருவாக்கப்பட்ட மிஷனரி அமைப்பு (American Board of Commissioners for Foreign Missions (ABCFM)) வழியாக அமெரிக்க இலங்கை மிஷன் உருவாக்கப்பட்டது. ரெவெரெண்ட் ஸ்பிரிங் (Spring) ரெவெ. சாமுவேல் வூஸ்டர் (Worcester) ரெவெ. ஹால் (Hall) ஆகியோர் இதில் முன்முயற்சிகள் எடுத்தனர்.

டேனியல் பூர்
இந்திய வருகை

1812-ல் ரெவெ. ஜட்சன், ரெவெ. சாமுவேல் நெவெல் ஆகியோர் தலைமையில் முதல் மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து காரவன் என்னும் கப்பலில் சாலேம் என்னும் துறைமுகத்தில் இருந்து கிளம்பினர். இன்னொரு அணி பிலடெல்பியாவில் இருந்து ரெவெ.ஹால், ரெவெ.ரைஸ் தலைமையில் ஹார்மனி என்னும் கப்பலில் இந்தியாவுக்கு கிளம்பினர். இவர்கள் கடுமையான பயணங்களுக்குப் பின் இந்தியா (கொல்கத்தா) வந்து சேர்ந்தனர் (ஜூன் 17, 1812). அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் பிற மத போதகர்களுக்கு அனுமதி வழங்காததால் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் பம்பாய் (மும்பை) மிஷனரிகளின் அழைப்பைப் பெற்று, சாமுவேல் நெவெல் பம்பாய்க்குப் பயணித்தார். அங்கே 1813-ல் அமெரிக்க மராட்டி மிஷனை உருவாக்கினார். அமெரிக்க மிஷன் கீழைஆசியாவில் உருவாக்கிய முதல் அமைப்பு இதுவே.

நெவெல்
ஸ்போல்டிங் தம்பதிகள்

அமெரிக்க மிஷன் வரலாற்றை எழுதிய போதகர் சி.டி.வேலுப்பிள்ளை சாமுவெல் நெவெல் (சாமுவெல் நீயூவெல்) இலங்கை ஆட்சியாளரின் வேண்டுகோளுக்கு ஏற்ப புரட்டாசி 7, 1813 அன்று யாழ்ப்பாணம் வந்ததாக பதிவு செய்கிறார். யாழ்ப்பாணத்தின் காவல்துறை தலைவராக இருந்த ஜே.என்.மூயாட் ( J.N.Mooryart) அவருக்கு உதவிகள் செய்தார். இலங்கையின் ஆட்சியாளரான சர்.ராபர்ட் பிரௌண்ரிக் அமெரிக்க மிஷனை இலங்கையில் துவங்கும்படி நெவலைக் கேட்டுக்கொண்டார். மேலும் மிஷனரிகளை அனுப்பும்படி நெவெல் அமெரிக்க போர்டை கேட்டுக்கொண்டார்.

தை 1014-ல் மும்பைக்குச் சென்ற நெவெல் 1921-ம் ஆண்டு மும்பையில் காலமானார்.

ஐவர் குழு

அமெரிக்கப் போர் முடிவடைந்ததும் ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் ( James Richards), பி.சி.மெக்ஸ் (P.C. Meigs), டேனியல் பூர், ஹெச்.பேட்வெல் (H.Bardwell), எட்வர்ட் வாரன் (E.Warren) ஆகிய ஐந்து புதிய மதபோதகர்கள் 1815-ல் டிரயாட் (Dryad) என்னும் கப்பலில் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தனர். அதற்குமுன் அவர்கள் 1815-ல் அமெரிக்காவில் நியூபெர்ரி போர்ட்(Newburyport) என்னும் ஊரில் பிரிஸ்பேனியன் தேவாலயத்தில் குருவாக பட்டம்பெற்றனர். 1816 பங்குனி 1816-ல் மாதம் ஐவர் குழு கொழும்பு நகரை வந்தடைந்தது என்று சி.டி.வேலுப்பிள்ளை கூறுகிறார். அவர்களுடன் டேனியல் பூரின் மனைவி சூசன், மெக்ஸின் மனைவி சாரா, ஜேம்ஸ் ரிச்சர்ஸின் மனைவி சாரா, பாட்வெல்லின் மனைவி ஆகியோரும் சென்றனர்.

சிலோன் அமெரிக்க மிஷன்

1816-ல் ஐவர் குழு கொழும்புவில் கூடி கான்கிரிகேஷனல் சபை என்னும் அமைப்பை உருவாக்கியது. யாழ்ப்பாணத்தை மையமாக்கிச் செயல்படுவதென்னும் முடிவை எடுத்தது . பங்குனி 1816-ல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்தனர். யாழ்ப்பணத்தில் மதப்பணி புரிந்துவந்த ரெவெ.ஜேம்ஸ் லிஞ்ச் அவர்களை வரவேற்றார். 1816-ல் அமெரிக்க இலங்கை மிஷன் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த வெஸ்லியன் சபை, பாப்டிஸ்ட் சபை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றினர். இலங்கையின் பாப்டிஸ்ட் சபை போதகரான ரெவெ. சி.கார்ட்டர் அவர்களுக்கு உதவிகள் செய்தார். அவர்களுக்கு தமிழ் கற்பித்தவர்கள் நிக்கிலாசுப் பிள்ளை, காபிரியேல் பிள்ளை ஆகியோர்.

நால்வர் குழு

ஜூன் 8, 1819-ல் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இருந்து இண்டஸ் (Indus) என்னும் கப்பலில் நான்கு மிஷனரிகள் இலங்கைக்கு கிளம்பினர். ரெவெ.மிரன் வின்ஸ்லோ ( Winslow), ரெவெ ஸ்போல்டிங் ( Spaulding), ரெவெ. வுட்வேர்ட் (Woodward), ரெவெ. ஜான் ஸ்கட்டர் (Scudder) ஆகியோர். அவர்கள் டிசம்பர் 14, 1819-ல் இலங்கைக்கு வந்தபின் கல்விப்பணிகளும் மருத்துவப்பணிகளும் மேலும் தீவிரமாக நடைபெற்றன.

கல்விப்பணி

1817-ல் அமெரிக்க மிஷனரிகள் வட்டுக்கோட்டையில் குடியேறினர். கல்வி வழியாகவே மதமாற்றம் நிகழ முடியுமென உணர்ந்து உள்ளூர் மக்களுக்குக் கல்வி வழங்கத் தொடங்கினர். 1816-ல் தெல்லிப்பழையில் முதல் ஆங்கிலக் கல்வி நிலையம் டேனியல் பூர் அவர்களால் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 400 பேர் பயின்ற 12 பள்ளிகளை அவர்கள் உருவாக்கினர்.

மிஷன் துவங்கி நாற்பது ஆண்டுகளுக்குள் 1848-ல் கிட்டத்தட்ட 150 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், அவற்றில் பயின்ற மாணவர்களுமாக மொத்தம் 30,000 மாணவர்கள் பயன்பெற்றனர். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழிலும் கல்வி வழங்கப்பட்டது.

வட்டுக்கோட்டை குருமடம்

அமெரிக்க மிஷன் 1823-ல் உருவாக்கிய வட்டுக்கோட்டை குருமடமே அவர்களின் முதன்மையான நிறுவனமாகும். ரெவ். டாக்டர் டேனியேல் பூர் இக்காலகட்டத்தின் முன்னோடி. இக்காலகட்டத்தில் இங்கிருந்து தேர்ச்சிபெற்று பின்னர் 1857-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற சி.வை. தாமோதரம் பிள்ளை , கரோல் விசுவநாத பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வட்டுக்கோட்டை குருமடம் ஐரோப்பிய கல்லூரிக்கு இணையானதாகக் கருதப்பட்டது.

பெண்கல்வி

திருமதி லெயிட்சும் உள்ளூர்ப் பெண்களும், 1880களில்

அக்கால இலங்கையில் பெண்கள் கல்வி கற்பது குறித்து மிகப் பழமையான கருத்துக்களே இருந்தன. பெண்கல்வி தவறென்றும் கல்வி கற்றால் பெண்களுக்குத் திருமணம் நடைபெறாது என்றும் கருதப்பட்டது. பெண்கள் குழந்தை பெறவும் வீட்டுவேலை செய்யவும் மட்டுமே ஆனவர்கள் என்ற நிலை இருந்தது. 1816-ல் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 3 சதவீதம் பெண்களுக்கே வாசிக்கத் தெரிந்திருந்தது.

அமெரிக்க மிஷன் பெண்களுக்காக மூன்று வகைக் கல்விக்கூடங்களை உருவாக்கியது. இதில் ஒரு விடுதிப் பள்ளியும் அடக்கம். டேனியல் பூரின் மனைவி சூசன் 1818-ல் ஒரு பெண்பள்ளியை தொடங்கினார். அதில் 8 பெண்குழந்தைகள் பயின்றனர். பெரும்பாலும் மதம் மாறியவர்களின் குழந்தைகள் அவர்கள்.

1824-ல் ஹாரியட் வின்ஸ்லோவால் உடுவில்லில் துவங்கப்பட்ட பள்ளி ஆசியாவிலே பெண்களுக்கான முதல் விடுதிப்பள்ளியாகும். உள்ளூர் எதிர்ப்புகளை தவிர்க்க தொடக்கத்தில் பெண்களுக்கு திருமணத்தின்போது வரதட்சிணை வழங்குவது, ஆடைகள் வழங்குவது என சில சலுகைகளை அளித்தனர். 1850 வாக்கில் உள்ளூர் மக்கள் பெண்கல்வி குறித்த பார்வைகளை மாற்றிக்கொண்டதால் இவ்வழக்கங்கள் கைவிடப்பட்டன. ஹாரியட்டின் மறைவுக்குப் பின்னர் திருமதி ஸ்போல்டிங் அம்மையாரால் இது நடத்தப்பட்டது. 1825-ல் இப்பள்ளியில் 50 பெண்களும் 1835-ல் 75 பெண்களும் 1837-ல் 100 பெண்களும் இங்கே பயின்றனர்.

ஒடுக்கப்பட்டோர் கல்வி

முதன் முதலாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்தவர்களும் அமெரிக்க சிலோன் மிஷனைச் சார்ந்தவர்களே. அனைத்து சாதியினருக்கும் ஆங்கிலக் கல்வி என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

பள்ளிகள் மற்றும் மாணவ மானவியர் எண்ணிக்கை
வருடம் பள்ளிகள் மாணவர்கள் மாணவிகள்
1819 15 633 10
1824 90 2864 613
1836 155 6037 1000
1868 60 1598 728
1879 121 8120 1400
1884 138 8332 1751
1900 133 10244 2791
1911 118 9893 3544

மருத்துவப் பணி

அமெரிக்க மிஷன் மருத்துவசேவையை தொடங்குவதென 1819 -ல் தீர்மானித்தது. அதன்படி 1820-ல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. ஆரம்ப காலத்தில் மருத்துவர்கள் மிஷனில் இல்லை என்றாலும் சிலர் மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருந்ததால் மருத்துவ சேவை சிறிதளவில் நடந்து வந்தது. ஐரோப்பியக் கல்வியைப் போலவே மருத்துவத்திற்கும் உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பிருந்தது. 1819-ல் இலங்கை வந்து சேர்ந்த ஜான் ஸ்கட்டர் என்பவரே முதல் முழுத்தகுதி பெற்ற மருத்துவர். அவருடைய முயற்சியில் ஒவ்வொரு மிஷன் கிளைக்கும் ஒரு மருத்துவரை பயிற்றுவிக்கத் தொடங்கி மொத்தம் 10 மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் இருவரே படிப்பை முடித்துத் தேர்ந்தனர்.

ஸ்கட்டரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் வார்ட் பணியாற்றினார். வார்ட்டின் சேவைக் காலம் முடிவடைந்தபோது வந்து பணியை ஏற்றவர் மருத்துவர் சாமுவேல் கிரீன். 1848-ல் மரு. சாமுவேல் கிரீன் தனது 25 வயதில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவரின் பெரும் முயற்சியால் பல புதிய மருத்துவர்கள் உருவாகினர். இவரும் இவரது மாணவர்களும் சேர்ந்து பல மருத்துவ புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தனர். காலரா மற்றும் மஞ்சள் காய்ச்சலுக்கு இவர்கள் அளித்த மருந்துக்கள் பல உயிர்களையும் காத்தன. மருத்துவர் கிரீன் 600 பேரை காலராவிலிருந்து காப்பாற்றினார்.

தமிழ்ப்பணி

'மார்னிங்க் ஸ்டார்' பத்திரிகை 1902
'மார்னிங்க் ஸ்டார்' பத்திரிகை 1902

அமெரிக்க மிஷன் உருவாக்கிய வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து தமிழ் மொழியில் முன்னோடியான பல வகை புத்தகங்களும் வெளிவந்தன. உள்ளூர் இலக்கியம், தர்க்கம், இயற்கணிதம்(Algebra), வானியல் மற்றும் பொது அறிவியல் புத்தகங்கள் ஆரம்பத்தில் வெளி வந்தன. 1820-ல் ஒரு அச்சகத்தைத் தொடங்கி இலங்கையின் இரண்டாவது செய்தித்தாளான 'மார்னிங் ஸ்டாரை' (Morning Star) வெளியிட்டனர் அதன் தமிழ்ப்பதிப்பு உதயதாரகையும் வெளியிடப்பட்டது.

1862-ல் ரெவ. மிரன் வின்ஸ்லோ முழுமையான ஆங்கில - தமிழ் அகராதியை பதிப்பித்தார். தமிழில் மருத்துவ , பொது சுகாதார , மத போதனை நூல்களை இவர்கள் பதிப்பித்தனர். தமிழ் உரைநடை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் கல்வி பொதுமக்களுக்கு எளிதானதாய் இருந்தது.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினராய் இருந்தாலும் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிற அறிவுத்துறைகளிலும் தேர்ச்சி பெற்றதனால் 1956-ல் பாதிப்பங்கு அரசுப் பணிகளில் தமிழர்கள் பங்குபெற்றிருந்தனர் என்பது மிஷனரிகளின் பங்களிப்புக்குச் சான்றாகும். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் அமெரிக்க மிஷன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றின.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2022, 14:13:39 IST