under review

குயில்

From Tamil Wiki
Revision as of 20:11, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kuyil. ‎

குயில்

குயில் (1947-1961) மரபுக்கவிதைக்காக வெளிவந்த கவிதை இதழ். மாதந்தோறும் வெளிவந்தது. கவிஞர் பாரதிதாசன் இதை நடத்தினார்

வெளியீடு

1947-ல் கவிஞர் பாரதிதாசன் இவ்விதழை வெளியிட்டார். குயில் முதல் புத்தகம் 1946 டிசம்பரில் சென்னையிலிருந்து வெளிவந்தது. இரண்டாம் குயில் இதழ் ஜூன் 25, 1947 அன்றும், மூன்றாம் குயில் இதழ் ஆகஸ்ட் 25, 1947 அன்றும் வெளிவந்தன. இரண்டாம், மூன்றாம் குயில் இதழ்கள் டெமி அளவில் விலையுயர்ந்த வழவழப்பான காகிதத்தில் புதுக்கோட்டைச் செந்தமிழ் அச்சகத்தில் ஒரு ரூபாய் விலையில் அச்சிடப்பட்டன. பின்னர் அவ்விரு இதழ்களும் சாதாரணத் தாளில் ஜூலை 1, 1947-லும், செப்டம்பர் 1, 1947-லும் மீண்டும் ஆறணா விலையில் விலைகுறைத்து வெளியிடப்பட்டன.

இவ்வாறாகக் குயில் இதழ் ஜூலை 1, 1947 முதல் அக்டோபர் 1, 1948 வரை மாத வெளியீடாகவும் (திங்கள் இதழாகவும்)புதுவையிலிருந்து மொத்தம் 12 இதழ்கள் வெளிவந்தன. பாரதிதாசன் குயில் இதழை செப்டம்பர் 13, 1948 முதல் அக்டோபர் 12, 1948 வரை நாளிதழாக நடத்தினார். 1948-ல் அப்போதைய சென்னை அரசு குயிலுக்குத் தடைவிதித்தமையால் சிலகாலம் வெளியீடு தடைப்பட்டது. தடைநீங்கிய பின் ஜூன் 1, 1958-ல் குயில் இதழ் மீண்டும் புதுவையிலிருந்து கிழமை இதழாக வெளிவரத் தொடங்கி பிப்ரவரி 7, 1961-ல் நின்று போயிற்று. இவ்விதழில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் பொன்னடியான் போன்றவர்கள் பணியாற்றினர்.

பாரதிதாசன் மறைவுக்குப் பின் அவர் மகன் மன்னர்மன்னன் பாரதிதாசன் குயில் என்ற பெயரில் இக்கவிதையிதழை தொடர்ந்து நடத்தினார்

அரசியல்

பாரதிதாசன் குயில் இதழில் தலையங்கங்களை கவிதை வடிவில் எழுதினார். அவை பொதுவாக மிகக்கடுமையான மொழியில் அமைந்தவை. காங்கிரஸ் தலைவர்களை தீவிரமாகத் தாக்கினார். பாரதிதாசன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தொடங்கிய திராவிடர் கழக ஆதரவாளர். ஆனால் அவரையும் தாக்கி எழுதியிருக்கிறார். சி.என்.அண்ணாத்துரை யை சாதியநோக்கில் தரமற்று விமர்சனம் செய்திருக்கிறார். கவிஞரின் கட்டுப்பாடற்ற வெளிப்பாடுகளாகவே அவருடைய அரசியலும், அது சார்ந்த கவிதைகளும் கட்டுரைகளும் உள்ளன.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது குயில் மூன்று நிலைபாடுகளை முன்வைத்தது

  • இந்திய யூனியனிலிருந்து திராவிட நாடு விடுதலை பெற வேண்டும்.
  • உடனடியாகப் பிரஞ்சு இந்தியா இந்திய யூனியனில் சேரக்கூடாது.
  • இந்திய யூனியனில் சேர மறுத்தபின் அது தன் முழு விடுதலைக்குரியஇடையூறுகளைக் களைந்து கொள்ள வேண்டும்.

(குயில், நாளிதழ், 13.9.48, ப - 2)

இக்காரணத்தால்தான் குயில் தடைசெய்யப்பட்டது. மீண்டும் தொடங்கப்பட்டபோது முழுக்கமுழுக்க அரசியலற்ற கவிதையிதழாக வெளிவந்தது.

பங்களிப்பு

சி.சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் உருவாக்கிய நவீன மரபுக்கவிதை என்னும் வடிவை முன்னெடுத்த இதழ். மரபான யாப்பில் உள்ள எளிய வடிவங்களில் சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும், அரசியல் கருத்துக்களையும் முன்வைப்பது இக்கவிதைகளின் வழிமுறை. பாரதிதாசன் பரம்பரை என்னும் கவிஞர் வரிசை இவ்விதழில் மரபுக் கவிதைகளை எழுதியது. அவர்களின் பங்களிப்பாலும் பாரதிதாசனின் கவிதைகளாலும் குயில் இலக்கியவரலாற்றில் இடம்பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page