அடைநெடுங்கல்வியார்
அடைநெடுங்கல்வியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
அடைநெடுங்கல்வியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இயல்பாக அடைந்த கல்வியில் நெடிய பயிற்சியுடையவர் என்னும் பொருளை குறிக்கும் காரண பெயரை பெற்றுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
அடைநெடுங்கல்வியார் பாடிய பாடல்கள் புறநானூறில் 283 மற்றும் 344, 345-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. மூன்று பாடல்களிலும் போரினால் ஏற்படும் அழிவுகளை பாடியுள்ளார். புறநானூறு 283-வது பாடல் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இப்பாடல் தும்பைத் திணையில் , பாண்பாட்டு துறையில் அமைகிறது. 344, 345-ம் பாடல்கள் காஞ்சித் திணையில், மகட்பாற் காஞ்சி துறையில் அமைந்தவை. இவ்விரு பாடல்களிலும் திருமணத்திற்குரிய பெண்ணின் பண்பும் அவளை அடைவதற்காக படையெடுத்து வந்துள்ள அரசர்களால் உண்டாகும் போர் காட்சியும் கூறப்பட்டுள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு - 283
- சிவப்பான குரலிப்பூ பூத்திருக்கும் குளத்தைக் கலக்கிக்கொண்டு நீர்நாய் பாய்ந்து வாளைமீனை நாள்தோறும் இரையாகப் பெறும்.
- அழும்பிலன் (அழும்பில்) என்பவன் வலம்புரிக் கோசர் அவைக்களத்தைக் கலங்கும்படிச் செய்தான்.
- அவனது கோட்டைக்கு அமைக்கப்பட்டிருந்த அகழியில் முதலைகள் விடப்பட்டிருந்தன.
- இவனது ஊரில் இருந்த ஆற்றுமணலில் மகளிர் 'தெற்றிப்பாவை' செய்து விளையாடுவர்.
புறநானூறு - 344
- பெண்ணை அடைவதற்கு இரண்டு வழிகள் கைக்கொள்ளப்பட்டன.
- ஒன்று, வளையல்களை நிறைய அணிந்த மகளிர் ஓட்டுவதால், செந்நெல் கதிர்களை உண்ட, அழகிய தோகைகளையுடைய மயில், பறந்து எழுந்து, நீர்த்துறையை அடுத்த மருதமரத்தில் தங்கும் ஊரையும், மிகுந்த அளவில் சிறந்த பொருட்களையும் இவள் தந்தைக்குத் தருவது.
- மற்றொன்று, பகைகொண்டு மிகுந்த அளவில் தீயையும் புகையையும் பரப்பிப் பண்பில்லாத செயல்களைச் செய்வது.
புறநானூறு - 345
- கரிய கண்களையும், விருப்பத்தையுண்டாக்கும் முலைகளையும், மயக்கம் உண்டாக்கும் பார்வையும் உடைய இவளை மணக்க விரும்பி வந்தவர் இரங்கத் தக்கவர். இவள் தமையன்மார், பெண்கேட்டு வந்தவர் தரும் செல்வத்தை விரும்ப மாட்டர்கள்.
- யானையின் பெருமூச்சுப்போல் காற்றை வெளியிடும் உலைத் துருத்தியின் வாயிரும்பு போன்ற இரண்டு கதவுகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடத்தில் இப்பெண் பாதுகாவலாக வைக்கப்பட்டிருக்கிறாள்.
- எமக்கு நிகரில்லாதவர்களுக்கு இவளைத் தரமாட்டோம். என்று கூறி, போர்புரிவதையே விரும்பி, கழிகளால் கட்டப்பட்ட கேடயத்தை ஏந்தி, பகைவர்களுக்குப் புண்களை உண்டாக்கும் வாளோடு, கூட்டமாகக், குருதி நாறும் புலாலுடன் கழுவாத தலையினராய், வலியக் கட்டப்பட்ட காம்பையுடைய நெடிய வேலேந்துவர்.
- போர்புரிவதைத் தம் இயல்பாகக் கொண்ட மறவர்கள் தங்கள் படைக்கருவிகளுடன் வந்து தங்கியதால் நிலம் சுமையைத் தாங்க முடியாமல் நெளிந்தது. யானைகளைக் கட்டுவதால் சோலையிலுள்ள மரங்கள் நிலைகுலைந்தன. தேரோடியதால் தெருக்களில் புழுதிகள் நிரம்பின. குதிரைகள் சுற்றித் திரிவதால் வழிகள் உருத் தெரியாதவாறு மாறின. படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் குழம்பின.
பாடல் நடை
புறநானூறு - 344
- திணை: காஞ்சி
- துறை: மகட்பாற் காஞ்சி
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை,
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து,
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி..................
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 1:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 283:Puram400
- புறநானூறு - 344:Puram400
- புறநானூறு - 345:Puram400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2025, 15:22:56 IST