being created

பூவண்ணன்

From Tamil Wiki
Revision as of 00:59, 15 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முனைவர் பூவண்ணன்

பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

வே.தா. கோபாலகிருஷ்ணன் என்னும் இயற்பெயர் கொண்ட பூவண்ணன்,  5 செப்டம்பர் 1932 அன்று, சென்னையின் சிந்தாதிரிப்பேட்டையில், வே.தாமோதரம்-லட்சுமிகாந்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். உடன் பிறந்தோர் ஐவர். தந்தை தச்சுத் தொழில் செய்து வந்தார். பூவண்ணனின் மூத்த சகோதரர் பாபு தமிழ்ப்பற்றால் தன்னுடைய பெயரை ‘பால்வண்ணன்’ என்று மாற்றிக் கொண்டார். அந்த ஈர்ப்பால், வே.தா. கோபாலகிருஷ்ணன், ‘பூவண்ணன்’ ஆனார்.

தொடக்கக் கல்வியை மாநகரட்சிப் பள்ளியில் பயின்றார். உயர்கல்வியை வேப்பேரி திருவொற்றீஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலை வகுப்பு (இண்டர்மீடியட்) பயின்றார். தொடர்ந்து பயின்று பி.ஏ.ஹானர்ஸ் (தமிழ்) பட்டம் பெற்றார். பேராசிரியர், டாக்டர் ரா. சீனிவாசனின் மேற்பார்வையில் ‘கல்கியின் வரலாற்று நாவல்கள்’ என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பூவண்ணன், விவேகானந்தா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1959-ல் திருமணம் நிகழ்ந்தது. மனைவி வத்சலாதேவி, ஓர் எழுத்தாளர். இவர்களுக்கு அமுதா, சாதனா என இரண்டு மகள்; ஒரே மகன், ரவி. பூவண்னன், 1964-ல்,  சென்னை வைணவக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1982 முதல் 1986 வரை கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

எம்.ஜி. ஆர். இடம் விருது பெறும் பூவண்ணன்

இலக்கிய வாழ்க்கை

பூவண்ணன், சிறு வயதில் வாசித்த ஆனந்தவிகடன், பிரசண்ட விகடன் போன்ற இதழ்கள் மூலம் எழுத்தார்வம் உண்டானது. இல்லத்தில் நடக்கும் வள்ளலார் பற்றிய கூட்டத்திற்கு வருகை தந்த தமிழறிஞர் இளவழகனார், பூவண்ணனுக்கு ‘திருவருட்பா’ நூலைப் பரிசாக அளித்தார். அதை வாசித்ததன் மூலமும், கல்கியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ’சிவகாமியின் சபதம்’ போன்ற நூல்களைப் படித்ததன் மூலமும் இலக்கிய ஆர்வம் மேம்பட்டது. பாட்டி சொன்ன செய்தியை அடிப்படையாக வைத்து கைப்பலகையில் (சிலேட்) ஒரு கதையை எழுதினார். அதுதான் முதல் முயற்சி. பிற்காலத்தில் தினமணிகதிரின் ‘முதல் பிரசவம்’ என்ற பகுதியில் அச்சிறுகதை ’பலகையில் ஒரு கதை’ என்ற தலைப்பில் பிரசுரமானது.

பள்ளியில் உடன்பயின்ற நண்பர் எத்திராஜன், பூவண்ணனை எழுத ஊக்குவித்தார். அவரது ஊக்குவிப்பில், ‘வாரீர் விரைந்து’ என்னும் தலைப்பிலான முதல் கட்டுரை, 1949-ல், ‘குஞ்சு’ என்ற சிறார் இதழின் பொங்கல் மலரில் வெளியானது. ‘மாலை நேரத்திலே..’ என்ற முதல் கவிதை, ’மான்’ இதழில், 1949-ல் வெளியானது. முதல் சிறுகதை, ’அன்பிற்கும் உண்டோ?’ புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பாலர் மலரில் வெளியானது.

எத்திராஜன் மூலமாக குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் பூவண்ணனை எழுதத் தூண்டினார். வள்ளியப்பா தந்த ஊக்குவிப்பால், டமாரம்‌, சங்கு, பூஞ்சோலை போன்ற இதழ்களில் கதைகள், தொடர்கதைகள் எழுதினார். குழந்தை எழுத்தாளர் சங்கம் 1955-ல் அறிவித்த நாடகப் போட்டிக்காக நாடகம் ஒன்றை எழுதினார் பூவண்ணன். ’உப்பில்லாத பண்டம்’ என்னும் அந்நாடகம் முதல் பரிசு பெற்றது.  




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.