under review

அமெரிக்க மதராஸ் மிஷன்

From Tamil Wiki
அமெரிக்கன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமெரிக்கன் (பெயர் பட்டியல்)

அமெரிக்க மதராஸ் மிஷன் (1836); அமெரிக்க சென்னப்பட்டன மிஷன் சென்னை நகரத்தில் அமெரிக்க மிஷன் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட மதப்பரப்பு இயக்கம். அச்சு, வெளியீடு, கல்வி ஆகிய துறைகளில் இவ்வியக்கம் பங்களிப்பாற்றியிருக்கிறது.

தொடக்கம்

அமெரிக்க இலங்கை மிஷன் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதை ஒட்டி அமெரிக்க மதுரை மிஷன் தொடங்கப்பட்டு அதுவும் வெற்றியடைந்தது. ஆகவே சென்னையிலும் ஒன்றை தொடங்க அமெரிக்க இலங்கை மிஷன் தலைமை திட்டமிட்டது. 1833-ல் தன் மனைவி இறந்ததை ஒட்டி அமெரிக்கா சென்ற மிரன் வின்ஸ்லோ 1836-ல் திரும்பி வந்தார். அவரும் டாக்டர் ஜான் ஸ்கட்டரும் 1836-ல் சென்னை நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்க மதராஸ் மிஷன் என இந்த இயக்கத்திற்குப் பெயர் அமைந்தது.

பணிகள்

வின்ஸ்லோ செப்டெம்பர் 1836-ல் சென்னைக்கு வந்து ராயபுரத்தில் தங்கி ஓர் அச்சகத்தை அங்கே அமைத்தார். ஸ்கட்டர் அக்டோபர் மாதம் சென்னை வந்தார். ஸ்கட்டர் மருத்துவப்பணிகளை மேற்கொண்டார். ஸ்கட்டர் 1842-ல் உடல்நிலை நலிவால் அமெரிக்கா திரும்பி 1846-ல் மீண்டும் சென்னை வந்து பணிகளை தொடர்ந்தார். ஜனவரி 1849-ல் ஸ்கட்டரின் மனைவி நோயுற்று மறைந்தார்.1854-ல் உடல்நிலைக்குறைவால் அமெரிக்கா திரும்பும் வழியில் ஆப்ரிக்காவில் கேப்டவுன் என்னுமிடத்தில் 1855-ல் ஸ்கட்டர் மறைந்தார்.

வின்ஸ்லோ தன் அச்சகம் வழியாக சென்னையில் அகராதிகளையும், பைபிள் மொழியாக்கத்தையும் வெளியிட்டார். வின்ஸ்லோவின் அகராதி தமிழில் வெளிவந்த முழுமையான முதல் பேரகராதி என்று அறியப்படுகிறது. 1850-ல் வின்ஸ்லோவின் முயற்சியால் தமிழில் முழுமையான முதல் பைபிள் அச்சிடப்பட்டது. இது யாழ்ப்பாணம் பைபிள் என அழைக்கப்படுகிறது.

வின்ஸ்லோ 1864-ல் உடல்நலம் குன்றி அமெரிக்கா செல்லும் வழியில் ஆப்ரிக்காவின் கேப் டவுன் என்னுமிடத்தில் மறைந்தார். அவர் உடல் அங்கே ஸ்கட்டரின் கல்லறை அருகே புதைக்கப்பட்டது.

முடிவு

வின்ஸ்லோ 1864-ல் நோயுற்று அமெரிக்கா திரும்பியதுமே அமெரிக்க மதராஸ் மிஷன் முடிவுக்கு வந்தது. ராயபுரத்தில் அவர்கள் நிறுவிய அச்சகமும் இடமும் வெஸ்லியன் திருச்சபைக்கு விற்கப்பட்டது.

விவாதங்கள்

அமெரிக்க மதராஸ் மிஷன் சென்னையில் செயல்பட்ட சதுர்வேத சித்தாந்த சபை என்னும் அமைப்புக்கு எதிராக துண்டுப்பிரசுரப் போரில் ஈடுபட்டது. இரு சாராரும் மாறிமாறி மதக்கண்டனம் செய்துகொண்டனர்.

பங்களிப்பு

அமெரிக்க மதராஸ் மிஷனின் முதன்மைப் பங்களிப்பு என்பது வின்ஸ்லோ அச்சிட்ட அகராதியும், யாழ்ப்பாணம் பைபிளின் முழுமை மொழியாக்கமும்தான்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2022, 14:16:33 IST