under review

அங்கதம்

From Tamil Wiki

அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. குற்றங்களைக் கடிந்துரைக்காமல் கேலி மற்றும் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறன் அங்கதத்திற்கு உண்டு. தொல்காப்பியம் அங்கதம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அங்கதம் விளக்கம்

அங்கதம் என்பது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமைவது. அங்கதத்தின் நோக்கம் மென்மையாக இடித்துரைத்துத் திருத்துவது. அங்கதம் நகைச்சுவையுடன் தொடர்புடைய பொருளின், நிகழ்வுகளின் குற்றங்களைச் சுட்டிக்காட்டும். குற்றங்களை, குறைகளை, எதிர்க் கருத்துகளை, நேரடியாக வெளிப்படையாகக் கூறாமல், மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் தன்மை அங்கதத்திற்கு உண்டு. தொல்காப்பியர், அங்கதம் குறித்து,

“அங்கதந் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”

- என செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகை அங்கதங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

செம்பொருள் அங்கதம்

”செம்பொருளாயின் வசையெனப்படுமே” என்கிறது தொல்காப்பியம். ஒருவரது குற்றங்களை வெளிப்படையாகக் கூறுவது செம்பொருள் அங்கதம்.

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

- என்ற திருக்குறள் செம்பொருள் அங்கதத்திற்கு உதாரணம்.

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மாக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன என்பது இதன் பொருள். கேள்வியறிவு பெற நினையாதவர்கள் உலகில் வாழ்ந்தும் வாழாதவர்களே என்ற கருத்து இக்குறள் மூலம் உணர்த்தப்படுகிறது.

பழிகரப்பு அங்கதம்

”மொழி கரந்து சொல்லின் அது பழிகரப்பாகும்” என்கிறது தொல்காப்பியம். வசையை வெளிப்படையாகக் கூறாது மறைமுகமாகக் கூறுவது பழிகரப்பு அங்கதம்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்

- என்ற குறள் பழிகரப்பு அங்கதத்திற்குச் சான்று.

“மூடர்களுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை” என்று திருவள்ளுவர் இக்குறளில் புகழ்வது போல் மறைமுகமாகப் பழித்துள்ளார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கதம்

பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.

கசடர்களைப் புகழும் சிறியோர்களின் செயலை மந்தி மற்றும் நாயுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது விவேகசிந்தாமணி.

”குரங்கு நின்றுகூத் தாடிய கோலத்தைக் கண்டே
அரங்கு முன்புநாய் ஆடிக்கொண் டாடுதல் போல
கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டே
சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் சிறியவர் செய்கை”

என்கிறது விவேகசிந்தாமணி.

குரங்கு ஒன்று அரங்கு ஒன்றில் கூத்தாடுகிறது. அதைக் கண்ட நாய் ஒன்று அதனைப் பார்த்து ரசித்து, தானும் அது போன்று கூத்தாடுகிறது. இது எப்படி உள்ளதென்றால், தங்கள் கைகளை வீசி ஆட்டியபடி பேசிய கசடர்களைக் கண்டு மூடர்கள், தங்கள் தலைகளை அசைத்துப் புகழும் செய்கையை ஒத்திருக்கிறது - என்கிறது விவேகசிந்தாமணி. இப்பாடலில், மந்தியின் செய்கை மடையரின் செய்கையோடு ஒப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கவிதைகளில் அங்கதம்

புதுக்கவிதைகளில் பல்வேறு வகைகளில் அங்கதங்கள் கையாளப்பட்டுள்ளன. அவை தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தனி மனித அங்கதம்

மனிதர்களின் மூடத்தனத்தைச் சுட்டிக்காட்டுவது தனிமனித அங்கதமாகும்.

கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு

- மு.மேத்தாவின் இந்தப் பாடலில், வசதிகள் அமைந்தும் அதனைச் சிறப்புறப் பயன்படுத்தி வாழாமல் பாழாக்கும் மானுடர்களின் தன்மை இடித்துரைக்கப்படுகிறது.

சமுதாய அங்கதம்

சமுதாயத்தில் தனிநபர்களது உடைமைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதைக் கேலி செய்கிறது ஞானக்கூத்தனின் கீழ்காணும் கவிதை.

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !

அரசியல் அங்கதம்

அரசியல்வாதிகள் மக்களை வாக்குப் பதிவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அவலநிலையைச் சுட்டுகிறது. தமிழன்பனின் கீழ்க்காணும் கவிதை.

ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள் !

- என்ற அங்கதக் கவிதை மூலம் ஏழைகள், ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதையும், அப்படி இருந்தால் தான் தங்கள் அரசியல் நடக்கும் என்பதையும் அங்கதச் சுவையுடன் காட்டிச் செல்கிறார்.

நவீன இலக்கியங்களில் அங்கதம்

சிறுகதை, நாடகம் மற்றும் புதினங்களில் அங்கதம் பயன்பாட்டில் உள்ளது. நாஞ்சில் நாடன் செம்பொருள் அங்கதம் என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றைப் படைத்துள்ளார்.

அங்கதக் கட்டுரைகள் பலவற்றை ஜெயமோகன் எழுதியுள்ளார். அங்கதம் குறித்து ஜெயமோகன் “அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது. சாதி, மதம்,தெய்வம் ,அரசாங்கம் அனைத்தையும் நகைச்சுவையாக ஆக்கும் உரிமை இலக்கியத்துக்கு உண்டு என்று உலகமெங்கும் உள்ள நாகரீக சமூகங்கள் அங்கீகரித்துள்ளன.” என்று குறிப்பிடுகிறார்[1].

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page