மிரன் வின்ஸ்லோ
மிரன் வின்ஸ்லோ. மிரோன் வின்ஸ்லோ (Miron Winslow) (டிசம்பர் 11, 1789 - அக்டோபர் 22, 1864) கிறிஸ்தவ மதபோதகர். கல்வியாளர். சிலோன் அமெரிக்க மிஷன் பணியாளர். தமிழ் ஆங்கில அகராதியை உருவாக்கியவர்.
பிறப்பு கல்வி
மிரன் வின்ஸ்லோ அமெரிக்காவில் வெர்மான்ட் மாநிலத்தில் வில்லிஸ்டன் என்ற நகரில் டிசம்பர் 11, 1789-ல் நத்தானியேல் வின்ஸ்லோ, ஜோஹன்னா கெலொக் (ஜொகன்னா வின்ஸ்லோ) ஆகியோருக்குப் பிறந்தார். அமெரிக்க கான்கிரகேஷனல் சர்ச் போதகரான கோர்டான் வின்ஸ்லோ, அமெரிக்க அரசு அதிகாரியான ஹப்பார்ட் வின்ஸ்லோ ஆகியோர் அவருடைய சகோதரர்கள்.
பதினான்காம் வயது முதல் கனடிகட் மாநிலத்தில் நார்விச் நகரில் ஒரு கிட்டங்கி கணக்காளராக பணியை தொடங்கி பின் தனக்கென ஒரு வணிக அமைப்பை உருவாக்கிக்கொண்டார். அங்கே இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கே அவர் மதமாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின் 1815-ல் மிடில்பரி கல்லூரியில் பட்டம் பெற்று, பின்னர் ஆன்டோவர் இறையியல் மதப்பள்ளியில் 19 ஜனவரி 1818-ல் பட்டம் பெற்றார். யேல் பல்கலையில் இறையியலில் கௌரவப்பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
வின்ஸ்லோ நான்கு முறை மணம்புரிந்துகொண்டார். ஜனவரி 19,1819--ல் ஹாரியட் லாத்ரொப் (Harriet W. Lathrop) என்பவரைத் திருமணம் புரிந்தார். ஹாரியட் வின்ஸ்லோவுக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர். சார்ல்ஸ் லாத்ரோப் வின்ஸ்லோ, ஹாரியட் மரியா வின்ஸ்லோ, ஜோஹன்னா வின்ஸ்லோ, ஜார்ஜ் மாட்டன் வின்ஸ்லோ, ஹாரியட் லாத்ரோப் வின்ஸ்லோ, எலிசா காய்ட் வின்ஸ்லோ. ஹாரியட் மதப்பணியில் ஈடுபட்டவர், இலங்கையில் பெண்கல்விக்காக உழைத்தவர். ஜனவரி 14, 1833 அன்று ஹாரியட் மறைந்தார்.
ஏப்ரல் 23,1835-ல் வின்ஸ்லோ காதரேன் வாட்டர் பரியை மணந்தார். அதில் ஒரு மகள் பிறந்தார். 1837-ல் காதரீன் மறைந்தார். செப்டெம்பர் 2,1838-ல் வின்ஸ்லோ அன்னா ஸ்பியர்ஸை மணந்தார். அதில் மூன்று மகன்கள். அன்னா 1843-ல் மறைந்தார்.
மார்ச் 12, 1845-ல் வின்ஸ்லோ மேரி வில்லியம்ஸை மணந்தார். ( Mary Williams Winslow (Billings). மேரி அமெரிக்க மதுரை மிஷன் பணியாளரான ரெவெரெண்ட் ராபர் ஆக்டன் ட்வைட் ( Robert Ogden Dwight) ஐ மணந்து விதவையானவர். மேரிக்கு மேரி (Mary Billings Dwight) டிமோத்தி எட்வர்ட்ஸ் (Timothy Edwards Dwight) ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.
அமெரிக்காவின் அரசுச்செயலர் பதவியில் 1953 முதல் 1959 வரை இருந்த ஜான் ஃபோஸ்டர் டல்லஸ் (John Foster Dulles) சி.ஐ.ஏ அமைப்பின் இயக்குநராக 1953 முதல் 1961 வரை இருந்த ஆலன் வெல்ச் டல்லெஸ் ( Allen Welsh Dulles) ஆகியோர் ஹாரியட்டின் மகள் ஹாரியட் லாத்ரொப் வின்ஸ்லோ வழியாக வந்த வழித்தோன்றல்கள்.
மதப்பணிகள்
குருத்துவப்பட்டம்
வின்ஸ்லோ ஆண்டோவர் இறையியல் பள்ளியில் பயில்கையில் அமெரிக்க மிஷன் போர்ட் ( American Board of Commissioners for Foreign Missions -ABCFM) அமைப்புக்கு நிதி திரட்டும்பொருட்டு நியூ இங்கிலாந்து பகுதியில் பயணம் செய்தார். நவம்பர் 4, 1818-ல் வின்ஸ்லோ ABCFM அமைப்பால் மசாசுசெட்ஸ் மாநில டாபெர்னேகிள் சர்ச் (Tabernacle Church, Massachusetts) கூடுகையில் குருத்துவப் பட்டம் அளிக்கப்பட்டார். அவருடன் ரெவெ பிஸ்க் (Pliny Fisk) போன்றவர்களும் பட்டம் பெற்றனர். அவர்கள் நால்வர் அமெரிக்க இலங்கை மிஷன் பணிக்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்
இலங்கையில்
ஜூன் 8,1819-ல் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இருந்து இண்டஸ் (Indus) என்னும் கப்பலில் நான்கு மிஷனரிகள் இலங்கைக்கு கிளம்பினர். ரெவெ.எம்.வின்ஸ்லோ, ரெவெ ஸ்போலிங் ( Spaulding) ரெவெ வுட்வேர்ட் (Woodward) ரெவெ. ஜான் ஸ்கட்டர் (Scudder) ஆகியோர் பணிக்காக இங்கைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கல்கத்தா சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றனர். டிசம்பர் 14,1819-ல் அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.
ஜூலை 4, 1820-ல் வின்ஸ்லோ உடுவில் ஊரில் மதப்பணிக்காக நியமிக்கப்பட்டார். பதினான்காண்டுகள் அங்கே அவர் ஒரு மதக்கல்விக்கூடத்தை நிறுவினார். திருமதி வின்ஸ்லோ உடுவில் பெண்பள்ளியை நிறுவி நடத்தினார். வட்டுக்கோட்டை குருமடத்துடன் வின்ஸ்லோ நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.
இந்தியாவில்
பதினான்காண்டுகள் உடுவில் கல்விச்சேவையில் இருந்த வின்ஸ்லோ ஆகஸ்ட் 18, 1836-ல் சென்னைக்கு அனுப்பப்பட்டார். அமெரிக்க மதராஸ் மிஷன் அமைப்பின் தலைமையகத்தை அவர் சென்னையில் நிறுவினார். அவ்வாண்டு செப்டெம்பரில் ஜான் ஸ்கட்டர் (சீனியர்) சென்னைக்கு வந்தார். அவரே இந்தியாவில் அமெரிக்க மருத்துவ மிஷனின் முதல் ஊழியர். 1839-ல் அவர்களுடன் அமெரிக்காவில் இருந்து வந்த அச்சுநிபுணரான பினியாஸ் ஆர் ஹண்ட் (Phineas R. Hunt )இணைந்துகொண்டார். வின்ஸ்லோ சென்னையில் ஓர் அச்சகத்தை நிறுவினார். அதன் பொறுப்பை பின்னர் ஹண்ட் எடுத்துக்கொண்டார்
வின்ஸ்லோ இந்தியாவில் அமெரிக்க மெட்ராஸ் மிஷன் பணிகளுக்காக உழைத்தார். ஆங்கிலம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கினார். மதப்பரப்பு பிரசுரங்களையும் வெளியிட்டார். வின்ஸ்லோ 1855-ல் அமெரிக்கா சென்று 1858-ல் திரும்பினார். 1864-ல் உடல்நலக்குறைவால் மீண்டும் அமெரிக்கா சென்றபோது மறைந்தார்
இலக்கியப்பணிகள்
ஆண்டோவரில் குருத்துவக் கல்வியில் இருக்கையில் வின்ஸ்லோ மிஷன் வரலாற்றை எழுதினார். ’ A History of Missions’ அல்லது History of the principal attempt to propagate Christianity among the Heathen என்னும் அவருடைய நூல் 1819-ல் ஆண்டோவரில் வெளியானது. 1855-ல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா திரும்பும் வழியில் மிஷன் பற்றிய குறிப்புகள் (Hints on Missions) என்னும் நூலை எழுதினார். அது 1856-ல் வெளியிடப்பட்டது. அது அவருடைய முப்பத்தேழாண்டுக்கால மதப்பரப்புப் பணி அனுபவங்களின் பதிவு.
இவை தவிர அவர் தன் மதப்பேருரைகளை தொகுத்துள்ளார். துண்டுப்பிரசுரங்களும் எழுதியிருக்கிறார். பைபிளை மக்களின் மொழியில் தமிழில் மொழியாக்கம் செய்து சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்
அகராதிப்பணி
அகராதிகளின் பின்னணி
தமிழில் நிகண்டுக்கள் எனப்படும் அகராதிகள் மரபில் முன்னரே இருந்தன. பொ.யு. 1732-ல் வீரமாமுனிவர் சதுரகராதி என்னும் அகராதியை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக பொருளகராதி 1819-ல் உருவாக்கப்பட்டது. ஏட்டுச்சுவடிகளில் இருந்த இதை ரிச்சர்ட் கிளார்க் என்னும் ஆங்கிலேய அதிகாரி 1824-ல் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் என்ற இரண்டு அறிஞர்களைக் கொண்டு பிழைதிருத்தி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் உபயோகத்துக்காக அச்சிட்டார். பப்ரீஷியஸ், ப்ரெய்ட் ஹெப்ட் என்ற இரண்டு ஜெர்மன் மதப்பரப்புநர்கள் தமிழ்-ஆங்கில அகராதி யொன்றை 1779-ல் இயற்றினர். ஒவ்வொரு சொல்லின் கீழும் பல வழக்குத் தொடர்களும் கொடுக்கப்பட்டன. 185 பக்கங்களுள்ள ஒரு சிறு நூலாகச் சென்னையில் இது வெளியிடப்பட்டது 1830-ல் தமிழ் ஆங்கில அகராதியொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் தயாரிக்கப்பட்டிருந்தது. 1834-ல் அது அச்சில் வெளிவந்தது. கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்ட்ட அந்நூலை செம்மை செய்ய ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என இருவர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியால் நியமிக்கப்பட்டனர். ராபர்ட்ஸன் இறந்துபோகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர். 1834-ல் அந்நூல் அச்சேறியது.
1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் தமிழ் அகராதி ஒன்றையும், தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும் உருவாக்க முற்பட்டனர். திஸ்லெரா, பீட்டர் பெர்சிவல் ஆகியோரின் பங்களிப்புடன் ரெவெ. ஜோசப் நைட் அந்த அகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டினார். அச்சொற்களை யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் ஒரு தமிழ் அகராதியாக தொகுத்தார். சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் பின்னிணைப்பு சேர்த்தார். ரெவெ.ஸ்பால்டிங் 1842-ல் அதை வெளியிட்டார். யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் இது குறிப்பிடப்பட்டது. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற நவீன அகராதிகளில் இதுவே முதலாவது என ஆய்வாளர் கோவேந்தன் குறிப்பிடுகிறார்.
வின்ஸ்லோவின் அகராதி
வின்ஸ்லோ இலங்கையில் இருக்கும்போதே யாழ்ப்பாண அகராதியை மேம்படுத்தும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே அமெரிக்க மிஷன் தொகுத்திருந்த அகராதியின் சொற்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil என்னும் அகராதியை வின்ஸ்லோ உருவாக்கினார். இந்தப் பணியில் இராமாநுஜ கவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார், அளவெட்டி கனகசபைப்பிள்ளை முதலிய அறிஞர்கள் அவருக்கு உதவினர்
ஒவ்வொரு நாளும் மூன்று மணிநேரம் வீதம் முப்பதாண்டுகள் இந்த அகராதிக்காக அவர் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது. 976 பக்கங்களில் 68,000 சொற்களைக் கொண்ட இந்நூல் முந்தைய அகராதிகளை விட 31551 சொற்கள் கூடுதலாகக் கொண்டது. இதில் வானியல், தொன்மம், தொல்லறிவியல், தாவரவியல், விலங்கியல் சார்ந்த சொற்கள் ஏறத்தாழ முழுமையாகவே இடம்பெற்றிருந்தன. தெய்வங்கள், அறிஞர்கள், தொல்கதைத் தலைவர்கள் பெயர்கள் விரிவாக இடம்பெற்றிருந்தன.
அச்சிடுதல்
வின்ஸ்லோ அகராதிப்பணியை முடித்து அச்சிட முற்பட்டார். அதன் செலவு அமெரிக்க மிஷனால் ஏற்கக்கூடியதாக இல்லை. வின்ஸ்லோ சென்னை பிரிட்டிஷ் அரசின் உதவியை நாடினார். அவர்கள் இருநூறு பிரதிகளை வாங்குவதாகச் சொன்னார்களே ஒழிய முன்விலை அளிக்கவில்லை. அச்சிட்டு முடிவதற்கு மேலும் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று வின்ஸ்லோ கணக்கிட்டு பங்குகளை விற்கமுயன்றாலும் நிதி திரளவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை 1862-ல் வெளியிட்டார்.
மறைவு
வின்ஸ்லோ இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் வழியில் தென்னாப்ரிக்காவில் கேப் டவுன் துறைமுகத்தில் நோயுற்று அக்டோபர் 22, 1864-ல் மறைந்தார். கேப்டவுனில் அவருக்கு இரண்டுநாட்கள் மருத்துவம் செய்யப்பட்டாலும் பயனளிக்கவில்லை. தென்னாப்ரிக்கா கேப் டவுன், மெய்ட்லான்ட் செமித்தேரியில் (Maitland Cemetery Maitland, City of Cape Town Metropolitan Municipality, Western Cape, South Africa) அவருடைய சமாதி உள்ளது
இலக்கிய இடம்
வின்ஸ்லோவின் அகராதியே தமிழில் வெளிவந்த முதல் பேரகராதி. 1924-ல் சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட மேலும் முழுமைசெய்யப்பட்ட பேரகராதியே இன்றும் புழக்கத்திலுள்ளது. அது பெரும்பாலும் வின்ஸ்லோவின் பேரகராதியை ஒட்டி விரிவாக்கம் செய்யப்பட்டதுதான். தமிழ் மொழிவளர்ச்சிக்கு பெரும்பங்களித்த முன்னோடியாக வின்ஸ்லோ கருதப்படுகிறார். ரா.பி. சேதுப்பிள்ளை அவருடைய ‘கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்’ என்னும் கட்டுரையில் வின்ஸ்லோ ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி அகராதியை வெளியிட்டதைக் குறிப்பிட்டு ”கடன் கொண்டும் செய்வன செய்தல் நன்று என்ற உண்மையை மனத்திற்கொண்டு, தொண்டு செய்த வின்சுலோ ஐயர் போன்ற பெரியார் என்றும் தமிழ் நாட்டாரது நன்றிக்கு உரியராவர் அன்றோ?” என்று குறிப்பிடுகிறார்.
நூல்கள்
- A Sketch of Missions: Or, History of the Principal Attempts to Propagate Christianity Among the Heathen
- Hints on Missions to India
- A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil
உசாத்துணை
- வின்ஸ்லோ அகராதி குறித்து
- https://www.geni.com/people/Mary-Winslow/6000000075024698825
- https://www.geni.com/people/Rev-Miron-Winslow-D-D-L-L-D/6000000003178136846
- https://www.wmcarey.edu/carey/winslow/miron_winslow.htm
- https://prabook.com/web/miron.winslow/1097142
- https://familypedia.fandom.com/wiki/Miron_Winslow_(1789-1864)#Children
- https://www.findagrave.com/memorial/151662001/miron-winslow
- ரா பி. சேதுப்பிள்ளை கிறிஸ்துவத் தமிழ்த்தொண்டர்
- செந்தமிழ் பெட்டகம், த கோவேந்தன் பாகம்-1, பாகம்-2)
[[]]
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:05 IST