under review

நின்றசீர் நெடுமாற நாயனார்

From Tamil Wiki
Revision as of 08:14, 26 August 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நின்றசீர் நெடுமாற நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

நின்றசீர் நெடுமாற நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நின்றசீர் நெடுமாறர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். சமண சமயத்தை ஆதரித்தார். மனைவி மங்கையர்க்கரசியார் சிவபக்தை. அமைச்சர் குலச்சிறை நாயனார் சிவ பக்தர்.

நின்றசீர் நெடுமாறர், திருநெல்வேலியில், பகை மன்னர்கள் பலரைப் போரிட்டு வென்றதால் ‘நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்' என்று அழைக்கப்பட்டார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

நின்றசீர் நெடுமாறர், கடும் பிணியால் பாதிக்கப்பட்டார். சமணர்களின் எம்மந்திரத்தாலும் அந்நோய் குணமாகாமல் வருந்தினார். அரசி மங்கையர்க்கரசியாரின் விருப்பத்தாலும், அமைச்சர் குலச்சிறையாரின் முயற்சியாலும் மதுரைக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவரது அருளால் மன்னரின் பிணி நீங்கியது. அதுநாள்வரை அவருக்கிருந்த கூனும் நீங்கியது. ‘கூன் பாண்டியன்’ என்ற பெயர் நீங்கி, ’நின்ற சீர் நெடுமாறன்’ என்ற பெயர் நிலைத்தது.

நின்றசீர் நெடுமாறர், அந்நிகழ்வு முதல் தீவிர சிவபக்தரானார். பல சைவ மடங்களைக் கட்டினார். சிவனடியார்களுக்கு வேண்டும் பொருள் அளித்துச் சிறப்பித்தார். சிவாலயங்களுக்கு வேண்டிய திருப்பணிகளைச் செய்தார். இறுதியில் சிவனின் திருவடிகளை அடைந்தார்.

நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற, நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

நின்றசீர் நெடுமாறர், திருநெல்வேலிப் போரில் ஈடுபட்டது

ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்

நின்றசீர் நெடுமாறர், சிவபக்தர் ஆகிச் சிவத்தொண்டு புரிந்தது

வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கரசியார்
களபம்அணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவு இல் புகழ் பெற விளக்கி அருள் பெருக அரசு அளித்தார்

நின்றசீர் நெடுமாறர், சிவபதம் பெற்றது

திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார்

குரு பூஜை

நின்றசீர் நெடுமாற நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஐப்பசி மாதம், பரணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page