under review

டேனியல் பூர்

From Tamil Wiki
டேனியல் பூர்

டேனியல் பூர் (Daniel Poor) (டானியல் பூவர்) ( 27 ஜூன் 1789 - 3 பெப்ருவரி 1854) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை குருமடம் என்னும் கல்வியமைப்பை நிறுவிய அமெரிக்க மதப்பரப்புநர். பிரெஸ்பிடேரியன் (Presbyterian) மதக்குழுவைச் சேர்ந்தவர். கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

டேனியல் பூர் ஜூன் 27, 1789-ல் ஜோசப் பூர் மற்றும் மேரி (ஆபட்) பூர் தம்பதியினரின் 12-வது பிள்ளையாக டென்வர், மாசச்சூசஸ்ட்டில் பிறந்தார். பிலிப்ஸ் அக்காடமி அண்டோவர் (Phillips Academy, Andover) கல்விநிறுவனத்தில் 1805லும் டார்ட்மவுத்தில் 1811லும் பட்டங்கள் பெற்று 1814-ல் தனது இருபத்தைந்தாவது வயதில் அண்டோவர் இறையியல் செமினரியில் பட்டம் பெற்றார். மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நியூபரிபோர்ட் பிரெஸ்பிடேரியன் சபையில் 1815-ம் ஆண்டு மதப்பணியாளராக திருப்பொழிவு (Ordination) பெற்றார். அமெரிக்காவின் UCFM என்னும் மிஷனரி அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தனிவாழ்க்கை

மாசசூசெட்ஸின் சேலத்தை சார்ந்த சூசன் பல்பிஃஞ்சை அக்டோபர் 9, 1815-ல் மணம் புரிந்தார். திருமணம் முடிந்து இரண்டு வாரங்களில் பூர் இலங்கை கிளம்பினார்.

பூரின் மனைவி சூசன் மே 7, 1821-ல் தெல்லிப்பளையில் காலமானார் அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

பூர் அதன் பின்னர் இங்கிலாந்தின் மதப்பரப்புரான ரெவெ.நைட் என்பவரின் சகோதரி ஆன் நைட் என்பவரை ஜனவரி 21, 1823-ல் மணம் முடித்தார்.

மதப்பணி

டேனியல் பூர் இலங்கைப் பயணத்துக்கு முன்பாக மொழியியல் வல்லுனரான ரெவெரண்ட் வில்லியம் பெண்ட்லியை சந்தித்தார், அவருக்கு பூருடைய திறமை மீதோ, திட்டங்கள் மீதோ சிறந்த அபிப்பிராயம் இல்லை. ஆயினும் வாழ்த்து வழங்கினார். அவர்கள் கிளம்பும்போது கப்பல் முகப்புக்கு வந்து ரெவெ ஸ்பிரிங் ஒரு வாழ்த்துரை வழங்கி ஜெபித்தார். UCFM அமைப்பு ஏற்கனவே 1812ல் தன் முதல் மிஷனரி அமைப்பை இந்தியாவுக்கு அனுப்பியது. அந்த அமைப்பு இந்தியாவில் பணியாற்ற அன்றிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதன் தலைவரான சாமுவெல் நெவெல் அமெரிக்க மும்பை மிஷனை உருவாக்கினார். பின்னர் மொரிஷியஸுக்குச் சென்றார். அங்கே அவருக்கு உடல்நலம் குறைவுபட்டது, அவர் மனைவி மறைந்தார். அவர் மீண்டும் மும்பைக்கு திரும்பும் வழியில் இலங்கையிலுள்ள காலி துறைமுகத்தை அடைந்தார். அங்கே இலங்கையின் ஆட்சியாளரான சர்.ராபர்ட் பிரௌண்ரிக் என்பவர் மதப்பணி ஆற்ற அனுமதி கொடுத்தார். நெவெல் அங்கே அமெரிக்க இலங்கை மிஷன் அமைப்பை உருவாக்கினார். அவர் பாஸ்டனில் இருந்த தலைமையகத்துக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் இரண்டாவது குழு அனுப்பி வைக்கப்பட்டது. பூர் அதில் இடம்பெற்றார்.

அமெரிக்க மிஷன் சர்ச்,தெல்லிப்பளை

ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் ( James Richards) பி.சி.மெக்ஸ் (P.C. Meigs) டேனியல் பூர், ஹெச்.பேட்வெல் (H.Bardwell) எட்வர்ட் வாரன் (E.Warren)ஆகிய ஐந்து புதிய மதபோதகர்கள் 1815-ல் டிரயாட் (Dryad) என்னும் கப்பலில் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தனர். அதற்குமுன் அவர்கள் 1815-ல் அமெரிக்காவில் நியூபெர்ரி போர்ட் என்னும் ஊரில் பிரிஸ்பேனியன் தேவாலயத்தில் குருவாக பட்டம் பெற்றனர். 1816 பங்குனி மாதம் ஐவர் குழு கொழும்பு நகரை வந்தடைந்தது என்று சி.டி.வேலுப்பிள்ளை கூறுகிறார். அவர்களுடன் டேனியல் பூரின் மனைவி சூசன், மெக்ஸின் மனைவி சாரா, ஜேம்ஸ் ரிச்சர்ஸின் மனைவி சாரா, பாட்வெல்லின் மனைவி ஆகியோரும் சென்றனர்.

அவர்கள் கொழும்புக்கு மார்ச் 22, 1816 அன்று வந்து சேர்ந்தனர், அங்கே அவரை வெஸ்லியல் சபையின் மதப்பணியாளரான ஜேம்ஸ் லிஞ்ச் வரவேற்றார். அங்கிருந்து விரைவிலேயே யாழ்ப்பாண தீபகர்ப்பத்திற்கு இடம் பெயர்ந்தனர். பூர் குடும்பமும் எட்வர்ட் வாரனும் தெல்லிப்பளையில் அக்டோபர் 16, 1816ல் குடியேறினர்.

துவக்கத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மதபோதனை செய்ய ஆரம்பித்த பூர், தமிழில் விரைவில் தேர்ச்சி பெற்று ஒரு வருடத்திற்குள்ளாகவே சரளமாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். பிற மதபோதகர்களில் உடல்நலம் குன்றியவரான எட்வர்ட் வாரன் கொழும்பிலிருந்து கிளம்பி ஆப்ரிக்கா சென்று 1818-ல் காலமானார். அவர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்வியை வழங்க்குவதிலும் ஈடுபட்டிருந்தார். வாரனுடன் கேப் டவுன் சென்ற ஜேம்ஸ் ரிச்சர்ட் அங்கே நவம்பர் 25, 18181வரை இருந்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். மேலும் மூன்று வருடங்கள் தாக்குபிடித்தபின்னர் ஆகஸ்ட் 3, 1822-ல் ஜேம்ஸ் ரிச்சர்ட் மறைந்தார்.

அமெரிக்க மிஷன் சர்ச், வட்டுக்கோட்டை

கல்விப்பணி

பூர் தெல்லிப்பளையிலும் அதன் அருகிலிருந்த கிராமங்களிலும் ஆங்கிலக் கல்வி வழங்குவயதில் முதன்மையானவர். பூர் தெல்லிப்பளைக்குச் சென்றபோது அங்கே ஏற்கனவே லண்டன் மிஷன் (LMS) கல்விப்பணிகளை தொடங்கியிருந்தது. 1805-ல் ரெவெ பால்ம் (Rev Palm) என்னும் லண்டன்மிஷன் மதபோதகர் பள்ளிக்கல்வியை தொடங்கியிருந்தாலும் அப்பணி தேக்கமுற்றிருந்தது .1813 லேயே இலங்கைக்கு வந்த மதப்பரப்புநர் ரெவெ.சாமுவேல் நெவெல் வறட்சியான வடக்குப் பகுதிகளில் ஆரம்பக் கல்வி வழங்க அனுமதியை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மாறாக யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த அமெரிக்க மெத்தடிஸ்ட்டு மதபோதகர்கள் கல்வி இல்லாமல் மதமாற்றம் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்ள நான்காண்டுகள் எடுத்துக்கொண்டனர். 1817ல்தான் ரெவ். ஜேம்ஸ் லின்ச் இங்கிலாந்து தலைமையகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்) 1816-ல் பூர் தடையின்றி தெல்லிப்பளையில் கல்விப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது. பூர் ரெவெ பால்ம் பயிற்றுவித்திருந்த ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை தன் பணிக்கு எடுத்துக்கொண்டார். 1818-ல் டேனியல் பூர் எழுதிய கடிதம் ஒன்றில் பால்ம் செய்த பணிகள் தனக்கு முன்னோடியானவை என குறிப்பிடுகிறார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி

டிசம்பர் 9, 1816ல் பூர் 'தேசிய பொது இலவசப் பள்ளிக்கூடத்தை’ (Native Free school) ஆரம்பித்தார், தற்போது அது தெல்லிப்பளை யூனியன் கல்லூரி என அழைக்கப்படுகிறது. 'பொது இலவசப் பள்ளிக்கூடம்’ யாழ்ப்பாணத்தில் துவங்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளிக்கூடமாகும். 1818ல் பூர் அதை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியாக மாற்றினார். யாழ்ப்பாணத்தின் முதல் தங்கும் விடுதிகொண்ட பள்ளியும் அதுவே. ஆறு மாணவர்களுடன் அது துவங்கப்பட்டது. 1828ல் தேர்ச்சி பெர்ற முதல் மாணவர் சாமுவெல் லோசெஸ்டர் அங்கேயே ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பூர்தான் முதன்முதலில் பெண் மற்றும் தலித் மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்ட பள்ளி முதல்வர். முதன் முதலில் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவி மிராண்டா செல்லதுரை தலித் வகுப்பைச் சார்ந்தவர். 1821ல் மொத்தச் சேர்க்கை 11 மாணவர்களும் 3 மாணவிகளுமாய் இருந்தது.

மல்லாகம் நேட்டிவ் ஃப்ரீ ஸ்கூல்

1818-ல் டேனியல் பூர் மல்லாகத்தில் ஒரு தேசிய இலவசப்பள்ளியை தொடங்கினார். அங்கே ஆங்கிலமும் தமிழும் கற்பிக்கப்பட்டது

மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம்

1818 ஜூன் மாதம் 4-ம் தேதி டேனியல் பூர் மயிலிட்டி வடக்கு அமெரிக்க வித்யாலயத்தை தொடங்கினார். அங்கே முப்பத்தாறு மாணவர்கள் பயின்றதாகப் பதிவு செய்கிறார். அங்கே பின்னர் எச்.ஹொய்சிங்டன் பணியாற்றினார். இப்போது மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது

மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம்

1818 ஜூன் 26-ம் தேதி மாவிட்டபுரம் வடக்கு அமெரிக்க மிஷன் வித்தியாலயம் நிறுவப்பட்டது.

அளவெட்டி அமெரிக்க மிஷன் வித்தியாலயம்

1831-ல் பூர் அளவெட்டியில் அளவெட்டி அமெரிக்க மிஷன் வித்தியாலயத்தை நிறுவினார். அங்கே லூக்கா என்னும் பெண் விவிலியத்தை வாசித்ததாகவும், இலங்கையில் அவர் சந்தித்த வாசிக்கத்தெரிந்த முதல் பெண் என்றும் பதிவு செய்கிறார்.

அச்சுப்பணி

டேனியல் பூர் யாழ்ப்பாணத்தில் அச்சகம் நிறுவி மதநூல்களையும் கல்விக்குரிய பாடநூல்களையும் வெளியிட முன்முயற்சி எடுத்தார். 1816 முதலே பாஸ்டன் தலைமையகத்துக்கு ஓர் அச்சு இயந்திரத்தை அனுப்பிவைக்கும்படி எழுதினார். 1920ல்தான் ஜேம்ஸ் கரட் என்னும் அச்சுநிபுணர் அச்சுயந்திரத்துடன் யாழ்ப்பாணம் வந்தார். ஆனால் அன்றைய பிரிட்டிஷ் அரசு அமெரிக்க மிஷனரிகள் அச்சிட அனுமதி அளிக்கவில்லை. 1834-ல் கோல்புரூக் கமிட்டி அறிக்கைக்குப் பின்னர்தான் அனுமதி கிடைத்து டேனியல் பூர் அச்சகத்தை அமைக்க முடிந்தது.

பாடநூல்கள்

டேனியல் பூர் தமிழில் முதன்முதலாக பாடநூல்களை எழுதியவர். கிறிஸ்தவ மதபோதனை நூல்களுக்கு மேலதிகமாக பாடநூல்களை அமெரிக்கப் பாடத்திட்டத்தின் அதே வடிவில் எளிமையான தமிழில் எழுதச்செய்தார். பாடநூல்களில் உரைநடை இடம்பெறவேண்டும், அவை சந்திபிரித்து எழுதப்படவேண்டும் என்பதில் டேனியல் பூர் உறுதியுடன் இருந்தார்.

பூர் பணியாற்றிய தெல்லிப்பளை மிஷன் இருப்பிடம்

வட்டுக்கோட்டை குருமடம்

1823 மார்ச் மாதம் 22 -ம் தேதி டேனியல் பூர் வட்டுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்து அங்கே ஆண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார்.அதில் ரெவெ.வுட்வேட் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்தக் கல்விநிறுவனம் பின்னர் வட்டுக்கோட்டை குருமடம் எனப்படும் நிறுவனமாக ஆகியது. இன்று இது யாழ்ப்பாணக் கல்லூரி என அழைக்கப்படுகிறது. இங்கே இவருடன் நேதன் வார்ட் பணியாற்றினார்.

டேனியல் பூர் வட்டுக்கோட்டை குருமடத்தின் நிறுவனராகவும் முதற்தலைவராகவும் இருந்தார். வட்டுக்கோட்டை குருமடம் தமிழ்க்கல்வி, இந்தியத்தத்துவக் கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தமையால் அதன் வழியாக மதமாற்றம் போதிய அளவு நிகழவில்லை என்னும் புகார்கள் பாஸ்டன் தலைமையகத்துக்குச் சென்றன. ஆகவே அதை மூடிவிட எண்ணம் கொண்டு ஒரு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. அப்போது மானிப்பாயில் மதப்பணி புரிந்துகொண்டிருந்த டேனியல் பூர் மனமுடைந்தார். "இந்த தூதுக்குழு கடவுளால் அனுப்பப்பட்டது என்று நான் எண்ணியிருந்தேன் என்று டாக்டர் ஆண்டர்சனுக்குக் கூறுங்கள். உங்கள் எல்லாருக்கும் என் எண்ணம் என்னவென்று தெரியும். அவர்கள் வரும்போது நான் மறைந்துவிடுவதே மேல் என்று தோன்றுகிறது. உண்மை என்றோ வெளியாகும்" என அவர் தன் கடிதமொன்றில் எழுதினார்.

இந்தியாவில்

டேனியல் பூருக்கு 1835-ல் இறையியல் முனைவர் (டி.டி) பட்டம் வழங்க்கப்பட்டது. 18-10-1835-ல் அவர் வட்டுக்கோட்டை செமினாரி பொறுப்பை ஹொய்சிங்டனிடம் ஒப்படைத்துவிட்டு இந்தியாவிற்கு மாற்றப்பட்டு மதுரைக்கு வந்தார். வட்டுக்கோட்டை செமினாரியில் இருந்து முப்பதுபேர் அவருடன் மதுரை அமெரிக்க மிஷனில் பணியாற்றச் சென்றனர். அவர்களில் பிரான்ஸிஸ் அஸ்பரி, ஜான் பிரெக்கன்ரிட்ஜ், ஜான் ஆர்னால்ட், நிக்கலஸ் மதே போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

டேனியல் பூர் மதுரையில் ஆறுவருடங்கள் இருந்தார். முப்பத்தேழு பள்ளிக்கூடங்களை நிறுவினார். ஊர்கள் தோறும் சென்று மதபோதனை செய்து, கல்விநிலையங்களை உருவாக்கினார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார். ஓராண்டில் ஐம்பத்தாறு பள்ளிகளாக பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். 1836ல் திண்டுக்கல், திருமங்கலம் ஆகிய ஊர்களிலும் 1838ல் திருபுவனத்திலும் அமெரிக்க பள்ளிகள் தொடங்கப்பட்டன. பூர் மதுரை அமெரிக்கன் மிஷனை வலுப்படுத்தினார். மதுரையில் மதுரை அமெரிக்கன் கல்லூரியை நிறுவினார் (பார்க்க அமெரிக்க மதுரை மிஷன்)

மீண்டும் இலங்கையில்

டேனியல் பூர் தனது துவக்கத் தலமான தெல்லிப்பளைக்கு 1841-ல் திரும்பினார். 1848-ல் அமெரிக்காவிற்குச் சென்ற அவர் அங்கே தனது பேச்சாற்றலால் மதபோதகப் பணி குறித்த ஆழமான தாக்கத்தை உருவாக்கினார்.1850-ல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார். மானிப்பாயில் பணியைத் தொடர்ந்தார்.

தமிழ்ப்பணி

டேனியல் பூர் வட்டுக்கோட்டை செமினாரியிலும் பின்னர் மானிப்பாயிலும் பணியாற்றும்போது தமிழ்க்கல்விக்காக சில அடிப்படைகளை வகுத்து செயலாக்கினார்.

  • தமிழ்ச் சுவடிகளை சேகரித்தல்
  • ஓர் ஆய்வுக்குழு அமைத்து சுவடிகளை பரிசோதித்தல்
  • சுவடிகளுக்கான நூல்நிலையங்களை அமைத்தல்
  • ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருதத்துடன் சுவடிகளின் உள்ளடக்கத்தை ஒப்பிடுதல்
  • தமிழ்ச்சொற்களை தொகுத்து அகராதிகளாக்குதல்

தமிழாய்வில் தொடக்கநிலையாக அமைந்தவை டேனியல்பூரின் முயற்சிகளே. அவர் உருவாக்கிய குழுவில் இருந்து எழுந்து வந்த சி.வை.தாமோதரம் பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை போன்றவர்களே தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக அமைந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய சி.எம்.எஸ் மிஷனரியான ஜோசஃப் நைட் சேர்த்து வைத்திருந்த சுவடிகளை டேனியல் பூர் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டார். அச்சுவடிகள் வட்டுக்கோட்டை செமினாரி நூலகத்தில் சேர்க்கப்பட்டன. லீ வை ஸ்போல்டிங் என்னும் ஆய்வாளர் அதற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1831-ல் நந்நூல்,நல்வழி, மூதுரை,திருக்குறள், கந்தபுராணம் போன்றவை வட்டுக்கோட்டை செமினாரியில் இருந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. டேனியல் பூர் 'கீழைத்தேய ஏனைய நூல்களை பொறுத்தவரை சுவடிகளை திரட்டுவது இன்னும் திருப்தியான அளவில் இல்லை எனினும் சுதேசி நூல்களை திரட்டுவதில் போதிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்' என்று 1831-ல் குறிப்பிடுகிறார்.

பி.சி.மெக்ஸ் என்னும் போதகர்இந்தச் சுவடிகளை பாதுகாப்பதில் பெரும் பங்காற்றினார். 1852-ல் வட்டுக்கோட்டை செமினாரியில் 136 தமிழ்நூல்களின் சுவடிகள் இருந்தன. ஸ்போல்டிங் உருவாக்கிய 'தமிழ் நூலாசிரியர்களினதும் அவர்களின் நூல்களினதும் அட்டவணை' என்னும் குறிப்பு தமிழ் பதிப்பியக்கத்தின் முதன்மையான தொல் ஆவணங்களில் ஒன்றாகும்.

தமிழ் நடை

டேனியல் பூர் தமிழில் மொழியாக்கமாகவும் துண்டுப்பிரசுரங்களாகவும் நிறைய எழுதியவர். தமிழில் உரைநடை உருவாவதற்கு வழிவகுத்தவர்களில் டேனியல் பூரும் ஒருவர்.அவருடைய நடைக்கு உதாரணமான ஒரு துண்டுப்பிரசுரப் பகுதி: "இந்தக் காகிதத்திலே சொல்லியிருக்கிறது, சருவ சிருஷ்டிகரராயும் சருவ சிரேட்டராயும் இருக்கிற தேவனை அறிந்து அவரை வணங்க ஏவுகிற நியாயங்களேயன்றி அவரை நிந்தித்தற்கானதல்ல. அதிலும் நீங்கள் தமிழருக்குள் ஒழுக்கத்திலும் குலத்திலும் வேதாப்பியாசத்திலும் சிரேட்டராதலால் நாங்கள் எழுதும் நியாயத்தை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்து தீர்மானிப்பீர்கள் என்று நம்பி இதை எழுதுகிறோம். நாங்களும் நீங்களும் குலதருமத்தில் வித்தியாசமுள்ளவர்களாயிருந்தும் ஒரே தேவனாற் சிருஷ்டிக்கப்பட்டமையால் ஒரே பிதா புத்திரர்களாயிருக்கிறோம்..."

தெல்லிப்பளை கல்லூரி முதல்வர் இல்லம்

எழுத்துலகப் பங்களிப்பு

அமெரிக்கர்களின் வாழ்க்கை வரலாற்று அகராதியில் பூரின் பணிகளைக்குறித்த காலவரிசைப் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அவரது வாழ்க்கை குறிப்புக்களே அவரது எழுத்துலக பங்களிப்பாக அமைந்தன. பனோப்லிஸ்ட் மற்றும் மிஷனரி ஹெரல்ட் பத்திரிகைகளில் தொடர்ந்து இவை இடம்பெற்றன. அவற்றில் ஒரு மதபோதகர் கோணத்தில் அவர் கண்ட பல புதுமையான தகவல்கள் தமிழர்களைக் குறித்தும் அவர்களது நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறித்தும் இடம்பெற்றிருந்தன. அவரது ஆங்கில தமிழ் கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளன. டேனியல் பூரின் குறிப்புகள் முக்கியமான பண்பாட்டு ஆவணங்களாக ஆராயப்படுகின்றன.

மறைவு

பூர் 1854-ல் மானிப்பாயில் பரவிய காலராவினால் காலமானார். அப்போது அவருக்கு வயது 65. அவருடைய கல்லறை மானிப்பாயில் உள்ளது (பூர் குடும்ப கல்லறைகள் மானிப்பாய்)

கல்லறை வாசகம்

In memory of

Revd Daniel Poor, D.D.

who died at Manipay

February 3rd 1854,Aged 65

அமெரிக்கன் கல்லூரி நூலகம்

நினைவகங்கள்

டேனியேல் பூர் நினைவு நூலகம் (டி.பி.எம்) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும் மத்திய நூலகம். தென்னிந்தியாவிலுள்ள பழம்பெரும் நூலகங்களில் இதுவும் ஒன்று. இது ஜூன் 28, 1915ல் சேவையைத் துவங்கியது. ரெவ். டேனியேல் பூரின் நினைவில் இது கட்டப்பட்டது. டேனியல் பூரின் பேத்தி சாமுவேல் ஏ.மோரன் இங்கு நூலகம் கட்ட 25 ஆயிரம் டாலர்களை வழங்கினார். இதனால் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டிடம் டேனியல் பூர் பெயரில் 1933-ல் திறக்கப்பட்டது.

நூல்கள்

வணக்கத்திற்குரிய டானியல் பூவர் .எஸ். ஜெபநேசன்- இணையநூலகம்

மானிப்பாய் ,பூர் கல்லறை

மதிப்பீடு

பூர் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் ஆங்கிலக் கல்வி வழியாகவும், தமிழ் மொழிச் சேவை வழியாகவும், சமூக முன்னேற்றம் வழியாகவும் மிகப் பெரும் தொண்டாற்றியுள்ளார். பூர் உருவாக்கிய வட்டுக்கோட்டை குருமடம் இலங்கைத் தமிழ் வரலாற்றின் முக்கியமான ஒரு மையம். அங்கிருந்து ஐம்பதாண்டுகளில் ஏராளமான அறிஞர்கள் உருவாகி வந்தனர். யாழ்ப்பாணத்தின் கல்வியில் அவர்கள் பெரும்பங்காற்றினர். அவர்களில் சி.வை. தாமோதரம் பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை போன்றவர்கள் தமிழாய்விலும் தமிழ்ப்பதிப்பிலும் முன்னோடிகளாக அமைந்தனர். ஒருவகையில் தமிழ் மறுமலர்ச்சிக்கே மறைமுகமாக பூர் காரணமாக அமைந்தார்.

கரோல் விஸ்வநாத பிள்ளை தன்னுடைய சுப்ரதீபம் என்னும் நூலில் டேனியல் பூர் பற்றி இவ்வாறு கூறுகிறார். “வாய்மையும் தூய்மையும் நீதியும் நிறைவும் அன்பும் பொறையும் நிறைந்து விளங்கிய பூவர் ஐயர் முதலிய மகான்கள் இங்குதித்து அலகைவாயிலும் அகந்தை வாயிலும் உலக வாயிலும் உடலவாயிலும் அகப்பட்ட ஆன்மாக்கள் வீடுபெற்றுய்யும்படி இரட்சாபெருமானின் திருநாமத்தை உபதேசித்து கைம்மாறு கருதாது உதவுகின்ற மேகம்போல வைதீக லௌகீக கல்விப்பொருளை வழங்கினார்கள்"

உசாத்துணை

[[]]✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:47 IST