under review

வட்டுக்கோட்டை குருமடம்

From Tamil Wiki
வட்டுக்கோட்டை குருமடம்(கற்செதுக்குப் படம்)
அமெரிக்க மிஷன்
வட்டுக்கோட்டை செமினாரி, முதல்வர் கட்டிடம். கற்செதுக்குப் படம்

வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, வட்டுக்கோட்டை செமினரி, வட்டுக்கோட்டை செமினறி, பட்டிக்கோட்டா செமினாரி) (1823-1850) இலங்கையில் இருந்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது அமெரிக்க இலங்கை மிஷன் என்ற மதப்பரப்பு அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855-ம் ஆண்டில் மூடப்பட்டது. தமிழ்ச்சூழலில் ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்த நிறுவனம் இது. தமிழ் மரபிலக்கியங்களை மேலைநாட்டு கல்விமுறைப்படி கற்பித்த முதல்நிறுவனமும் இதுவே. அவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் முக்கியமான இடம் உடையது.

வரலாறு

ஜாஃப்னா காலேஜ், பழைய வட்டுக்கோட்டை செமினாரி

வட்டுக்கோட்டை குருமடம் அமெரிக்க இலங்கை மிஷன் அமைப்பால் (American Board of Commissioners for Foreign Missions - ABCFM) யாழ்ப்பாணம் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஜூலை 2, 1823- ல் தொடங்கப்பட்டது. மதப்பரப்புநரும் மருத்துவருமான ஜான் ஸ்கட்டர் (John Scudder, Sr) அவர்களின் அமைப்புக்கு துணையமைப்பாக இது ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடங்கியவர்களில் டேனியல் பூர் முதன்மையாவர். அவரே இதன் முதல் தலைவராகவும் இருந்தார்.

அமெரிக்காவில் இருந்து கிறிஸ்தவர்கள் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு பத்து டாலர் வீதம் அனுப்ப ஒப்புக்கொண்டு 200 பேர் பணம் அனுப்பினர். அதன் அடிப்படையில் இந்த குருமடம் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மிஷன் பள்ளிகளில் படித்த 120 மாணவர்களில் சிறந்த 40 பேர் இதில் சேர்க்கப்பட்டார்கள். மாவட்ட நீதிபதி மோயார்ட் ( Moyart) என்பவரின் இல்லம் 1500 டாலர்களுக்கு வாங்கப்பட்டு இந்த செமினாரி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது அமெரிக்க மிஷன் செமினாரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் ஹென்றி ஹொய்சிங்டன் தலைவராக இருந்தபோது 1846ல்தான் வட்டுக்கோட்டை குருமடம் என பெயர் வந்தது. 1823 மார்ச் மாதம் 22-ம் தேதி டேனியல் பூர் வட்டுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்து அங்கே ஆண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார்.அதில் ரெவெ.வுட்வேட் ஆசிரியராகப் பணியாற்றினார். அதை பட்டம் அளிக்கும் ஒரு கல்லூரியாக வளர்த்தெடுக்க டேனியல் பூர் விரும்பினார்.

ஆனால் 1827ல் அமெரிக்க மிஷனரிகளுக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் ராபர்ட் பிரவுன்டிரிக் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக ஆட்சிக்கு வந்த எட்வர்ட் பான்ஸ் நெப்போலியனுக்கு எதிராக வாட்டர்லூ போரில் பங்கெடுத்தவர். பிரெஞ்சுக்காரர்களுக்கு அமெரிக்கர்கள் உதவியதாக காழ்ப்பு கொண்டிருந்த அவர் வட்டுக்கோட்டை செமினாரி மேலும் விரிவடையலாகாது என்றும், புதிய அமெரிக்க மிஷனரிகள் வரக்கூடாது என்றும் அறிவித்தார். வட்டுக்கோட்டை செமினாரியை ஓர் உயர்கல்விநிறுவனமாக ஆக்க டேனியல் பூர் விரும்பி விண்ணப்பித்தபோது லண்டன் மிஷன் சார்பில் அப்படி உயர்கல்வி நிறுவனம் அமைக்க எண்ணம் இருப்பதாகவும், அமெரிக்க மிஷன் சேவை தேவையில்லை என்றும் அவருக்கு பதிலளிக்கப்பட்டது. 1827ல் கோட்டை என்னுமிடத்தில் சி.எம்.எஸ் சபையினர் ஓர் உயர்கல்விநிறுவனத்தை தொடங்கினர். அதில் எட்வர்ட் பான்ஸ் கலந்துகொண்டார். ஆங்கில அரசு கல்லூரி தொடங்க அனுமதி மறுக்கவே கல்லூரி என்னும் பெயருக்கு பதிலாக செமினாரி என்னும் பெயருடன் இக்கல்விநிலையம் தொடங்கப்பட்டது

வட்டுக்கோட்டை குருமடம் ஆசியாவில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ உயர்கல்வி அமைப்பு. இதற்குப் பின்னர் கொற்றாவில் சேட்சு மிஷன் செமினாரி 1927-ல் தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பின் வெஸ்லியன் செமினாரி (பின்னர் மத்தியக்கல்லூரி)-யும், 18 ஆண்டுகளுக்குப் பின் சுண்டிக்குழி செமினாரி (இப்போது செயின்ட் யோன்ஸ் கல்லூரி) யும் தொடங்கப்பட்டன. செயல்பட்ட காலத்தில் கல்கத்தாவின் கேரி கல்லூரி (Carey College in Serampore) க்கு அடுத்தபடியாக அளவிலும் செயலிலும் இருந்தது என ஆய்வாளர் சீலன் கதிர்காமர் குறிப்பிடுகிறார். நேதன் வார்ட் (Nathan Ward) இதை தனி கல்வியமைப்பாக முன்னெடுத்தார். 1846-ல் யாழ்ப்பாணத்தில் தீவிரமான காலரா தொற்று நோய் பரவியது. அப்போது சிறிது காலம் மூடப்பட்டிருந்தது. திசேரா காபிரியேல் பிள்ளை முதல் ஆசிரியர். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் சம்ஸ்கிருதம், எபிரேயம், லத்தீன் சொல்லிக்கொடுக்கப்பட்டன. குறிப்பாக தமிழின் பண்டைய இலக்கியங்கள், திருக்குறள் முதலிய நீதிநூல்கள், இலக்கணங்கள் தகுந்த பண்டிதர்களால் விரிவாக கற்பிக்கப்பட்டன. வட்டுக்கோட்டை செமினாரியின் பணிகள் வெற்றிபெறவே பெண்களுக்கென ஒரு கல்விநிலையத்தை அமெரிக்க சிலோன் மிஷன் அமைப்பினர் உடுவில் என்னுமிடத்தில் தொடங்கினர். இது ஓர் உண்டு உறைவிடப்பள்ளி. உடுவில் பெண்பாடசாலையில் குறைவாகவே இந்துப் பெண்கள் பயிலவந்தனர். மதம் மாறியவர்களின் பெண்குழந்தைகளே மிகுதியும் அங்கே பயின்றனர். வெவ்வேறு கிறிஸ்தவ பள்ளிகளில் இருந்து முப்பது பெண்குழந்தைகளை அங்கே சேர்த்து பயிற்றுவித்தனர்.

டேனியல் பூர்

பணிகள்

இலங்கை பிரிட்டிஷ் அரசு 1831-ல் அமைத்த கோல்புரூக் கமிஷன் அறிக்கை (Colebrook Commission Report of 1831) வட்டுக்கோட்டை குருமடம் பற்றிச் சொல்லும்போது “இதன் மாணவர்கள் கணிதத்திலும் பிற பயன்தரு கல்விமுறைகளிலும் குறிப்பிடத்தக்க பயிற்சி கொண்டவர்களாக திகழ்கிறார்கள். உள்ளூர்க்காரர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் நிறைவூட்டும் சான்றுகள் உள்ளன. அமெரிக்க மிஷனரிகள் ஆங்கிலத்தை பொதுவான பயிற்றுமொழியாக அளிப்பதிலும் உறுதிகொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு கல்வியாளரான எமெர்சன் டென்னெட் (Emerson Tennent) வட்டுக்கோட்டை குருமடத்துக்கு 1848-ல் வந்தார். அவர் அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்த பல கல்வி நிலையங்களுக்கு நிகரான கல்வி வட்டுக்கோட்டை குருமடத்தில் அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார். சி.எஸ்.ஐ அமைப்பின் ஜாஃப்னா டயோசிஸின் முதல் பிஷப் ஆன சபாபதி குபேந்திரன் வட்டுக்கோட்டை குருமடம் செயல்பட்ட காலகட்டத்தில் கல்வியிலும் கிறிஸ்தவ மதமாற்றத்திலும் மிகப்பெரிய எழுச்சி இருந்ததாகச் சொல்கிறார்.

வட்டுக்கோட்டை குருமடம் நவீன ஆங்கிலக் கல்வியை அளித்தது. அக்கல்வி பெற்றவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஆகவே ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக யாழ்ப்பாண உயர்குடி சைவர்கள், வட்டுக்கோட்டை குருமடத்தில் சேர்ந்து கல்வி கற்றனர். அவர்களில் ஏராளமானவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர்.

எதிர்ப்பு

வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்பில் இருந்த நல்லூர் ஆறுமுக நாவலர் பின்னர் தீவிரமான சைவ மீட்பு இயக்கத்தை முன்னெடுத்தார். கிறிஸ்தவ மதம் மீது கடுமையான கண்டனங்களும் தொடுத்தார். விளைவாக கிறிஸ்தவ மதமாற்றம் குறைந்தது. வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்றவர்கள் பெயரை மட்டும் கிறிஸ்தவப்பெயராக மாற்றிக்கொண்டு சைவர்களாக நீடித்தனர். கல்வி கற்றபின் மீண்டும் சைவர்களாக ஆனார்கள். ஆகவே அந்நிறுவனத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.

இ.பி.ஹேஸ்டிங்ஸ்

மூடப்படுதல்

வட்டுக்கோட்டை குருமடம் தமிழ்க்கல்வி, இந்தியத்தத்துவக் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தமையால் அதன் வழியாக மதமாற்றம் போதிய அளவு நிகழவில்லை என்னும் புகார்கள் பாஸ்டன் தலைமையகத்துக்குச் சென்றன. ஆகவே அதை மூடிவிட எண்ணம் கொண்டு ஒரு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. அப்போது மானிப்பாயில் மதப்பணி புரிந்துகொண்டிருந்த டேனியல் பூர் மனமுடைந்தார். "இந்த தூதுக்குழு கடவுளால் அனுப்பப்பட்டது என்று நான் எண்ணியிருந்தேன் என்று டாக்டர் ஆண்டர்சனுக்குக் கூறுங்கள். உங்கள் எல்லாருக்கும் என் எண்ணம் என்னவென்று தெரியும். அவர்கள் வரும்போது நான் மறைந்துவிடுவதே மேல் என்று தோன்றுகிறது. உண்மை என்றோ வெளியாகும்" என அவர் தன் கடிதமொன்றில் எழுதினார்.

பாஸ்டன் தலைமையகத்தில் இருந்து நிதிவரவு குறைந்தமையாலும், ஆங்கில அரசின் ஒத்துழையாமையாலும் உருவான தொடர்ச்சியான நிதிச்சிக்கல்களால் இ.பி.ஹேஸ்டிங்ஸ் (E. P. Hastings) தலைவராக இருந்தபோது வட்டுக்கோட்டை குருமடம் 1855-ல் மூடப்பட்டது. வட்டுக்கோட்டை குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து ஜூலை 3, 1872-ல் அக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீண்டும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.இ.பி.ஹேஸ்டிங்ஸ் அதன் முதல் முதல்வராக ஆனார். யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் இன்று பெரிய நிறுவனமாகச் செயல்படுகிறது.

முதன்மை ஆளுமைகள்

வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற ஆளுமைகள்

இதழியல்

  • ஈழத்தின் முதல் தமிழ் இதழ் என கருதப்படும் உதயதாரகை வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடையது

யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி 1872 முதல் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிறது

அறிவியக்க இடம்

வட்டுக்கோட்டை குருமடம் தமிழிலக்கிய மறுமலர்ச்சியை தொடங்கிவைத்த மையங்களில் ஒன்றாக பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. கிறிஸ்தவ மதகுருக்கள் உள்ளூர் மொழியைக் கற்றாகவேண்டும் என்னும் நிபந்தனையை ஒட்டி அங்கே அளிக்கப்பட்ட கிறிஸ்தவக் கல்விக்கு நிகராக தமிழ்க்கல்வியும் அளிக்கப்பட்டது. தமிழ்ச்சூழலில் மரபார்ந்த குருகுல முறைக்கு வெளியே நவீனக் கல்விகூட அமைப்பில் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது இங்குதான். அதன்பொருட்டு தமிழுக்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டு பாடநூல்கள் எழுதப்பட்டன. அதற்கு தமிழறிஞர்கள் அமர்த்தப்பட்டனர். பிற்காலத்து கல்விக்கூடத் தமிழ்க்கல்விக்கு முன்னோடியாக அமைந்தவை இப்பாடத்திட்டமும், பாடநூல்களுமே. பல தமிழறிஞர்கள் வட்டுக்கோட்டை குருமடத்தில் இருந்து உருவாயினர். ஏறத்தாழ எழுநூறு மாணவர்கள் இக்கல்லூரியின் 32 ஆண்டு வரலாற்றில் கற்று வெளியேறியதாக குறிப்பிடப்படுகிறது.

பின்னர் ஆறுமுகநாவலர் தலைமையில் வட்டுக்கொட்டை குருமடத்திற்கு எதிரான சைவ எழுச்சியும் தமிழ்க்கல்வி முறையும் உருவானது. அவ்வாறு வட்டுக்கோட்டை குருமடத்தில் இருந்து விலகிச் சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை , கரோல் விசுவநாத பிள்ளை போன்றவர்கள் தமிழ்ப்பதிப்பியக்கத்தில் முன்னோடிகளாயினர். அதுவும் கூட வட்டுக்கோட்டை குருமடத்தின் விளைவு என்றே கொள்ளத்தக்கது.

வட்டுக்கோட்டை குருமடம் தமிழ் இதழியலிலும் முன்னோடியானது. அவர்கள் நடத்திய உதயதாரகை தமிழின் தொடக்ககால நூல்களில் ஒன்று.

வட்டுக்கோட்டை குருமடம் தெற்காசியாவின் நவீன பள்ளிக்கல்விமுறையை உருவாக்கிய முன்னோடி அமைப்புகளில் ஒன்று. தெற்காசியச் சூழலுக்கான பொதுவான பாடத்திட்டம், பாடநூல்கள், பயிற்றுமுறை ஆகியவற்றை அது உருவாக்கியது.அதன்பொருட்டு அகராதிகள், சொல்லடைவுகள், இலக்கணநூல்கள் ஆகியவற்றை உருவாக்கியது. அங்கிருந்தே அமெரிக்க மிஷன் பணியாற்றியபிற ஊர்களுக்கு அப்பயிற்றுமுறை கொண்டுசெல்லப்பட்டது.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:29 IST