வளையாபதி
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி என தமிழின் ஐம்பெருங் காப்பியங்களின் வரிசையில் ஒன்று வளையாபதி. இதனை இயற்றியவர் யார் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதனைக் கொண்டு இந்த நூலை சமண சமயம் சார்ந்த நூலாகக் கருதுகின்றனர். இதன் ஏட்டுப் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இதனைப் பதிப்பிப்பதற்காகத் தேடியபோது அந்தப் பிரதி கிடைக்கவில்லை என்று உ.வே. சா. பதிவு செய்துள்ளார்.
நூல் வரலாறு
வளையாபதியை இயற்றியவர் யார், இதன் காலம் என்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இயலவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இக்காப்பியத்தின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர். இக்காப்பியத்தில் இடம் பெற்றிருக்கும் 66 பாடல்கள் புறத்திரட்டு நூலில் தொகுப்பட்டுள்ளன. இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி இரண்டு கிடைத்துள்ளன.
இதன் நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. சமண சமயம் சார்ந்தவர் என்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
காப்பியத்தின் கதை
வளையாபதி கதையைக் கிடைத்திருக்கும் பாடல்கள் மூலம் முழுமையாக அறிய இயலவில்லை. ஆனால், 'வளையாபதி’ கதை என்பதான ஒரு கதை வழக்கில் உள்ளது. நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணை மண முடிக்கிறான். கூடவே வேறு குலம் சார்ந்த பெண்ணையும் மணம் செய்துகொள்கிறான். ஆனால் சுற்றத்தாருக்கு அஞ்சி, கர்ப்பிணியாக உள்ள அப்பெண்ணை விலக்கி வைக்கிறான்.
அதனால் மனம் வருந்திய அப்பெண் காளி தேவியைச் சரணடைகிறாள். காளி தேவியின் அருளால் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிப் புகார் நகர வணிகர்களின் சபையில் 'தன் தந்தை நாராயணனே’ என்பதை நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி அதனை மெய்ப்பிக்கிறாள். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதுவே 'வளையாபதி’யின் கதையாக வழக்கில் உள்ளது.
பாடல் நடை
பல்வேறு அறக்கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
வினைபல வலியி னாலே வேறுவேறு யாக்கை யாகி
நனிபல பிறவி தன்னுள் துன்புறூஉம் நல்லு யிர்க்கு
மனிதரின் அரியதாகும் தோன்றுதல் தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்ன தேயாம்
உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்துஒரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர்
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ
பொருள்இல் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருள்இல் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருள்இல் புலவர் மனம்கொண்டு உரைப்ப
- போன்ற பாடல்களில் பல்வேறு நீதிக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
உசாத்துணை
- வளையாபதி தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்
- வளையாபதி மூலமும் உரையும்
- வளையாபதி: சென்னை நூலகம்
- வளையாபதி: தினமணி கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Aug-2023, 00:44:34 IST