அனோஜன் பாலகிருஷ்ணன்
- பாலகிருஷ்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாலகிருஷ்ணன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Annogen Balakrishnan.
அனோஜன் பாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 30, 1992) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் இதழாசிரியர்.
பிறப்பு, கல்வி
அனோஜன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலையில் ஜூலை 30, 1992-ல் சிவகுருநாதன் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒரு அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உடன் பிறந்தவர்கள். பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனினும் கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. அனோஜனின் பதின்ம வயதின் இறுதியில் இலங்கையில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இந்தக் காலகட்டத்தில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள புனித ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். 2012-2016-ம் ஆண்டு கொழும்பில், நார்த்ஷோர் வணிக மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் பயின்றார். 2017-2019-ல் 'சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
தனிவாழ்க்கை
மானெக்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் "பண மோசடி அறிக்கையிடல்" (Money laundering Reporter) அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் சிறுகதையான "இதம்" ஆக்காட்டி மின்னிதழில் 2015-ல் வெளிவந்தது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஜெயமோகன், அ. முத்துலிங்கம், சு. வேணுகோபால், ஷோபாசக்தி, எம். கோபாலகிருஷ்ணன் ஆகியோரைத் தனது ஆதர்சமாக கருதுகிறார். காமம், காமப் பிறழ்வுகள், அதன் உறவுச் சுரண்டல், உளவியல் ஆகியவற்றைப் பேசும் சிறுகதைகளை அதிகம் எழுதியிருக்கிறார். போருக்கு பிந்தைய காலத்தை அதிகமும் கதைகளில் கையாள்கிறார். தமிழர்- சிங்களர் எனும் இருமையை கேள்விக்குள்ளாக்கும் 'பலி', 'யானை', 'பேரீச்சை' போன்ற கதைகள் விவாதத்தை ஏற்படுத்தின.
இதழியல்
2020 செப்டம்பரிலிருந்து "அகழ்" எனும் மின்னிதழை சுரேஷ் பிரதீப் மற்றும் செந்தூரனோடு இணைந்து நடத்தி வருகிறார். தனது நேர்காணலில்[1] 'பெரும்பாலான படைப்புகள் சூடான அரசியல் கருத்துகளோடு மட்டும் நின்று விடுகின்றன. இலக்கியம் அதற்குரிய இடம் அல்ல என்பதை இன்னும் பெரும்பாலானோர் புரிந்துகொள்ளவில்லை. அதைச் சுற்றி எழும் விவாதங்கள் அரசியலை முதன்மைப்படுத்திப் பேசி பரபரப்பை உண்டு செய்து ஓய்கின்றது. அரிதாகவே இலக்கியம் சார்ந்து பேசப்படுகிறது.' என ஈழ இலக்கிய பொதுப் போக்கைப் பற்றியும் அதிலிருந்து வேறுபடும் தனது மாற்றுப்பாதையையும் விளக்குகிறார்.
அமைப்புப்பணிகள்
2019-ல் "லண்டன் இலக்கியக் குழுமம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களில் ஒருவர். இதன் மூலம் நூல் விமர்சன அரங்குகளும், கதை விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார்.
இலக்கிய இடம்
இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் இளைய தலைமுறைப் படைப்பாளியாகிய அனோஜன் பாலகிருஷ்ணன் ஈழ அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களை களமாகக்கொண்டு எழுதுகிறார். சுனில் கிருஷ்ணன் அவரது விமர்சன கட்டுரையில் 'கற்பனாவாத உருவகங்களை கைவிட்டு முன் நகர்ந்திருக்கிறார் தன்னிலை கதைகளில் அகமொழி கூர்மையாக உணர்வுகளை கடத்துகிறது. அவர் அடைந்த கதை தொழில்நுட்ப தேர்ச்சியைக் கொண்டு அவரால் எதையும் கதையாக்கிவிட முடியும்' என குறிப்பிடுகிறார்[2].
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அனோஜனின் சிறுகதைகளை குறித்து[3] 'உறவுகளும் அவை ஏற்படுத்தும் மனநெருக்கடிகளும் அவற்றை மீற எத்தனிக்கும்போது வன்முறையாகவும் தீரா வாதைகளைத் தரும் துயரமாகவும் உருக்கொள்ளும் சித்திரங்கள் அனோஜனின் கதைகளின் ஒருபக்கமாக அமைந்துள்ளது. அதன் மறுபக்கமாக விடுதலைக்கான போர் ஏற்படுத்தும் இழப்புகளும் ராணுவத்தின் அத்துமீறல்களும் போருக்குப் பிறகான நெருக்கடிகளும் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களும் அமைந்துள்ளன' என எழுதுகிறார்.
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு
- சதைகள் - 2016
- பச்சை நரம்பு - 2018
- பேரீச்சை - 2021
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:55 IST